கேரளாவைச் சேர்ந்த மிஷனரி ஒருவர் வட இந்தியாவில் பணியாற்றினார்; பள்ளி மற்றும் சபைகள் கட்டுவதற்கு நிலம் வாங்க விரும்பினார். இருப்பினும், நிலத்தை வாங்குவதற்கு அவரிடம் பணம் இல்லை, ஆனால் தேவன் மீது விசுவாசமும் தேவனிடமிருந்து ஒரு உறுதிப்பாடும் இருந்தது. பின்பு நிலத்தைத் தேடி, உரிமையாளரிடம் பேசி விலையைத் தீர்மானித்தார். மிஷனரி வங்கிக்குச் சென்று கடன் கேட்டார். வங்கி மேலாளர் அவரிடம்; "நீங்கள் ஒரு மிஷனரியா?" என்று கேட்டதும், அடடா தான் மிஷனரி என்பதால் இனி வங்கிக் கடன் கிடைக்காது என்று நினைத்துக் கொண்டார்; ஆனால் வங்கி மேலாளர் மிஷனரியின் வீட்டிற்கு வந்து அவருடன் பேசுவதாக கூறினார்.
பின்னதாக வங்கி மேலாளர் மிஷனரியின் வீட்டிற்கு வந்தார்; மிஷனரியிடம் தன் கடந்த கால கதையை மேலாளர் சொல்ல ஆரம்பித்தார்; “நான் சிறுவனாக இருந்தபோது என் பெற்றோரை இழந்தேன். உண்மையில், நான் ஒரு அனாதை மேலும் அனைவராலும் கைவிடப்பட்டவன்; சிறுவயதிலே பிச்சையெடுத்தேன். அப்போது ஒருநாள் ஒரு மிஷனரி என்னைக் கண்டு அழைத்துச் சென்று, உணவளித்து, ஆடை அணிவித்து, பள்ளிக்கு அனுப்பினார். இன்று, நான் ஒரு வங்கி மேலாளராக இருக்கிறேன், மேலும் குழந்தைகளுக்கு உதவ மிஷனரிகளை நான் தேடுகிறேன்", என்றார். பின்னர் வங்கி மேலாளர் நில உரிமையாளரிடம் நிறுவனம் பெயரில் சொத்து பத்திரம் செய்து தருமாறு கேட்டுக்கொண்டார், பின்னர் பதிவு பத்திரத்தை வங்கியில் அடமானம் வைத்து, இரண்டு மாதங்களுக்கு பிறகு நிலத்திற்கான பணமும் செலுத்தப்பட்டது.
நீதியான செயல்:
லூக்கா 3:11ல் கூறப்பட்டது போல் உணவைப் பகிர்ந்து கொள்வது என்பது ஒரு நியாயமான செயல் (லூக்கா 3:11). கர்த்தராகிய இயேசு தம்முடைய சீஷர்களுக்குப் பகிர்ந்துகொள்ளவும், தியாகம் செய்யவும் கற்றுக்கொடுத்தார்.
தாராளமான செயல்:
தாராள மனப்பான்மையுள்ள மனிதன் ஏழைகளுக்கு உணவளிப்பான் (நீதிமொழிகள் 22:9). பெருந்தன்மை என்பது தேவனுடைய சீஷனின் அடையாளம்.
ஆவிக்குரிய செயல்:
"பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும், வஸ்திரமில்லாதவனைக் கண்டால் அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்கு உகந்த உபவாசம்". ஆம், ஏசாயா, எசேக்கியேல் போன்ற தீர்க்கதரிசிகள் பசித்தவர்களுக்கு உணவளிக்க மக்களுக்கு அறிவுரைத்தனர் (ஏசாயா 58:7,10; எசேக்கியேல் 18:7).
இரக்கமுள்ள செயல்:
தேவனுடைய மக்களின் தராதரங்கள் மிக உயர்ந்தவை. எதிரிகளாக இருப்பவர்களிடம் கூட இரக்கம் காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிரிகளுக்கும் உணவளிக்க வேண்டும் என்று வேதாகமம் கற்பிக்கிறது (நீதிமொழிகள் 25:21; ரோமர் 12:2).
பாராட்டுக்குரிய செயல்:
"பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்" (மத்தேயு 25:35). தமிழ்நாடு அரசு செப்டம்பர் 15, 2022 முதல் அரசுப் பள்ளிகளில் காலை உணவை அறிமுகப்படுத்தியுள்ளது (தி டைம்ஸ் ஆஃப் இந்தியா செப்டம்பர் 15, 2022). நற்செய்தி சமுதாயத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதற்காக தேவனைத் துதிப்போம்.
பசித்தவர்களுக்கு நான் உணவளிக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்