அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பலம் வாய்ந்த நாடுகளின் தலைவர்கள் வளரும் அல்லது ஏழை நாடுகளுக்குச் செல்லும்போது, அவர்களுக்கு அரச வரவேற்பு அளிக்கப்படுகிறது. உயரதிகாரி வரும்போது, அவர் பயணிக்கும் பகுதிகள் முழுவதும் அலங்கரிக்கப்பட்டு, சாலைகள் மீண்டும் அமைக்கப்பட்டு, நடைமேடைகளில் இருக்கும் ஏழைகள் அகற்றப்படும் சந்தர்ப்பங்களும் உண்டு. சில இடங்களில் ஏழை மக்களின் குடிசைகளை அகற்றியோ அல்லது கண்ணுக்கு தெரியாத வகையில் சுவர் கட்டப்பட்டோ கூட காணப்படும். ஆம், பணக்காரர்களும் உயரடுக்குகளும் ஏழைகளின் சேவையை விரும்புகிறார்கள், ஆனால் ஏழைகளை அல்ல. "ஒரு சிறு பட்டணம் இருந்தது, அதிலே இருந்த குடிகள் கொஞ்ச மனிதர்; அதற்கு விரோதமாய் ஒரு பெரிய ராஜா வந்து, அதை வளைந்துகொண்டு, அதற்கு எதிராகப் பெரிய கொத்தளங்களைக் கட்டினான். அதிலே ஞானமுள்ள ஒரு ஏழை மனிதன் இருந்தான்; அவன் தன் ஞானத்தினாலே அந்தப் பட்டணத்தை விடுவித்தான்; ஆனாலும் அந்த ஏழை மனிதனை ஒருவரும் நினைக்கவில்லை. ஆகையால் ஏழையின் ஞானம் அசட்டைபண்ணப்பட்டு, அவன் வார்த்தைகள் கேட்கப்படாமற்போனாலும், பெலத்தைப்பார்க்கிலும் ஞானமே உத்தமம் என்றேன்” (பிரசங்கி 9:14-16).
ஒதுக்குதல்:
படித்தவர்கள், பணக்காரர்கள், உயரடுக்கினர் மற்றும் செல்வாக்குள்ளவர்கள் ஏழைகளிடமிருந்து, அதாவது நடைபாதையில் வசிப்பவர்கள் மற்றும் குடிசைவாசிகளிடமிருந்து தங்களை விலக்கிக் கொள்ள விரும்புகிறார்கள். சில பல அடுக்குமாடி குடியிருப்புகளில், பணிப்பெண்கள், பால் விநியோகம் செய்யும் சிறுவர்கள் அல்லது உணவு விநியோக முகவர்கள் பயன்படுத்த தனி லிஃப்ட் அல்லது படிக்கட்டுகள் உள்ளன. ஒருவேளை லிஃப்டில் அவர்கள் செல்வதனால் அது அழுக்காகி விடுமோ!
தனிமைப்படுத்துதல்:
உண்மையில், ஏழை குடியேற்றங்கள் பணக்காரர்களிடமிருந்தும் செல்வாக்குள்ளவர்களிடமிருந்தும் தனிமைப்படுத்தப்பட்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஏழைக் குழந்தைகளுடன் தங்கள் குழந்தைகளுக்கு தொடர்பு ஏற்பட்டால் மோசமான பழக்க வழக்கங்களையும் தொற்று நோய்களையும் கொண்டு வரக்கூடும் என்று அவர்கள் பயப்படுகிறார்கள்.
கண்ணுக்கு தெரியாதது:
கிராமங்களும் நகரமாக வேண்டும் என திட்டமிடுபவர்கள் நகரத்தைக் குறித்தான தோற்றம் சிறப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஏழைகள் நகரங்களில் வாழ்ந்தால், அது நன்றாக இருக்காது என எண்ணுகிறார்கள். எனவே, அவர்கள் ஊருக்கு வெளியே தங்க வைக்கப்பட்டு, தங்கள் வேலையைச் செய்ய பணிக்கிறார்கள் அல்லது நகரத்தில் உள்ள பெரும்பாலான மக்களின் பார்வையில் இருந்து மறைத்து வைக்கப்படுகிறார்கள்.
மதிப்புமிக்கவர்கள்:
இருப்பினும், ஏழைகள் தேவனின் சாயலில் உருவாக்கப்பட்ட மதிப்புமிக்கவர்கள். பணக்காரர்களை அவர்களின் தாயின் வயிற்றில் படைத்த அதே தேவன், ஏழைகளையும் அவர்களின் தாயின் வயிற்றில் படைத்தார் என்று வேதாகமம் போதிக்கிறது. “தாயின் கர்ப்பத்தில் என்னை உண்டுபண்ணினவர் அவனையும் உண்டுபண்ணினார் அல்லவோ? ஒரேவிதமான கர்ப்பத்தில் எங்களை உருவாக்கினார் அல்லவோ?” (யோபு 31:15). ஆகவே, அவர்களை நடந்து கொள்ளும் விதத்திலாவது, வார்த்தைகளினாலவாது அல்லது செயலில் பாகுபாடு காட்டுவது, குற்றப்படுத்துவது அல்லது தவறாக நடத்துவது என்பது தேவனுக்கு எதிரான பாவமாகும். “ஏழையைப் பரியாசம்பண்ணுகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்; ஆபத்தைக் குறித்துக் களிக்கிறவன் தண்டனைக்குத் தப்பான்” (நீதிமொழிகள் 17:5).
ஏழைகள் மீதான எனது அணுகுமுறை என்ன?
Author: Rev. Dr. J .N. மனோகரன்