கர்த்தரும் இரட்சகரும்:
ஒரு நபர் பாவத்திலிருந்து மனந்திரும்பி, பாவத்திற்காக துக்கமடைந்து, பழைய வாழ்க்கையைக் கழைய முற்படுகிறார், மேலும் கல்வாரி சிலுவையில் கர்த்தராகிய இயேசுவின் கொடுமையான மரணம், அதைத் தொடர்ந்து அவரது அடக்கம், உயிர்த்தெழுதல் மற்றும் மரமேறுதலை விசுவாசத்துடன் ஏற்கிறார். அந்த நபர் மறுபடியும் பிறந்து ஆவிக்குரிய ரீதியில் நல் மாற்றத்திற்கு உட்படுகிறார். மேலும், அந்த நபர் சாத்தானின் அதிகாரத்திலிருந்து பிடுங்கப்பட்டு தேவ ராஜ்யத்தில் நடப்படுகிறார் (அப்போஸ்தலர் 26:16-18). தேவ ராஜ்யம் அல்லது அவருடைய ஆளுகை ஒரு நபரை ஆக்கிரமிக்கிறது அல்லது தழுவுகிறது. பின்பு கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அந்நபரின் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களுக்கும், அபிலாஷைகளுக்கும் ஆண்டவராகிறார். இறையருளை அனுபவிப்பதும், மற்றவர்களை இறையாட்சிக்கு அல்லது தேவ இராஜ்யத்திற்கு அழைப்பதும் ஆவிக்குரிய வாழ்வின் நோக்கமாகும்.
முதன்மை:
உலகில் உள்ள பல விஷயங்கள் பல்வேறு நபர்களுக்கு முதன்மையாக கருதப்படுகின்றன. தேசம், அரசியல் கட்சி, சித்தாந்தம், அறிவியல், வணிகம், விளையாட்டு, உணவு, சாகசம், தத்துவம், மத சடங்குகள், குடும்பம் மற்றும் குழந்தைகள் என்பது சிலரின் முன்னுரிமையாக இருக்கலாம். இருப்பினும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சீஷர்களாகிய அனைவருக்கும் தேவ ராஜ்யமே முதன்மையானது.
தேடுங்கள்:
சீஷர்கள் தேவ ராஜ்யத்தில் செயலூக்கமுள்ள பங்கேற்பாளர்களாக இருக்க வேண்டும். சீஷர்கள் ராஜ்யத்தின் குடிமக்கள், ஆம், அவர்களின் குடியிருப்பு பரலோகத்தில் அல்லவா இருக்கிறது (பிலிப்பியர் 3:20). இருப்பினும், தேவனுடைய ராஜ்யத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக அவர்கள் உலகத்திற்கு தூதர்களாக அனுப்பப்படுகிறார்கள் (2 கொரிந்தியர் 5:20). தேவனுடன் ஒப்புரவாக செய்ய மக்களை அழைப்பதே சீஷர்களின் வேலை.
ராஜ்ய முன்னுதாரணமும் கொள்கையும்:
தேவ இராஜ்ஜியம் தனித்துவமானது, சிறப்பானது மற்றும் வேறு எந்த உலகக் கண்ணோட்டம் அல்லது வாழ்க்கை முறையை விட உயர்ந்தது. இந்த ராஜ்யம் பெருமை அல்லது சொத்து அல்லது அதிகாரம் பற்றியது அல்ல. இந்த ராஜ்ஜியத்திற்கு சத்தியமே அடிப்படை; தேவனே சத்தியம், கர்த்தராகிய இயேசுவே சத்தியம், தேவனுடைய வார்த்தை சத்தியம் என்று வேதம் உறுதிப்படுத்துகிறது. இந்த ராஜ்யம் அசைக்க முடியாதது, அது நித்தியமானது (எபிரெயர் 12:28).
நீதி:
தேவனுடைய ராஜ்யத்தின் விழுமியத் தொகுதி என்பது நீதி. தேவன் பரிசுத்தமானவர், அவருடைய பரிசுத்தம் ராஜ்யத்தில் நீதியாக வெளிப்படுகிறது. தேவனுடைய ராஜ்யத்தில் இருப்பவர்கள் தேவனுடைய மகிமைக்காக தேவனுடைய பார்வையில் சரியானதைச் செய்கிறார்கள்.
கூடுதல்:
சீஷரின் முன்னுரிமை சரியாக இருக்கும் போது, அவருடைய முன்னேற்பாடுகளும் உறுதி செய்யப்படுகின்றன. உணவு, உடை மற்றும் பிற தேவைகள் கிருபையுடன் வழங்கப்படும்.
நான் முதலில் தேவனுடைய ராஜ்யத்தைத் தேடுகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்