யோசேப்பு முன் ஒரு தேவதூதன் தோன்றி, "வா, நான் உன்னை எகிப்துக்கு அழைத்துச் செல்வேன், நீ பார்வோனின் தலைமை அதிகாரியாக (ஆலோசகராக) மாறுவாய்" என்றது. அநேகமாக யோசேப்பு அதற்கு மறுமொழியாக; "ஆ; நான் ஏன் வர வேண்டும்? நான் என் தந்தைக்கு மிகவும் பிடித்தமானவன். இங்கு நான் சௌகரியமாகவும், மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் இருக்கிறேன், நான் வரமாட்டேன்” என பதிலளித்திருக்கக்கூடும். தேவன் யோசேப்பை வேறு வழியாக அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது; ஆம், போத்திபாரின் வீடு, சிறை, படுகுழி பின்னர் அரண்மனை என யோசேப்பின் வாழ்க்கை அமைந்தது. தேவன் யோசேப்பை வேறு பாதையில் அழைத்துச் செல்லாமல் இருந்திருந்தால், யோசேப்பும் தனது சகோதரர்களைப் போலவே எகிப்தில் ஒரு மேய்ப்பனாக முடிவடைந்திருப்பான் (ஆதியாகமம் 46:34).
1) அடிமை:
யோசேப்புக்கு இது ஒரு வித்தியாசமான புதிய இடம். மொழி, கலாச்சாரம், உணவு மற்றும் சூழல் கடினமாகவும் விரோதமாகவும் இருந்தன. யோசேப்பு அந்த காலக்கட்டத்தை தன்னைத் தயார்படுத்திக்கொள்ளவும், மொழியை விரைவாகக் கற்றுக்கொள்வதன் மூலமும், விஷயங்களை நிர்வகிக்கவும், பணியாளர்கள் மற்றும் முழு நிர்வாகத்தையும் கையாளவும் தனக்கு கிடைத்த வாய்ப்பாக பயன்படுத்தினான் (ஆதியாகமம் 39: 4). மேலும் யோசேப்பு தன்னை பரிசுத்தமானவன் என்பதையும் நிரூபித்தான், போத்திபாரின் மனைவியிடம் மயங்காமல் அந்த இடத்தை விட்டே தப்பி ஓடினான் (ஆதியாகமம் 39:12).
2) அரசு சிறை:
பொய்யான குற்றச்சாட்டுகளினால் அவன் சிறையில் அடைக்கப்பட்டான். அந்த சிறையிலும் அவன் எப்போதும் போல அனைவரிடமும் அதாவது பார்வோனின் முன்னாள் வேலையாட்களாக இருந்த உடன் சிறைக் கைதிகளிடம் நட்பாக பழகினான். அதன் மூலம் அவர்களிடமிருந்து அவன் முழு எகிப்திய சாம்ராஜ்யத்தின் நிர்வாகத்தைப் பற்றி கற்றுக்கொண்டான். "அவன் கால்களை விலங்குபோட்டு ஒடுக்கினார்கள், அவன் பிராணன் இரும்பில் அடைபட்டிருந்தது. கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறுமளவும் அவருடைய வசனம் அவனைப் புடமிட்டது" (சங்கீதம் 105: 18,19).
3) ஆழ்குழி:
யோசேப்பு தனது அழைப்பை சிறையில் கூட கண்டுபிடிக்கவில்லை. அவன் தனது நண்பனான உடன் கைதியிடம், தன்னை விடுவித்து வீடு திரும்புவதற்கு பார்வோனிடம் பேசும்படி கேட்டான் (ஆதியாகமம் 40:14-15). உண்மையில் சொல்லப்போனால், அவனுக்கு தன் தகப்பன் வீட்டிற்கு செல்ல வேண்டும் (home sick) என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது. இப்படியாக இரண்டு வருடங்கள் கழிந்தது, தேவ நோக்கம் அவனுக்கு புரிய ஆரம்பித்தது. அதாவது பூமியிலே இஸ்ரவேல் வம்சம் ஒழியாமலிருக்க அந்த ஜனங்களை ஆதரிக்கிறதற்காகவும், பெரிய இரட்சிப்பினால் அனைவரையும் உயிரோடே காப்பதற்காகவும், பின்னர் அவர்கள் பெரிய தேசமாக உருவெடுப்பார்கள் என்றும் அதிலிருந்து தான் மேசியா வருவார் என்றும், அதற்காக தான் தேவன் தன்னை முன்னமே அனுப்பியுள்ளார் என்பதை உணர்ந்தவனான்.
4) அரண்மனை:
பின்பு யோசேப்பு பார்வோனின் அரண்மனையில் ஒரு பொருளாதார நிபுணராக, பார்வோனின் தலைமை ஆலோசகராக முடிந்தது. யோசேப்பிற்கு பொது நிர்வாகம், அரண்மனை நிர்வாகம் மற்றும் பேரரசு நிர்வாகம் என்பதையும் சேர்த்து ஏழு வருட பஞ்ச காலத்தின் போது ஜனங்களின் வாழ்வாதாரத்தையும் ஜீவனையும் காத்துக் கொண்டவனான்.
உபத்திரவக் காலம் என்பது தேவன் தனது பிள்ளைகளை உபயோகமான பாத்திரமாக தயார்படுத்தும் முறையாகும்.
என் துன்பங்களிலிருந்து நான் பாடம் கற்றுக் கொள்கிறேனா?
Author : Rev. Dr. J. N. Manokaran