ஒரு இளைஞன் ஒரு வேதாகம ஆசிரியரிடம் கேட்டான். உங்கள் பிரசங்கத்தை ஆயத்தம் பண்ண என்ன மாதிரியான விளக்கவுரைகள், குறிப்பு வேதாகமம் மற்றும் வலைத்தளங்களைப் பயன்படுத்துகிறீர்கள் என்று கேட்டான். ஏற்கனவே மற்றவர்களால் ஆயத்தம் செய்து வைக்கப்பட்டிருக்கும் உரைகளிலிருந்து எடுப்பதாக சொல்வார் என்று அவன் நினைத்தான். ஆனால் அவரோ உபத்திரவத்திலிருந்து கற்றதாக கூறினார். "நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்" (சங்கீதம் 119:71). ஆம், உபத்திரவம் அல்லது பாடுகள் அல்லது துன்பங்களின் வாயிலாக தேவன் வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக் கொடுக்கிறார்.
1) தேவனின் மகத்துவம்:
யோபு எதிர்பாராத மற்றும் நியாயமற்ற துன்பத்தில் தேவனின் மகத்துவத்தையும் கிருபையையும் பற்றி நன்கு அறிந்து கொண்டான்.
2) தேவனின் நோக்கம்:
யோசேப்பு தேவனின் இறையாண்மை வல்லமையையும், எதிர்காலத்தில் இஸ்ரவேல் ஜனங்களின் வாழ்வு காக்கப்படுவதற்காகவும், வரவிருக்கும் மேசியாவுக்காகவும் அவனை தேவன் பயன்படுத்துகிறார் என்ற திட்டத்தையும் புரிந்துகொண்டான். "கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறுமளவும் அவருடைய வசனம் அவனைப் புடமிட்டது" (சங்கீதம் 105:19).
3) தேவனின் உணர்த்திவிப்பு:
மனந்திருந்திய மைந்தன் கதையில் மகன் தனது கலகக்குணம், கீழ்ப்படியாமை மற்றும் பாவச் செயல்களைப் பற்றி பசியோடும் பட்டினியோடும் இருக்கும்போது உணர்ந்தான், வருந்தினான் பின்னர் மனந்திருந்தினான்.
4) தேவனின் உறுதியான அன்பு:
எருசலேமின் அழிவைப் பற்றி எரேமியா புலம்பும்போது தேவக் கிருபை ஒருபோதும் குறையாதது என்பதை கற்றுக்கொண்டான் (புலம்பல் 3:22-23). உபத்திரவம் என்னும் பள்ளியில் நாம் நமது குறைபாடுகள், பாதிப்புகள் மற்றும் மாயைகளைப் பற்றியும்; வாழ்க்கையின் உண்மைகளையும்; தேவனின் பண்புகளையும் மற்றும் தேவ கிருபையையும்; தேவனின் வாக்குத்தத்தங்களையும் மற்றும் அவரது உண்மைத்தன்மையையும் நாம் அறிந்துக் கொள்ள முடியும். இந்தப் பாடங்கள் நம்பத்தக்க போதனைகளாக இருப்பதால் வாழ்க்கையைத் தொடுகிறது மற்றும் வாழ்க்கையையே மாற்றுகிறது.
5) தேவனின் வல்லமை:
நேபுகாத்நேச்சரால் சூடான சூளையில் வீசப்பட்ட சாத்ராக், மேஷாக் மற்றும் ஆபேத்நேகோ ஆகிய மூன்று மனிதர்கள் தேவ வல்லமையால் அற்புதமாக விடுவிக்கப்பட்டனர் (தானியேல் 3:8-25).
6) தேவனின் கிருபை:
பவுலின் சரீர ரீதியான துன்பம், தேவக் கிருபையின் மதிப்பை அறிய அவருக்கு உதவியது, இது அவரது பலவீனத்திற்கு துணைபுரிகிறது (2 கொரிந்தியர் 12:9).
7) தேவனளிக்கும் விடுதலை:
மோசே நாற்பது வருடங்கள் வனாந்தரத்தில் தன் மாமனாரின் ஆடுகளை மேய்க்க வேண்டியிருந்தது. அங்கு தேவன் பற்றியெரியும் புதரில் இருந்து அவரிடம் பேசினார் மற்றும் எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து மக்களை விடுவிக்க அழைப்பு பெற்றார்.
நோய்வாய்ப்பட்ட படுக்கைகள், சாம்பல் குவியல்கள், போர் இடிபாடுகள், சிறைச்சாலைகள், நெருப்பு உலை, வனாந்திரம்... போன்றவற்றின் மீது தேவனின் பள்ளி செயல்படுகிறது. மனித ஆளுமை (உள் நபர்) தேவனின் பயன்பாட்டு பாத்திரமாக மாறுவதற்கு ஒழுங்குபடுத்தப்பட்டு வடிவமைக்கப்பட வேண்டும். உபத்திரவங்களுக்கு நாம் பயப்படுகிறோமா அல்லது நம் வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக்கொள்ள அதற்கு அடிபணிகிறோமா?
நான் உபத்திரவம் என்னும் பள்ளியில் கற்றுக்கொண்டேனா?
Author: Rev. Dr. J. N. Manokara