கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சமாரியப் பெண்ணுடன் பேசினார், அவள் ஊருக்குள் சென்று தன் ஆவிக்குரிய கண்டுபிடிப்பான மேசியாவைப் பற்றி பேசினாள். உணவு பெறச் சென்ற சீஷர்கள் கிராமத்திலிருந்து திரும்பி வந்தனர். அவர்களிடம் ஆண்டவர்; "அறுப்புக்காலம் வருகிறதற்கு இன்னும் நாலுமாதம் செல்லும் என்று நீங்கள் சொல்லுகிறதில்லையா? இதோ, வயல்நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறதென்று உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்" (யோவான் 4:35) என்றார். என்ன சீஷர்கள் பார்வையற்றவர்களாகவா பிறந்தார்கள்! அப்படியல்ல. அதாவது, இந்த உலக ஜனங்கள் பார்ப்பது போலல்லாமல் உள்நோக்கத்துடனும், குறிக்கோளுடனும் மற்றும் அர்த்தத்துடனும் பார்க்க வேண்டும் என்று ஆண்டவர் எதிர்பார்த்தார். இது நாம் உட்பட திருச்சபையின் வரலாற்றில் உள்ள அனைத்து சீஷர்களுக்கும் பொருந்தும்.
1) புவியியல் வரம்புகளுக்கு அப்பால் பார்:
சீஷன் யூதேயாவின் எல்லைகளைத் தாண்டி, சமாரியாவையும் மேலும் பூமியின் கடைசிப் பகுதிகளையும் பார்க்க வேண்டியிருந்தது (அப்போஸ்தலர் 1:8).
2) உள்ளூர் சபைக்கு அப்பால் பார்:
சீஷர்கள் உள்ளூர் சபைக்கு அப்பால் பார்க்க வேண்டும். உள்ளூர் சபையை தங்கள் இறுதி இலக்காக நினைக்கும் சீஷர்கள் மற்றும் போதகர்கள் பலர் உள்ளனர், அப்படியென்றால் அவர்களின் அர்ப்பணிப்பும் சேவையும் சமர்ப்பனமும் அந்த ஒரு சபைக்கு மட்டுமே காணப்படுகின்றது அல்லவா. ஆனால், சீஷர்கள் உள்ளூர் சபையைத் தாண்டி மேலும் சபைகளை நாட்டவும், அதற்கான பாதைகளை உருவாக்கவும், எல்லைகளை விஸ்தாரமாக்கவும் வேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார்.
3) அறுவடை செய்பவர்களை தேடிப் பார்:
சீஷர்கள் ஒரு செயலற்ற பார்வையாளனை போலல்லாமல் சுறுசுறுப்பான பங்களிப்பாளர்களாக மாற வேண்டும். அவர்கள் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட வேண்டும். மேலும் பணி மிகப்பெரியது என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள். முக்கியமான அறுவடை இயந்திரங்களின் தேவை என்ன என்பதில் அப்போது தானே கவனம் செலுத்தப்படும்.
4) கண்களை உயர்த்திப் பார்:
இது பரலோகத்தில் இருக்கும் அறுவடையின் ஆண்டவரை நோக்கி கண்களை உயர்த்த சீஷர்களை தூண்டுகிறது. லூக்கா 10:2ல் கூறப்பட்டது போல, அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆகையால் எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி ஜெபிக்க வேண்டியது முக்கியமான மற்றும் மூலோபாய படியாகும்.
5) தூரமாய் பார்:
சீஷர்கள் தொலைத்தூரப் பார்வையுடன் இருக்க வேண்டும் மற்றும் அவர்கள் கிட்டப்பார்வையுடன் (குறுகிய பார்வை) இருக்கக் கூடாது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது நித்திய கண்ணோட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பதே அதன் பொருள்.
6) சோம்பலை விட்டுப் பார்:
சரியான நேரத்தில் செய்யாத அறுவடை அழுகி அழிந்துவிடும்.
7) வாழ்க்கையின் நோக்கத்தைப் பார்:
சீஷர்களின் முதல் மற்றும் முதன்மை பணி சீஷர்களை உருவாக்குவதேயாகும்.
நான் அறுவடையின் கண்களோடு அல்லது நோக்கத்தோடு ஜனங்களைப் பார்க்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்