தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருகூர் பகுதியில் கோவிட் 19 ல் இருந்து மக்களை பாதுகாக்க ‘கொரோனா தேவி’ சிலையை வழிபாட்டுக்கு என்று நிறுவியுள்ளனர். கருங்கல்லாலான சிலை வடிவமைக்கப்பட்டு 48 நாள் மகா யாகம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது (இந்தியா டுடே, 19 மே 2021). ஆமாம், கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ் மக்கள் மனதில் பயத்தின் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. அவர்கள் தீவிரமாக உதவி தேடுகிறார்கள்.
1) மரண பயம்:
எல்லா மனிதர்களும் நீண்ட காலம், ஆரோக்கியமாகவும், எவ்வித குறையுமின்றி செழிப்பாகவும் வாழ விரும்புகிறார்கள். இருப்பினும், பலருக்கு அத்தகைய சிலாக்கியம் கிடைப்பதில்லை. தாங்கள் வாழ்கின்ற வாழ்விற்கு தாங்களே தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்பதை பலரும் அறிவார்கள். ஆகையால், மரணத்திற்குப் பிறகு நியாயாதிபதியான தேவனை சந்திக்க பயப்படுகிறார்கள். எனவே, முடிந்த வரை மரணத்தை ஒத்திவைக்க அவர்கள் முயற்சி செய்கிறார்கள். இருப்பினும், இறுதியில் அவர்கள் கடைசி எதிரியான மரணத்தை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும் (1 கொரிந்தியர் 15:26). சீஷர்கள் மரண பயத்திலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள் (எபிரெயர் 2:15).
2) முன் பின் அறியாத பயம்:
மரணத்திற்கான காரணம் கோவிட் 19 எனப்படும் ஒரு வைரஸ் என்று புரிந்து கொள்ளப்படுகிறது. இருப்பினும், அதை வெறும் கண்களால் பார்க்க முடியாது, அறிவியல் பூர்வமாக, விஞ்ஞானிகள் மட்டுமே காணவோ, புரிந்துக் கொள்ளவோ மற்றும் விளக்கவோ முடியும். கொரோனா வைரஸ் எப்படி செயலாற்றகிறது என்பது புரிந்து கொள்ள முடியாத ஒன்று. மேலும், மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கும் என்பது மர்மமான விஷயமாக பலருக்கு உள்ளது. ஆக, இந்த அறியாத எதிர்காலம் அறியப்படாத நபரால் கட்டுப்படுத்தப்படுகிறது. அத்தேனரில் கூட, அறிப்படாத தேவனுக்கு என்று எழுதியிருக்கிற ஒரு பலிபீடம் இருந்தது (அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:23).
3) சமாதானப்படுத்துதல்:
துரதிர்ஷ்டவசமாக, பெரும்பான்மையினருக்கு கடவுள் என்றால் முன் பின் தெரியாதவர் மாத்திரமல்ல அவர் அறிய முடியாதவர். ஆக, அவர்கள் கடவுளையோ அல்லது அவரது பண்புகளையோ அறியாததால், தெய்வங்கள் எப்போதும் கோபமாக இருப்பதாக கற்பனை செய்கிறார்கள். ஆகையால் காணிக்கைகள், பிரசாதம் மற்றும் மந்திரங்களால் வசப்படுத்தவும், திருப்திப்படுத்தவும், கோபத்தை தணிக்கவும் முயலுகிறார்கள். ஆனால் ஆராதனை என்பது தேவனுடைய குணாதிசயங்களை மற்றும் பண்புகளை அறிந்து அவரைத் துதிப்பதாகும், திருப்திப்படுத்துவது என்பது கோபமான நபரை அதை தணிக்க முயற்சிப்பதாகும்.
4) ஆவிக்குரிய உணர்வின்மை:
விஞ்ஞான அறிவுக்கு அப்பாற்பட்ட இயற்கைக்கு மேலான சக்தி இருப்பதை மக்கள் புரிந்துகொள்கிறார்கள். இருப்பினும், தெய்வீக பண்புகளைக் கொண்டு சிருஷ்டிகராக இருக்கும் தேவனை அவர்கள் அங்கீகரிக்கத் தவறிவிட்டனர். எனவே, அவர்கள் கற்பனை மூலம் குறிப்பிட்ட மத்தியஸ்தரை (இடைத்தரகர்) கடவுளாக உருவாக்குகிறார்கள்.
வேதாகமத்தில் வெளிப்படுத்திய சிருஷ்டி கர்த்தரை அறிவது ஒரு பெரிய பாக்கியம்.
நான் உயிருள்ள மற்றும் அன்பான தேவனை ஆராதிக்கின்றேனா?
Author: Rev. Dr. J. N. Manokaran