கோடைவெயில் கடுமையாக இருந்தது. தோளில் நற்செய்தி புத்தகங்களும், துண்டுப் பிரதிகளும், அடங்கி பை தொங்கிக் கொண்டிருக்க, மத்தியபிரதேசத்திலுள்ள பஸ்தி நகரின் அகன்ற சாலையில் நடந்து கொண்டிருந்தான் இளைஞன் ஜான் களைப்பு மேலிட்டாலும், இன்னும் யாராவது ஒருவர் கிடைக்க மாட்டார்களா? இயேசுவைப் பற்றி அறிவிப்போம் என்ற ஆத்ம தாகம் பொங்கி வழிந்தது. அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் நெருங்கவும் கண்ணியமான ஓரு மனிதர் எதிர்படவும் சரியாக இருந்தது. துண்டுப் பிரதி ஒன்றை முகமலர்ச்சியோடு நீட்டினான். வாங்கியவர் படித்தார். ஏற இறங்கப் பார்த்தார். அவனைப்பற்றி விசாரிக்க ஆரம்பித்தார். அவருடைய பேச்சிலிருந்த கனிவு ஜானுக்கு அதிக உற்சாகமளிக்கவே, தன்னை பற்றி சுருக்கமாகக் கூறியவன், இயேசுவின் தியாகத்தைப் பற்றியும் அவர் அன்பைப் பற்றியும் மடைதிறந்து வெள்ளமென பேச ஆரம்பித்தான். அவனை இடைமறித்தார் வந்தவர்.
தம்பி ! இந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் நான் உள்ளே போய் பேசலாமே” அன்பொழுக அழைத்தார் ஜானுக்கு அதிக மகிழ்ச்சி! அவரைப் பின்தொடர்ந்து உள்ளே சென்றான். ஆசிரியர் ஓய்வெடுக்கும் அறையில் நுழைந்தனர். இருஆசிரியைகள் அறையின் ஓரத்தில் அமர்ந்திருந்தனர்!
“உட்கார்” அதிகாரக்குரல் பிறந்தது. தலைமை ஆசிரியரிடமிருந்து! திகைத்தான் ஜான். தேனாய் பேசியவர் தீயாய் மாறியதை உணர்ந்தான்.
உனக்கு வெட்கமாகயில்லை.? இப்படித் தெருத்தெருவாக அலைவதற்கு இதற்கு நீ பிச்சையெடுத்து பிழைக்கலாமே உன் நாடு இந்தியா, இந்தியாவில் எத்தனை சாமிகள் இருக்கு. அதில் ஏதாவது ஒன்றை கும்பிடேன். வெள்ளைக்காரன் சாமிதான் உனக்குக் கிடைத்ததா”? கர்ஜித்தார்.
ஐயா! இயேசு சாமி வெளைக்காரன் சாமியல்ல! இந்த உலகையே மீட்க வந்த ஒரே தெய்வம்! அன்புள்ள தெய்வம்! அவர் ஒருவர் தானய்யா கடவுள்” பணிவோடு பதிலிறுத்தான்.
“மடப்பயலே! வெள்ளைக்காரன் பணம் அனுப்புகிறான். நீ இங்கசுத்தற'' எரிந்து விழுந்தார்.
“இல்லை ஐயா! அந்நியநாட்டு பணத்தை வைத்து இதை நடத்தவில்லை. இந்தியர்களுடைய உதவி தான். எங்களுக்கென்று ஒரு நிறுவனம் இருக்கிறது. அதில் எங்களுக்கு சம்பளம் கொடுப்பார்கள். எல்லாரும் மெய் தெய்வமாகிய இயேசுவை அறிய வேண்டுமென்ற ஆசையால்தான் வந்திருக்கிறேன் ”
நிறுத்தடா! அந்தப் பையில் என்ன வைத்திருக்கிறாய்? உறுமியபடி பையை பலாத்காரமாகப் பறித்து அறையில் வீசியெறிந்தார் கதவு, ஜன்னல்களை அடைத்தார் ஏதோ? விபரீதம் நடக்கப் போகிறதென உணர்ந்தான் ஜான் எழுந்து நின்று கொண்டான் ஒரு தடியை எடுத்து வந்து, அவனை நையப் புடைத்தார்.
