“விசுவாசிகள் முகாம்” என்ற பெயருடன் விளங்கிய அந்தப் பெரிய பந்தலின் உள்ளே கைக் குழந்தையுடன் ஓட்டமும் நடையுமாக வந்த தாயம்மாளை கைத்தட்டலுடன் கூடிய பாடல் தொனி வரவேற்றது. பந்தல் மிகக் குறைந்த அளவே நிரம்பியிருப்பினும் மிக உற்சாகமாக பாடல்கள் பாடப்பட்டன. மல்லிகை மலர்போல வெண்ணிற ஆடையுடன் நிரம்பியிருந்த அந்த இடத்திற்கு தான் அந்நியராக இருப்பது போல் உணர்ந்தாள் தாயம்மாள். வெண்ணிற ஆடைகளும், பாடல்தொனியும் அவளைப் பரவசம் கொள்ள வைத்தன. “பரலோகமே இறங்கிவிட்டதோ?” என எண்ணினாள்.
சில மணித்துளிகள் உருண்டோடின. பந்தல் நிரம்ப ஆரம்பித்தது. வெண்ணிற உடைகள் மாத்திரமன்றி கதம்ப மலர் போல பல வண்ணச் சேலைகள் அந்தப் பந்தலை ஆக்கிரமித்தன.
தலைமை ஊழியர் “விசுவாசத்தினாலே ஆகாத காரியம் ஒன்றுமில்லை” என்பதைக் குறித்து அனலாகப் பிரசங்கித்துக் கொண்டிருந்தார். தாயம்மாவின் உள்ளம் உருகிக் கொண்டிருந்தது. அவள் கரங்கள் குழந்தையை இறுகப் பிடித்தது. “விசுவாசிக்கிறேன் ஆண்டவரே! என பிள்ளையை சுகமாக்கும்” அவள் இதயம் மன்றாடிக் கொண்டிருந்தது. ஜெப வேளையில் பாகாக உருகினாள் தாயம்மா.
கூட்டம் முடிந்தது. பட்டாம்பூச்சிகளெனப் பலர் பறக்க, சிலர் தலைமை ஊழியரிடம் ஜெபிப்பதற்காக வரிசையாக நின்றனர். தாயம்மாவும் நின்று கொண்டாள். அவள் முறை வந்தது “ஐயா ஆறுமாதமாக பிள்ளைக்கு காய்ச்சல் விட்டு விட்டு வருகிறது. எத்தனையோ டாக்டரிடம் காட்டிட்டோம் பலனில்லை. நீங்க கை வைத்து ஜெபிங்கய்யா!” அவள் விழிவழி கண்ணீர் மாரி கொட்டியது. எலும்பும் தோலுமாக இருந்த பிள்ளையைக் காட்டினாள்.
அவளை ஏற இறங்கப் பார்த்தார் தலைமை ஊழியர். “இவர்கள் நம் சபைக்கு வருவதில்லை.” இகழ்ச்சியுடன் ஊழியர் ஒருவர் கூறினார். தாயம்மாவின் கண்கள் தலைமை ஊழியரை எதிர்பார்ப்போடு நோக்கின. அவள் எதிர்பார்த்த மனதுருக்கம் அவர் விழிகளில் தெரியவில்லை.
“அம்மா நீ இயேசுவை விசுவாசிக்கிறாயா?”என்ற தலைமை ஊழியரின் கேள்விக்கு.
“ஆம் ஐயா! நான் விசுவாசிக்கிறேன்” என பட்டென்று சொன்னாள் தாயம்மா.
“அப்படியானால் நீ இருக்க வேண்டிய சபை இதுவல்லவா? வேறுபடுத்தப்பட்ட ஜீவியத்திற்குள் வர வேண்டாமா?” அவர் பேச்சிடையே குறுக்கிட்டாள் தாயம்மா, “ஐயா! முதலில் என் பிள்ளைக்காக ஜெபியுங்கள் ஐயா” கெஞ்சினாள்.
“அம்மா! நீ முதலில் கர்த்தருடைய பிள்ளையாக மாறு. அதன்பின் உன் வேண்டுதல்கள் கேட்கப்படும்” அவர் தன் கரத்தை அடுத்து நின்றிருந்த வெள்ளைச் சேலையின் தலைமீது வைத்தார்.
