கிறிஸ்தவர் ஒருவர் சிறிய கடை ஒன்றை நடத்தினார். தன்னுடைய விசுவாசத்தை வெளிப்படுத்துவதில் எப்போதும் முனைப்புடன் இருப்பார். அவருடைய கடையில் எப்பொழுதும் கிறிஸ்தவ பாடல்கள் ஒலித்துக் கொண்டேயிருக்கும். அதுபோல சில கிறிஸ்தவ இலக்கியங்களையும் அடுக்கி வைத்திருப்பார். புதிய ஏற்பாடு ஒன்றையும் கேட்பவர்களுக்கு கொடுக்கும் வகையில் தயார் நிலையில் வைத்திருப்பார். உள்ளூர் சபை ஒன்றிலும், சுறுசுறுப்பாக செயல்படும் உறுப்பினர். ஒரு நாள் அதிகாலையில் அவரது கடையில் பரபரப்பு ஏற்பட்டது. எப்போதும் உற்சாகமாக இருக்கும் கடைக்காரர் ஆக்ரோஷமாக கத்திக் கொண்டிருந்தார்; “விதவையாகிய நீ எதற்காக என் கடைக்கு அதிகாலையில் வருிறாய், அபசகுனம் அபசகுனம், முதலில் வெளியே போ; எனது முதல் வாடிக்கையாளராக நீ இருப்பதை நான் விரும்பவில்லை". ஆக இந்த கடைக்காரர் மாய்மாலமானவன், வெளித்தோற்றத்தில் பக்திவேஷம் ஆனால் சுவிசேஷத்தின் மூலம் வரும் எந்த மாற்றத்தையும் கொண்டிருக்கவில்லை.
1) வேத அறிவு இல்லாமை:
"அவர் திக்கற்ற பிள்ளையையும் விதவையையும் ஆதரிக்கிறார்" (சங்கீதம் 146:9). ஆம், நாம் வணங்கும் தேவன் விதவைகளை ஆதரிப்பவர். எனவே, அவருடைய பிள்ளைகளும் விதவைகளைப் பாதுகாத்து மற்றும் விசாரித்து அவர்களுக்கான தேவைகளை சந்திக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யாக்கோபு உண்மையான ஆவிக்குரிய வாழ்வை இவ்வாறு வரையறுத்தார்: "திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது" (யாக்கோபு 1:27).
2) சபை வரலாறு:
அந்த கடையின் உரிமையாளனுக்கு சபை வரலாறு தெரியவில்லை. பண்டித ரமா பாய் விதவைகளின் கண்ணியம் மற்றும் உரிமைகளுக்காகப் போராடியவர். வில்லியம் கேரி, விதவைகளை அவர்களது கணவர்களின் சடலங்களுடன் எரிக்கும் சதி என்னும் உடன்கட்டை ஏறுதல் என்ற கொடூரமான நடைமுறையை எதிர்த்துப் போராடியவர், அதில் வெற்றியும் கண்டவர்.
3) கலாச்சாரமா அல்லது வேதமா:
அந்த கடையின் உரிமையாளன் வெளிப்புறத் தோற்றத்தில் ஒரு கிறிஸ்தவனாக இருந்தார். இருப்பினும், உலகக் கண்ணோட்டம், எண்ணங்கள் மற்றும் அணுகுமுறையில் அவரிடம் மாற்றம் இல்லை. மூடநம்பிக்கை சமூகமானது விதவையை கணவனை விழுங்கிய பேயாக அல்லது பேய் பிடித்தவளாக கருதுகிறது. எனவே, பரிதாபத்துக்குரிய பெண் புறக்கணிக்கப்படுகிறாள், கேலி செய்யப்படுகிறாள், ஓரங்கட்டப்படுகிறாள், தாழ்த்தப்படுகிறாள் மற்றும் வீட்டை விட்டு வெளியேற்றப்படுகிறாள்.
ஒரு மூத்த அருட்பணித் தலைவர், அவர் ஒரு விதவை என்பதால் கண்ணியமாக நடத்தப்படுவதில்லை, ஆதலால் தான் திருமணங்களில் கலந்து கொள்வதில்லை என்றார். மக்கள் அவரை வீடு தேடி வந்து விழாக்களுக்கு அழைக்கிறார்கள், ஆனால் அவர் அதை மதித்து அந்த இடத்திற்குச் செல்லும்போது அங்கு வித்தியாசமாக நடத்தப்படுகிறார்.
ஒவ்வொரு காலையிலும் ஒரு சில விதவைகளை முதல் வாடிக்கையாளர்களாக வரவழைப்பதன் மூலம் கடைக்காரர் நற்செய்தியின் விழுமியங்களை (மதிப்புகளை) உலகுக்கு எடுத்துக்காட்டியிருக்கலாம்.
என்னுடைய அன்றாட வாழ்வில் நான் வேதத்தை பின்பற்றுகிறேனா? அல்லது கலாச்சாரத்தை பின்பற்றுகிறேனா?
Author : Rev. Dr. J. N. Manokaran