ரியான் ஃபோலே என்பவர் வேதாகமத்தைப் படிப்பது, வாசிப்பது மற்றும் தியானிப்பது போன்ற ஒழுக்கம் குறித்து அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பைப் பற்றி எழுதுகிறார் (தி கிறிஸ்டியன் போஸ்ட் அக்டோபர் 13, 2023). துரதிர்ஷ்டவசமாக, 53% சுவிசேஷகர்களும், 44% ஆஃப்ரோ-அமெரிக்கன் புராட்டஸ்டன்ட்டுகளும், 36% பிற புராட்டஸ்டன்ட்டுகளும், 21% கத்தோலிக்கர்களும் வாரத்திற்கு ஒருமுறை வேதாகமத்தைப் படிக்கிறார்கள். மற்றொரு ஆய்வில், ஆன்லைன் திருச்சபை ஊழியங்களில் கலந்துகொண்ட 74% மற்றும் நேரில் சென்ற 32% மட்டுமே வாரத்திற்கு ஒருமுறை வேதாகமத்தைப் பயன்படுத்துகின்றனர். ஆமோஸ் தீர்க்கதரிசி கூறியது போல, கடைசி நாட்களில், தேவனுடைய வார்த்தைக்கு பஞ்சம் உண்டாகும். “இதோ, நான் தேசத்தின்மேல் பஞ்சத்தை அனுப்பும் நாட்கள் வரும்; ஆகாரக்குறைவினால் உண்டாகிய பஞ்சமல்ல, ஜலக்குறைவினால் உண்டாகிய தாகமுமல்ல, கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சத்தை அனுப்புவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்” (ஆமோஸ் 8:11). இது கிடைக்கும் தன்மையைப் பற்றியது அல்ல, ஆனால் தேவனுடைய வார்த்தையை அளிப்பதில் இருக்கும் ஆர்வத்தைக் குறிக்கிறது.
பசி இல்லை:
ஒருவர் எதையும் சாப்பிடாமல், நீர்ச்சத்து குறைவாக இருந்தால், மூன்று முதல் ஐந்து நாட்களுக்குள் இறக்க நேரிடும். பெரும்பாலோர் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே தேவனுடைய வார்த்தையான ஆவிக்குரிய உணவை எடுத்துக் கொண்டுள்ளனர் என்பதை இந்த ஆய்வு காட்டுகிறது. அனேகமாக, அதுவும் பிரசங்க மேடையிலிருந்து வாசிக்கப்பட்டிருக்கலாம். துரதிர்ஷ்டவசமாக, ஆவிக்குரிய உணவுக்காக மக்களுக்கு பசியே இல்லை.
ஆர்வமில்லை:
பலருக்கு வேதாகமம் சுவாரஸ்யமாகவோ அல்லது உற்சாகமாகவோ இல்லை, மாறாக சலிப்பை ஏற்படுத்துகிறது. உற்சாகமான ஆசிரியர்கள் எந்தவொரு பாடத்தையும் சுவாரஸ்யமாக்குகிறார்கள். போதகர்கள் உட்பட வேதாகம ஆசிரியர்கள் ஆர்வமில்லாமல் போதிக்கிறார்கள், ஆவிக்குரிய அதிகாரம் (பரிசேயர்களைப் போல), கேட்பவர்கள் சலிப்படைவார்கள் மற்றும் வேதத்தைப் படிக்கும் பசியையும் இழக்க நேரிடும்.
விசுவாசம் இல்லை:
பலருக்கு வேதாகமம் படிப்பது ஒரு சடங்கு போலாகிவிட்டது. கிறிஸ்தவ குடும்பங்களில் பிறந்தவர்கள், வேதாகமத்தைப் படிப்பதை மந்திரங்களை ஓதுவது போல, ஒரு அத்தியாவசிய பாரம்பரியம் என்று அவர்கள் பார்க்கிறார்கள், மேலும் மனம், ஆத்துமா அல்லது ஆவியின் ஈடுபாடு இல்லாமல் கடமையே என செய்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, வேதாகமத்தைப் போதிப்பவர்கள்கூட தேவையற்ற காரியங்களைச் செய்வதன் மூலம் இப்படிப்பட்ட தோற்றத்தைக் கொடுக்கிறார்கள்.
ஆரோக்கியமான உணவு இல்லை:
வழக்கமாக நொறுக்குத் தீனிகளை உட்கொள்பவர்கள் ஆரோக்கியமான உணவை விரும்புவதில்லை, அத்தகைய ஆரோக்கியமான உணவை நிராகரிக்கவும் செய்கிறார்கள். ஆரோக்கியமான ஆவிக்குரிய உணவையும், நல்ல கோட்பாட்டையும் மக்கள் விரும்பாத அல்லது தேர்ந்தெடுக்காத அல்லது முன்னுரிமை அளிக்காத ஒரு காலம் வரும் என்று பவுல் தீமோத்தேயுவை எச்சரிக்கிறார். “ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு, சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்” (2 தீமோத்தேயு 4:3,4).
ஆன்லைனில் பங்கேற்பாளர்கள்:
நேரில் பங்கேற்பவர்களை விட ஆன்லைன் மூலமாக நடக்கும் ஊழியங்களில் கலந்துகொள்பவர்கள் சிறந்தவர்கள். அநேகமாக, இளைய தலைமுறையினர் தேவனுடைய வார்த்தைக்காக அதிக பசியுடன் இருக்கிறார்கள்.
தேவனுடைய வார்த்தைக்காக நான் பசியாக இருக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்