மரியாளும் மார்த்தாளும் பெத்தானியா கிராமத்தில் வாழ்ந்த சகோதரிகள். கர்த்தராகிய இயேசு அவர்கள் வீட்டிற்குச் சென்றார்; மரியாள் ஆண்டவரின் பாதத்தில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்பதைத் தேர்ந்தெடுத்தாள். மார்த்தாள் மும்முரமாக வீட்டு வேலைகளைச் செய்து கொண்டிருந்தாள், அதில் விரக்தியும் அடைந்தாள். தன் சகோதரியை தனக்கு உதவியாக அனுப்பும்படி ஆண்டவரிடம் முறையிட்டாள். அதற்கு ஆண்டவர், மரியாளோ தன்னை விட்டு எடுபடாத நல்ல பங்கைக் தெரிந்து கொண்டாள் என்றார் (லூக்கா 10:38-42). மார்த்தாள் மன அழுத்தத்தையும் சோர்வையும் அனுபவித்துக்கொண்டிருந்தாள், அதனால் அவளுடைய விரக்திக்கு அவள் அனைவரையும் குற்றம் சாட்டினாள்.
நீங்கள் கவலைப்பட வேண்டாம்:
முதலில், அவர் அதைப் பொருட்படுத்தவில்லை என்று ஆண்டவரைக் குறை கூறினாள். அவள் நிலைமையை மதிப்பிட்டு, தேவ குமாரன் உட்பட யாரும் தன்னைப் பற்றி கவலைப்படவில்லை என்று நினைத்தாள். கர்த்தர் அவளைக் கவனிக்கவில்லை என்றால் ஏன் அவள் வீட்டிற்குச் செல்ல வேண்டும்?
கைவிடப்பட்டது:
அவள் தன் சகோதரியால் கைவிடப்பட்டதாக உணர்ந்தாள், ஆகையால் மரியாளின் மீது குற்றம் சாட்டினாள். தன்னுடைய அசௌகரியம், தனிமை மற்றும் மனஅழுத்தம் ஆகியவற்றிற்காக மரியாளைக் குறை கூறினாள். மரியாள் அவளுக்கு உதவ முன்வந்திருந்தால், ஒருவேளை அவள் வருத்தப்பட மாட்டாள்.
நான் தனியாக இருக்கிறேன்:
பண்டைய வீடுகளில், வேலைக்காரர்கள் அல்லது அடிமைகள் இருந்தனர். ஒருவேளை, அவளுக்கு உதவி செய்ய வேலைக்காரர்கள் இல்லை போலும். அவர்களால் வேலைக்கு ஆட்கள் வைக்க முடியாமலும் இருந்திருக்கலாம் அல்லது ஏற்கனவே இருந்தவர்கள் வேலையை விட்டு வெளியேறியிருக்கலாம். எனவே, வேலைக்கு ஆட்களை அமர்த்த முடியவில்லை என்று அவள் பொருளாதார நிலைமையைக் குறை கூறினாள்.
வேலை:
அன்று அவளுக்கு விருந்தாளிகள் இருந்ததால், மார்த்தாள் தனக்கு வேலைப்பளு அதிகமாக இருப்பதாக உணர்ந்தாள். அதனால், அவள் பல விஷயங்களுக்காக வருத்தப்பட்டு, கவலைப்பட்டு, கலங்கினாள். விருந்தினர்கள் அதிகரித்ததால், வேலை அதிகரித்ததாக அவள் குற்றம் சாட்டினாள். மரியாள் அதை புரிந்து கொள்ளவில்லை அல்லது உதவிக்கரம் நீட்டவில்லை.
சுய பரிதாபத்தின் பாவம்:
இது சூட்சும பாவங்களில் ஒன்றாகும், இது வஞ்சகமானது மற்றும் இதயத்தை கடினமாக்குகிறது (எபிரெயர் 3:13). ஜான் பைப்பரின் கூற்றுப்படி, சுயபச்சாதாபம் என்பது பெருமையின் மறுபக்கம் மற்றும் தற்பெருமையிலிருந்து எழுகிறது. தற்பெருமை என்பது வலிமையானவர்களின் இதயத்தில் பெருமை மற்றும் வெற்றியைப் போற்றுதல்; சுய பரிதாபம் என்பது பலவீனமானவர்களின் இதயத்தில் பெருமிதத்தின் குரல், துன்பத்தைப் போற்றுதல்.
நோய் எதிர்ப்பு மருந்து:
கர்த்தராகிய இயேசு மார்த்தாளிடம் ஒரே காரியத்தில் கவனம் செலுத்தும்படி கூறினார், அதாவது தேவ சமூகத்தில் அமர்ந்திருந்து அவருடைய சத்தத்தைக் கேட்க வேண்டும். அது அவள் வாழ்வின் முன்னுரிமைகளை மறுசீரமைக்கவும், அவளது வாழ்வாதாரத்திற்கான கிருபையைப் பெறவும் அவளுக்கு உதவும்.
நான் சுயமாக அர்ப்பணித்த சீஷனா அல்லது சுயபச்சாதாபத்தால் பாதிக்கப்பட்ட நபரா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்