தலித் சமூகத்தைச் சேர்ந்த அசோக் சாகேத் என்ற தொழிலாளி தனக்கு நிலுவையில் உள்ள கூலியைக் கேட்டார். ஆதிக்க சாதியைச் சேர்ந்த எஜமானர் கோபமடைந்து தனது சகோதரர்களை அழைத்தார். மத்தியப் பிரதேச மாநிலம், ரேவா மாவட்டத்தில் உள்ள டோல்மாவ் கிராமத்தில் அவர்களில் 3 பேர் கும்பலாக சேர்ந்து அத்தொழிலாளியின் கையை வெட்டினார்கள் (நவம்பர் 21, 2021). தாங்கள் தான் பெரியவர்கள் மற்றும் மேலானவர்கள் என்ற எண்ணம் கொண்டதால் இவர்கள் சர்வாதிகார எண்ணத்துடனும், சுரண்டல் மனப்பான்மையுடனும் மற்றும் கொடுமையான முறையிலும் மற்றவர்களிடம் நடந்து கொண்டனர்.
1) தினசரி ஊதியம்:
"அவன் வேலைசெய்த நாளில்தானே, பொழுதுபோகுமுன்னே, அவன் கூலியை அவனுக்குக் கொடுத்துவிடவேண்டும்; அவன் ஏழையும் அதின்மேல் ஆவலுமாயிருக்கிறான்; அதைக் கொடாவிட்டால் அவன் உன்னைக் குறித்துக் கர்த்தரை நோக்கி முறையிடுவான்; அது உனக்குப் பாவமாயிருக்கும்" (உபாகமம் 24:15). மோசே நியாயப்பிரமாணம் தினசரி அல்லது தேவையான நேரத்தில் கூலி கொடுக்க கட்டளையிடுகிறது. ஏழைகள் தனது வாழ்வாதாரத்திற்காக இதை நம்பியிருப்பதால், அவர்களை துக்கப்படுத்துவது என்பது தடைசெய்யப்பட்டுள்ளது.
2) மறுக்கப்பட்ட ஊதியம்:
"தன் அயலான் செய்யும் வேலைக்குக் கூலிகொடாமல் அவனைச் சும்மா வேலைகொள்ளுகிறவனுக்கு ஐயோ!" (எரேமியா 22:13). இலவசமாக வேலை வாங்கி மற்றவர்களைச் சுரண்டுபவர்கள் பலர் உள்ளனர். குடும்பங்களில் கூட விதவைகள், மாற்றான் பிள்ளைகள் அல்லது அனாதைகள் சுரண்டப்படுகிறார்கள். குறிப்பிட்ட சாதியினர், தாழ்த்தப்பட்டதாகக் கருதும் பிற சாதியினரை இலவசமாக வேலை வாங்கி சுரண்டுகின்றனர்.
3) தாமதமான ஊதியம்:
ஊதியம் வழங்காமல் காலதாமதம் செய்து தொழிலாளர்களை ஒடுக்கும் சில நிறுவனங்களும் உள்ளன. "கூலிக்காரரின் கூலியை அபகரித்துக்கொள்ளுகிறவர்களைக் கர்த்தர் நியாயந்தீர்ப்பார்" (மல்கியா 3:5).
4) குறைக்கப்பட்ட ஊதியம்:
கார்ப்பரேட் நிறுவனங்களிலும் ஊதியம் இல்லாமல் கூடுதலான நேரம் வேலை வாங்கியும் அல்லது அதிகப்படியான வேலை அளித்தும் கடினப்படுத்துகின்றனர்.
5) ஏமாற்றப்பட்ட ஊதியம்:
"இதோ, உங்கள் வயல்களை அறுத்த வேலைக்காரருடைய கூலி உங்களால் அநியாயமாய்ப் பிடிக்கப்பட்டுக் கூக்குரலிடுகிறது; அறுத்தவர்களுடைய, கூக்குரல் சேனைகளுடைய கர்த்தரின் செவிகளில் பட்டது" (யாக்கோபு 5:4). ஊதியம் பெறுபவர்கள் கல்வியறிவற்றவர்களாக இருக்கலாம் அல்லது சட்டங்கள் அல்லது ஒப்பந்தங்களைப் பற்றிய அறிவு இல்லாதவர்களாக இருக்கலாம், அவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள்.
6) வஞ்சிக்கும் ஊதியம்:
லாபான் தனது மாறுகின்ற மனநிலைக்கு ஏற்ப பத்து முறை கூலியை மாற்றினான், அது யாக்கோபை விரக்தியடையச் செய்தது (ஆதியாகமம் 31:7).
7) தள்ளுபடியாகும் ஊதியம்:
சில எஜமானர்கள் தங்களின் சொந்த பிரச்சனைகள் நிமித்தம் அல்லது வேறு சில வேடிக்கையான காரணங்களைக் கூறி ஊதியத்தை குறைக்கிறார்கள்.
"எஜமான்களே, உங்களுக்கும் பரலோகத்தில் எஜமான் இருக்கிறாரென்று அறிந்து, வேலைக்காரருக்கு நீதியும் செவ்வையுமானதைச் செய்யுங்கள் என்று பவுல் எச்சரிக்கிறார்" (கொலோசெயர் 4:1).
என்னிடம் வேலை செய்யும் நபர்களுக்கு நான் மகிழ்ச்சியுடன் கூலி கொடுக்கிறேனா? சிந்திப்போமே.
Author: Rev. Dr. J .N. மனோகரன்