இஸ்ரவேல் வரலாற்றில் சீலோவும் எருசலேமும் முக்கியமான இடங்கள். சீலோ கிட்டத்தட்ட 400 ஆண்டுகளாக மதத்திற்கான மையமாக இருந்தது, அங்கு கூடாரமும் உடன்படிக்கைப் பேழையும் இருந்தன. ஒருமுறை மேசியாவைப் பற்றியும் மற்றவை அந்த இடத்தைப் பற்றியும் என சீலோ 32 முறை குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நகரம் முதலில் பெலிஸ்தியர்களாலும், மீண்டும் அசீரியர்களாலும் அழிக்கப்பட்டது (1 சாமுவேல் 4; சங்கீதம் 78:58-60). நபர், வாக்குத்தத்தம் மற்றும் இடம் என ஆகிய மூன்று கண்ணோட்டங்களிலிருந்து சீலோவைப் புரிந்து கொள்ள முடியும்.
நபர்:
முதல் குறிப்பாக யாக்கோபு தனது மகன்களை ஆசீர்வதித்த போது, சீலோ வரும்வரைக்கும் செங்கோல் யூதாவைவிட்டு நீங்குவதும் இல்லை, ஆளுகை அவனுடைய பாதங்களைவிட்டு ஒழிவதும் இல்லை; மக்கள் அவரிடத்தில் சேருவார்கள் என்றார். யாக்கோபு தீர்க்கதரிசனமாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவான மேசியாவைக் குறிப்பிடுகிறார். ஆட்சியாளரான மேசியா அனைத்து நாடுகளாலும் மதிக்கப்படுவார். அவர் புறஜாதிகளை ஆளுவார் (ரோமர் 15:12).
வாக்குத்தத்தம்:
சீலோ என்ற பெயர் ஷாலாவில் இருந்து பெறப்பட்டது, இது செளகரியம் என பொருள்படும். அதாவது சமாதானத்தை அளிப்பவர் என்பதாகும். இதன் பொருள் சரியான மேசியா அல்லது நீதியின் மேசியாவாக இருக்கலாம் (எசேக்கியேல் 21:27). கர்த்தர் தாமே நம்முடைய சமாதானம் என்று பவுல் எழுதுகிறார் (எபேசியர் 2:14). ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, உலகத்தால் கொடுக்கவோ, பறிக்கவோ முடியாத சமாதானத்தைக் கொடுப்பதாக வாக்குறுதி அளித்தார் (யோவான் 14:27).
இடம்:
இஸ்ரவேல் வாக்களிக்கப்பட்ட தேசத்தில் நுழைந்தது முதல் சாமுவேல் தீர்க்கதரிசியின் காலம் வரை, இது அனைத்து கோத்திரத்தாருக்கும் மையமாக இருந்தது. இங்கே அன்னாள் வந்து, ஜெபித்து, சாமுவேலைப் பெற்றாள், அவனை தேவனின் ஊழியத்திற்காக அர்ப்பணித்தாள் (1 சாமுவேல் 1:1-28; 3:21). உள்நாட்டுப் போரில் பென்யமீன்கள் அழிக்கப்பட்டபோது, மீதமுள்ள பென்யமீன் புத்திரர்கள் சீலோவில் இருந்து விருந்தில் நடனமாடும் பெண்களை அழைத்து வர அறிவுறுத்தப்பட்டது (நியாயாதிபதிகள் 21:19). தேவன் சீலோவை நியாயந்தீர்த்ததையும், அது பாழடைந்து கிடப்பதையும் எரேமியா இஸ்ரவேலுக்கு நினைப்பூட்டினார் (எரேமியா 7:12). தேவ கட்டளைக்கு எதிராக, தேவனின் ஆலயத்தை அல்லது உடன்படிக்கைப் பெட்டியை வைத்திருப்பது உத்தரவாதம் அளிக்காது. இதேபோல், தேவன் எருசலேமை நியாயந்தீர்த்தார், சாலொமோன் கட்டிய ஆலயம் அழிக்கப்பட்டது, பின்னர் கி.பி. 70ல் மீண்டும் அழிக்கப்பட்டது.
முக்கியத்துவம்:
தேவன், அவருடைய பெயர் மற்றும் அவருடைய வார்த்தைகள் (வாக்குறுதிகள்) பரிசுத்தமானவை மற்றும் முக்கியமானவை. அவர்கள் நிராகரிக்கப்படும்போது, தேவன் அந்த இடத்தை நிராகரிப்பார், அவருடைய மகிமை அந்த இடத்தை விட்டு வெளியேறும்.
நான் தேவனுக்கும் அவருடைய வார்த்தைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்