பல மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் உன்னி ராஜன், கேரள அரசால் நடத்தப்படும் தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கான விடுதியில் துப்புரவுப் பணியாளருக்கு விண்ணப்பித்துள்ளார். நேர்காணலுக்கு செல்லும் வழியில், பலர் அவரை அடையாளம் கண்டுகொண்டனர் மற்றும் குறைந்தது 50 பேராவது அவருடன் செல்ஃபி எடுத்தனர். நேர்காணல் குழு உன்னி ராஜன் அவர்கள் தவறுதலாக அங்கு வந்துவிட்டதாக நினைத்தது. ஆனால் அவரோ தான் பிரபலமாக இருந்து செல்பிகள் எடுப்பதால் எந்த உபயோகமும் இல்லை, அது எனக்கு சோறு போடாது என்பதை அவர்களுக்கு தெளிவுபடுத்தினார். அவருக்கு ஒரு நிலையான வேலை தேவை என்றும் அவரது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தான் உணவு அளிக்க தனக்கு நிரந்தரமான வருமானம் தேவை என்றும் கூறினார் (தந்தி மே 11, 2022).
செழிப்பு?
புகழ் ஒரு நபருக்கு உணவளிக்காது அல்லது செழிப்பைக் கொண்டுவராது. மக்கள் புகழின் உச்சத்தை அடைய விரும்புகிறார்கள். இப்போதைய டிஜிட்டல் உலகில் எதையாவது செய்து பிரபலமாக வேண்டும் என்று எண்ணுபவர்கள் ஏராளம். இணையத்தில் வேகமாக பரவக்கூடிய (வைரல்) வீடியோக்கள் தான் அவர்களின் வாழ்க்கை இலக்கு. அத்தகைய வீடியோக்களை உருவாக்க, மக்கள் பெரும் விலை கொடுக்கிறார்கள், சில நேரங்களில் தங்கள் சொந்த வாழ்க்கையை அல்லது ஆரோக்கியத்தையே இந்த உலகத்திற்குள் இழக்கிறார்கள். இரண்டு சிறுவர்கள் தங்கள் டிஜிட்டல் பார்வையாளர்களுக்காக ஒரு ஸ்டண்ட் பதிவு செய்ய நினைத்து விபத்தாகி மரித்தே போனார்கள். உலக சாதனைகள் அல்லது வைரல் வீடியோ பதிவுகளை முயற்சித்து இந்தியாவிலும் வெளிநாட்டிலும் ஆயிரக்கணக்கானவர்கள் இறந்துள்ளனர்.
அபாயகரமான ஈர்ப்பு?
ஏமாற்றும் விளம்பரங்கள் இளைஞர்களை அழிவுகரமான செயல்களுக்கு ஈர்க்கின்றன. சூதாட்ட விளம்பரம்; "நீங்கள் ஒரு சாம்பியன் ஆகலாம்" என்கிறது. மேலும், சூதாட்ட கலாச்சாரம் சாம்பியன்களின் கலாச்சாரம் என்று கூறுகிறது. சாத்தான் ஏவாளிடம் அவள் ஒரு கடவுளாகவோ அல்லது சாம்பியனாகவோ ஆகலாம் என்ற ஆசை வார்த்தைகளை முன்வைத்தான் (ஆதியாகமம் 3:5). இது ஒரு கொடிய ஈர்ப்பாக இருந்தது, அது மனிதகுலத்தை படுகுழியில் தள்ளியது.
ஜீவனைக் காட்டிலும் சிறந்ததா?
தாவீது ராஜாவின் கூற்றுப்படி, ஜீவனைப்பார்க்கிலும் அவரின் கிருபை நல்லது; ஆம் தேவனின் உறுதியான அன்பு ஜீவனை விட சிறந்தது (சங்கீதம் 63:3). உலகத்தில் உள்ள மக்கள் அடைய முடியாத, நிலைக்காத ஒன்றைத் தேடிக்கொண்டிருக்கையில், தேவனின் நித்திய உறுதியான அன்பு விலைமதிப்பற்றது என்பதை தாவீது ராஜா அறிந்துகொண்டானே. அவன் தேவனின் அன்பு, இரக்கம் மற்றும் கிருபையை ஜீவனை விட சிறந்ததாக கருதினான்.
குப்பையா?
புகழ் அல்லது செல்வம் அல்லது புத்திசாலித்தனம் அல்லது அதிகாரம் என எல்லாமே பவுலின் நித்திய கண்ணோட்டத்தில் வெறும் குப்பையே (பிலிப்பியர் 3:8).
தேவ ராஜ்யம்?
பிரபலத்தால் மட்டும் உயிர்வாழ்வது சாத்தியமில்லை என்பதை உணர்ந்த அந்த நடிகர் வேலை செய்யத் தொடங்கினார். தேவனுடைய ராஜ்யத்தையும் நீதியையும் தேட கர்த்தராகிய இயேசு கற்றுக்கொடுத்தார்; ஆம், அப்படி தேடும்போது நம் வாழ்க்கைக்கு தேவையான எல்லாம் தானாகவே கவனிக்கப்படும் என்பதை நினைவில் கொள்வோம் (மத்தேயு 6:33).
எனது முன்னுரிமைகள் என்ன? அது சரியாகதான் உள்ளதா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்