“இந்த வேலையை விட்டு விட்டு ஓடுகிறாயா? இல்லையா? கேட்டுக் கொண்டே அடித்தார். ஆசிரியைகள் அதிர்ச்சி அடைந்தாலும், இடத்தை விட்டு நகரவும் இல்லை, ஒரு வார்த்தையும் கூறவுமில்லை. அந்த இளைஞனுக்கு எங்கிருந்து தான் துணிவு பிறந்ததோ
“என்னிமித்தம் உங்களை நிந்தித்துத்துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள் பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள். என்ற இயேசுவின் இன்மொழிகள் செவிகளில் ஒலித்ததோ? சிலுவைக் காட்சி தான் அகக் கண் முன் எழுந்ததோ?
அமைதியாக அடியை வாங்கிய ஜான் அவரைப் பார்த்தான் ஐயா! நீங்கள் என்னைக் கொன்று போட்டாலும் நான் இந்த இடத்தை விட்டு என் புத்தகங்கள் இல்லாமல் போகமாட்டேன். தயவுசெய்து கொடுத்து விடுங்கள்! உங்களை எதிர்த்து அடிக்கவும் மாட்டேன். என் இயேசு அன்பானவர் அவர் உங்களையும் நேசிக்கிறார். என்று கூறிய ஜான் அந்த இடத்தை விட்டு அசையவில்லை. ஜானின் துணிவைக் கண்ட தலைமையாசிரியர் அதிகக் கோபமடைந்தார்!
புத்தகங்களைக் கொடுக்கமாட்டேன் . நீகெட்டது போதும் மற்றவர்களையும் கெடுக்காதே போ வெளியே! கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினார் சாலையில் வந்து விழுந்த ஜான் எழுந்தான்! நற்செய்தி புத்தகங்களை
இழந்து செல்ல ஜான் விரும்பவில்லை! கூச்சலிட ஆரம்பித்தான்! கூட்டம் கூடியது. தலைமையாசிரியர் புத்தகங்களைப் பறித்துக் கொண்டு தன்னை வெளியே தள்ளியதைக் கூறினான்.
கூட்டம் தலைமையாசிரியரை அணுகியது. அதற்குள் தலைமையாசிரியர் புத்தகங்களை எல்லாம் மறைத்துவிட்டார். அவர் ஜானைத் தனக்குத் தெரியாதெனவும், தான் புத்தகம் எதுவும் வாங்கவில்லையெனவும் கூறிவுட்டார். கூட்டத்திலிருந்த ஒருவர் தம்பி புத்தகங்களின் விலை தெரியுமா? எனக்கேட்டார்.
பேப்பரை எடுத்தவர் வரிசை வரிசையாக புத்தகங்களின் பெயர்களை எழுதி, விலைகளையும் எழுதி, மொத்த விலையைக் கூற அவர் அந்த ரூபாயைக் கொடுத்துவிட்டு,
தம்பி! தலைமையாசிரியர் என் அண்ணன் தான் அவருக்கு கிறிஸ்தவர்களைக் கண்டாலே பிடிக்காது, தயவு செய்து மன்னித்துவிடு” என்று அன்பொழுகக் கூறியபடி அகன்றார்” ஜானும்தன் இருப்பிடம் போய்ச் சேர்ந்தான்! அவன் உள்ளம் அந்தந் தலைமையாரியரின் ஆத்ம இரட்சிப்பிற்காக ஏங்கியது. இறைவனிடம் மன்றாட ஆரம்பித்தான்.
இதன் தொடர்ச்சி தண்ணிழலா ? தகிக்கும் அனலா? பாகம் - 2! என்ற தலைப்பில் உள்ளது.
இந்தக் கதை மாயாபுரிச் சந்தையிலே (பாகம் - 2) என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.