பொதுவாகவே ஜனங்கள் மத்தியஸ்தர் அல்லது இடைத்தரகர்களின் உதவியை நாடுவது என்பது இயல்பானது. உதாரணமாக குடும்பங்களுக்குள் கோபப்படும் தந்தையிடமிருந்து சலுகைகள் அல்லது சிலாக்கியத்தைப் பெற பிள்ளைகள் தன் தாயின் மத்தியஸ்தத்தை அல்லது ஆதரவை நாடுவதுண்டு. அதுபோல காரியங்களை நடப்பிக்க அல்லது அரசாங்கத்தின் உதவியை நாட தேசத்தின் குடிமக்கள் மத்தியஸ்தர்களை நாடுகின்றனர்.
இஸ்ரவேல்:
தேவன் இஸ்ரவேலை எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தார். பிரிந்த செங்கடலின் நடுவே மோசே அவர்களை வழிநடத்தினார். தேவன் அவர்களுக்கு மன்னாவையும் தண்ணீரையும் அற்புதமாக அளித்தார். வழியில் அமலேக்கியரை தோற்கடித்தனர். பின்னர் அவர்கள் சீனாய் வனாந்தரத்திற்குச் சென்றனர். மோசேயின் கட்டளைப்படி, அவர்கள் தங்களைத் தாங்களே பரிசுத்தம் பண்ணிக் கொண்டு தங்கள் கூடாரங்களில் காத்திருந்தார்கள். தேவ பிரசன்னம் இடி, மின்னல், புகை, மேகங்கள் மற்றும் பூகம்பம் ஆகியவற்றின் அறிகுறிகளாகக் காணப்பட்டது. இஸ்ரவேலர் நடுங்கினார்கள், நீண்ட எக்காளம் ஒலித்தது. மோசே மக்களை சீனாய் மலையின் எல்லை வரை அழைத்துச் சென்றார். மோசே பேசினார், தேவன் பதிலளித்தார். ஆனால் ஜனங்கள் பயம் கொண்டு தேவன் எங்களோடு பேச வேண்டாம்; நீரே பேசும் என்று மோசேயிடம் கூறினர். மோசேயை தங்கள் மத்தியஸ்தராக இஸ்ரவேல் விரும்பியது (யாத்திராகமம் 20:18-19).
யோபு:
அவர் தேவனால் நீதிமான் என்று சான்றளிக்கப்பட்டாலும், அவர் துன்பங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. தனக்கு ஏன் இப்படி நடக்கிறது என்று யோபு குழம்பினான். பாவத்தின் பலனை அவர் அனுபவிக்கிறார் என்று அவரது நண்பர்கள் குற்றம் சாட்டினர். இருப்பினும், யோபு எந்த பாவமும் செய்யவில்லை என்பதில் உறுதியாக இருந்தார், அது மாத்திரமல்ல அவர் குற்றமற்றவர் என்பது அவரைக் குறித்த சான்று. எனவே, தனக்கும் தேவனுக்கும் இடையில் ஒரு மத்தியஸ்தர் அல்லது நடுவர் இருக்க வேண்டும் என்று யோபு விரும்புகிறார் (யோபு 9:33-35).
மத்தியஸ்தர் ஒருவரே:
ஆக மனிதர்களுக்கு மத்தியஸ்தர் தேவை என்பது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் பூர்த்தி செய்யப்படுகிறது. "தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே" (1 தீமோத்தேயு 2:5). எல்லாரும் பாவம் செய்து, தேவனுடைய மகிமையை இழந்துவிட்டார்கள் (ரோமர் 3:23). பாவத்தின் சம்பளம் மரணம் (ரோமர் 6:23). ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உலகத்தின் பாவத்தை நீக்கும் தேவ ஆட்டுக்குட்டியாக மரண தண்டனையை ஏற்றுக்கொண்டார் (யோவான் 1:2). அவர் நித்திய பிரதான ஆசாரியராக தம்முடைய சொந்த இரத்தத்தை எடுத்துக்கொண்டு, பிதாவின் மகா பரிசுத்த சந்நிதியில் பிரவேசித்து, தேவனுடைய வலதுபாரிசத்தில் அமர்ந்தார் (எபிரெயர் 10:12). அப்போஸ்தலனாகிய யோவான் அவரை நமக்காக பரிந்து பேசும் நீதிபரர் என்று கூறுகிறார். "ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்" (1 யோவான் 2:1). ஆக, தேவதூதர்களோ, இறந்த அப்போஸ்தலர்களோ அல்லது புனிதர்களோ நமக்கு மத்தியஸ்தராக இருக்க முடியாது என்பதை மனதில் பதித்துக் கொள்வோம். ஆம், மத்தியஸ்தர் ஒருவர் மாத்திரமே.
நம்முடைய மத்தியஸ்தராகிய கர்த்தராகிய இயேசுவுக்கு நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் நன்றியை செலுத்துகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்