கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிற்கு நல்ல அர்ப்பணிப்புள்ள ஒரு சீஷர் குழு இருந்தது. அவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒரு கிராமத்திற்குச் சென்று நற்செய்தியைப் பிரசங்கித்தனர். அவர்கள் சுமார் ஐம்பது கிராமங்களின் பட்டியலை வைத்திருந்தனர், அவர்கள் வருடத்திற்கு ஒரு முறை இந்த கிராமங்களுக்கு செல்வது வழக்கம். சுமார் ஐந்து வருடங்களாக இப்படி நடந்து கொண்டிருந்தது. ஒருநாள் ஒரு கிராமத்தில் முதியவர் ஒருவர் வந்திருந்த குழுவின் தலைவரை அழைத்து; "உங்களுக்கு எங்கள் மீது அக்கறையுள்ளதா?" எனக் கேட்டார். அதற்கு அந்த தலைவரும் சாதகமான ஒரு பதிலை அளித்தார். ஆனாலும் அந்த பெரியவர் விடுவதாக இல்லை; நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள், எங்களை நேசிக்கிறீர்களா, எங்கள் மீது அக்கறை உள்ளதா? போன்ற பல கேள்விகளை கேட்டார். தலைவரும் தகுந்தவாறு பதிலளித்தார். அப்போது முதியவர் கூறியதாவது; பருவமழை பெய்தால் குளத்தில் உள்ள தவளைகளுக்கு உயிர் கிடைக்கும். அவைகள் மணிக்கணக்கில் ஒலி எழுப்ப வேண்டும். அது போலதான் நீங்களும்; வருடத்திற்கு ஒருமுறை வந்து செல்கிறீர்கள். நாங்கள் புரிந்துகொள்கிறோமா அல்லது எங்கள் கருத்து என்ன அல்லது எங்களின் மறுமொழி என்ன என்று நீங்கள் எப்போதாவது கேட்டிருக்கிறீர்களா? என்றார்.
தலைக்கவிழ்ந்த தலைவர் அந்த பெரியவரிடம்; நாங்கள் என்ன செய்ய வேண்டும்? எனக் கேட்டார். அப்பெரியவர்; “வாரம் வாரம் வாருங்கள். எங்களுடன் உட்காருங்கள். தேநீர் அருந்துங்கள். எங்கள் விருந்தோம்பலை அனுபவித்துக் கொண்டே எங்களுக்குக் கற்றுக்கொடுங்கள். அருட்பணி என்பது வெறுமனே வந்து செல்வதிலோ அல்லது கைகளை வைத்து சுகமாக்குவதில் மாத்திரம் அல்லவே" என்றார். ஆண்டவர் சீஷர்களை இரண்டு இரண்டாக அனுப்பியபோது, அவர்களை வரவேற்கும் வீட்டிற்குள் சென்று அக்குடும்பத்தை ஆசீர்வதித்து இந்த வீட்டுக்கு சமாதானம் உண்டாகுவதாக எனக் கூறச் சொல்லி அவர்களுக்கு அறிவுறுத்தினார். அவர்கள் வழங்கும் விருந்தோம்பலை அனுபவிக்குமாறும் தேவன் அவர்களுக்கு அறிவுறுத்தினார் (லூக்கா 10:4-8).
பொதுவாகவே நற்செய்தியை அறிவிக்கும்போது உரிமையாக உறவாக பாவித்து நெருங்கிப் பழகிப் பகிர்ந்து கொள்ளும்போது சுவிசேஷம் பயனுள்ளதாக இருக்கும். அச்சு ஊடகம், வெகுஜன ஊடகம் மற்றும் சமூக ஊடகங்கள் பரந்த பார்வையாளர்களை அடைய வாய்ப்புகளை வழங்கலாம். இருப்பினும், உள்ளூர் சூழலில் தனிப்பட்ட பகிர்வு மிகவும் பயனுள்ளதாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்கிறது. எத்தியோப்பிய மந்திரிக்கு ஏசாயா தீர்க்கதரிசியினால் எழுதப்பட்ட புத்தகத்தை வாசிக்கும் வாய்ப்பு இருந்தது, ஆனால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை (அப்போஸ்தலர் 8:31). ஆனால் அதை விளக்குவதற்கு தேவன் பிலிப்பை அனுப்பினார்.
கர்த்தர் பன்னிரண்டு அப்போஸ்தலர்களுடன் மூன்றரரை வருடங்கள் தீவிரமாக நேரத்தை செலவிட்டார். சீஷத்துவம் என்பது நேரத்தைச் செலவழித்து மக்களின் வாழ்க்கையில் முதலீடு செய்வதாகும். இது ஒரு நீண்ட கால செயல்முறை மற்றும் ஒரு பருவகால தொழில்முனைவு அல்ல. துரதிர்ஷ்டவசமாக, சீஷர்களை உருவாக்குபவர்களுக்கு இதற்கெல்லாம் நேரமில்லை அல்லது கற்றுக்கொள்வதற்கு சீஷர்களுக்கும் விருப்பமில்லை. ஆம், விவிலிய (வேதாகம) மாதிரிகள் மற்றும் முறைகளுக்குத் திரும்புவது முக்கியம்.
எனது தனிப்பட்ட ஆவிக்குரிய வளர்ச்சியிலும் மற்றவர்களின் வாழ்க்கையிலும் நான் போதுமான அளவு நேரத்தை செலவிடுகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்