தொடர் - 8
கேட்டைத் திறக்க அழகான செவர்லைட் கார் உள்ளே வந்தது. போர்டிகோவில் தன் காரை நிறுத்திய டேனியல் அதிர்ச்சியடைந்து நிற்கும் தன் மனைவியையும், அவள் எதிரே நிற்கும் பெண்ணையும், தன் மகனையும் கண்டார். நெருப்பை மிதித்தவர் போல் திடுக்கிட்டார்.
“நீ எங்கே வந்தாய்?” கர்ச்சித்தார். தன் மகனைப் பார்த்தவர் “ஜெபா நீ உள்ளே போ” கட்டளையிட்டார். ஒன்றும் புரியாத ஜெபா தந்தையின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து உள்ளே சென்றார். ஆனால் அவர் மனமும் செவிகளும் பின்னோக்கிச் சென்றன. அவர் அறை, மாடியின் முன்பகுதியில் இருந்ததால் தோட்டத்தில் நடைபெறும் அனைத்தையும் காணவும், கேட்கவும் முடிந்தது.
“யாரைக் கேட்டு இங்கே வந்த? எந்த முகத்தோட என்னைப் பார்க்க வந்த? என் மானத்தை வாங்கியது போதாதா” எரிமலையாய் நின்றார் டேனியல்.
“அண்ணா! அண்ணா நான் நொந்து போயிருக்கேன்னா! தாயா, தந்தையா நின்று என்னை வளர்த்த உங்களை உதறிவிட்டு போனதுக்கு எனக்கு நல்லா தண்டனை கெடச்சுருச்சுண்ணா. ஆறே ஆண்டு, அவர் கண்ணை மூடிட்டார். மூணு பெண் பிள்ளைகள் அண்ணா! என் பாவத்தை நினைத்து, நினைத்து அழுது, பிள்ளைகளை வளர்க்க இந்த 18 வருஷமா , உழைச்சி, உழைச்சி ஒடாப் போயிட்டேண்ணா! என் மீது இரக்கம் காட்டுண்ணா! என்னை மன்னிச்சிடுண்ணா! உன்னைக் கெஞ்சுறேண்ணா!” கைகளைக் கூப்பித்தொழுதாள், அழுதாள் வைலட்! (அதுதான் அவள் பெயா்)
“அண்ணனா? யார் அண்ணன்? என்னைக்கு என்னை உதறிவிட்டு ஊர் பேர் தெரியாத பையலோட போனயோ அன்னைக்கே என் தங்கை செத்துட்டா! இப்ப எதுக்கு வந்த? கஷ்டம் வரவும் அண்ணன் ஞாபகம் வருதோ? நாயே போ வெளியே!”
“அண்ணா பணம் கேட்டு வரலைண்ணா! என் இரண்டாவது பெண்ணுக்கு வேலை கேட்டு வந்திருக்கேன். இங்க இருக்க ஸ்கூல்ல ஒரு ஆசிரியைக்கு இடம் இருக்காம், நீ சொன்னா ஐயா கேப்பார்ண்ணா! தயவு செய்யண்ணா! அவர் வேலை பார்த்தா மூத்த பெண் திருமணத்திற்கு ஏதாவது செய்ய முடியும்ண்ணா!” கெஞ்சினாள் வந்தவள்!.
“ஓஹோ... அண்ணனோட அருமை இப்பத்தான் புரியுதோ? அந்த இடத்தில் ஆள்போட நேற்றே ஆர்டர் டைப் ஆயிடுச்சு! ஏன் உம் பொண்ணையும் உன்னை மாதிரி ஒருத்தனைக் கூட்டிக்கிட்டு ஓடச்சொல்றது தானே?” வார்த்தையால் குத்தினார் டேனியல்.
“அண்ணா” அலறினாள் “அப்படியெல்லாம் பேசாதேண்ணா! நான் தான் சேறு! என் மகள்.... என் மகள் சேற்றில் மலர்ந்த செந்தாமரை!” கண்கள் கண்ணீரைக் கொட்டின!
ஓ... ஆஹா ..... ஆஹா...” கேலியாகக் சிரித்தார். “ சரி காரியம் முடிஞ்சிடுச்சில்ல, போ, வெளியே! நீயா போகப் போறையா? கழுத்தைப் பிடிச்சி வெளியே தள்ள வேலைக்காரனைக் கூப்பிடவா?” கொதித்தார்.
“ஏங்க? வீடு தேடி வந்தவளை...” மெதுவாக ஆரம்பித்தாள் சுந்தர்சிங்கின் மனைவி குணசீலி. “நீ உள்ள போறையா? அவளோட சேர்ந்து வெளியே போறையா?” சீறிப் பாய்ந்த சொல்லம்பு குணசீலியை கலங்கிய கண்களோடு உள்ளே செல்ல வைத்தது. வைலட் அழுது கொண்டே வெளியேறினாள்.
தன்னறையில் அமர்ந்திருந்த ஜெபசிங்கிற்கு அவர்கள் உரையாடலில் இருந்து அனைத்தும் புரிந்தது. தன் அத்தையின் மீது அனுதாபம் ஏற்பட்டது. கர்த்தரின் ஜெபத்தில் “எங்களுக்கு விரோதமாய் குற்றம் செய்கிறவர்களுக்கு நாங்கள் மன்னிக்கிறது போல எங்களுக்கு மன்னியும்” என்று அனுதினம் வேண்டினாலும், திருமறையில் “நீங்களும் அவனவன் தன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற் போனால் என் பரமபிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார்” (மத் 18:35) என்று வாசித்தாலும் மன்னிக்கும் சிந்தை கிறிஸ்தவனுக்கு ஏற்படவில்லையே என்று அங்கலாய்த்தார். தன் தந்தையிடம் அத்தைக்காகப் பேசலாம் என்றால் தன் தங்கை திருமணத்திற்குப்பின், தன்னை நேசிக்கத் துவங்கியிருக்கும் தன் தந்தையை மீண்டும் பகைக்க நேரிடுமே என எண்ணினார். ஆனால் அவர் எதிர்பாராத விதமாகவே மறுநாள் ஜெபசிங்கின் திருமணப் பேச்சை எடுத்தார் டேனியல். இருவருக்கும் மனவேறுபாடு முளைவிட்டது.
இதன் தொடர்ச்சி திசை திரும்பிய பறவை! என்ற தலைப்பில் உள்ளது.
இந்த கதை இலட்சிய தீபம் என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.