ஏமாற்றமடைந்த தாயம்மா துக்கத்தோடு வீடு திரும்பினாள். அவள் உள்ளம் ஓலமிட்டது. *என்பாவங்களை அறிக்கையிட்டு, மீட்புப்பெற்று, என்னையே தேவனுக்கு அர்ப்பணித்து, வேத வாசிப்பிலும், ஜெபத்திலும் என் நேரத்தை செலவழிக்கிறேன். நான் கர்த்தருடைய பிள்ளை இல்லையா? யாருக்கும் எந்தத் தீமையும் செய்தது... ஏன் எண்ணியது கூட இல்லையே!”
வீட்டிற்கு அருகில் வந்தவளை நோக்கித் தலைவிரி கோலமாக எதிர்வீட்டு சாராள் எதிர் கொண்டாள்.
"அக்கா! உங்களோடு சேர்ந்து மீட்டிங்குக்கு வராம போயிட்டேனே! ஊழியக்காரங்க எல்லாம் அங்கதானே இருக்காங்க?”
“என்னம்மா! என்னம்மா நடந்தது? “தாயம்மா வினவ,
"ரூத்துக்கு அந்தப் பிசாசு வந்திருச்சு. ஜன்னி மாதிரி இழுத்துக்கிட்டு உளர்நா!” என்று கூறிக்கொண்டே ஓட ஆரம்பித்தவளை கையைப் பிடித்து நிறுத்திய தாயம்மா,” “நம்ம குருவானவரைக் ௯ப்பிட்டாயா?” எனக் கேட்டாள்.
“என்னக்கா ஒண்ணும் தெரியாத மாதிரி பேசுறேங்க? எத்தனை தடவை கூப்பிட்டிருப்பேன்? அவங்க வரமாட்டங்கன்னு உங்களுக்குத் தெரியாதா?” அவள் வார்த்தைகளில் விரக்தி தெரிந்தது “வரம் பெற்ற ஊழியர்களால்தான் அக்கா இது முடியும்!” உறுதியாகக் கூறியவளை, இடைமறித்து,
“ஆனால் அவர்கள் வரமாட்டார்கள் சாரா! நீ அவர்கள் சபையைச் சேர்ந்தவளாய் இருந்தால்தான் வருவார்கள்!” வருத்தத்தோடு சொன்னாள் தாயம்மா. ஒரு கணம் திகைத்த சாராள், “நாங்க அவங்க சபையிலேயே சேர்ந்துக்கிறோம்ன்னு சொல்லி, அவங்க கால்ல விழுந்தாவது கூட்டிக்கொண்டு வர்றேன்” என்று கூறியபடி தொடர்ந்து ஓடினாள்.
“ஆவியின் வரங்கள் மீது வாஞ்சையற்ற பொறுப்பற்ற ஊழியர் கூட்டம் ஒருபுறம்,வரம் பெற்றிருந்ததும் தன்னைச் சார்ந்த ஒரு சிலருக்கே அதைப் பயன்படுத்த விழையும் சுயநல ஊழியர் கூட்டம் மறுபுறம்! இருவராலும் சிதறடிக்கப்படும் மந்தை! சிந்தனை ஓட்டத்திற்கு அணை போட்டவளாக, தன் வீட்டிற்குப் போக மனமற்றவளாக சாராள் வீட்டினுள் நுழைந்தாள்.
ரூத்தின் மீது சில போர்வைகளையும், கம்பளியையும் போட்டு அவளுடைய தகப்பனும், தமயனும் அவளை அழுத்திப்பிடித்துக் கொண்டிருக்க, அவள் கையும் காலும் துடித்துக் கொண்டிருக்க,அவள் வாய் உளறிக் கொண்டிருந்தது.
10 வயதுப் பிள்ளை படும்பாடு தாயம்மாவின் உள்ளத்தை உடைத்து, சுக்கு நூறாக்கியது. சொல்லொண்ணா மனதுருக்கம் அவள் நெஞ்சை நிரப்பியது. கண்கள் கண்ணீரைக் கொட்டின. நிமிர்ந்து பார்த்தாள்.
“நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம் (1 யோவான் 5;4) என்று சுவரில் தொங்கிய வாசகம் அவள் விழி வழி சென்றது திரும்பினாள். எதிரேயிருந்த காலண்டரில் காணப்பட்ட “உலகத்திலிருக்கிறவனிலும் உங்களில். இருக்கிறவர் பெரியவர்” 1யோவான் 4:4 என்ற சத்திய வசனம் அவளோடு பேசியது. திரும்ப வாசித்தாள்.
“என் இயேசப்பாவிற்கு என்றோ என் உள்ளத்தைத் தந்துவிட்டேன். அப்படியென்றால்... என்னுள் இருப்பவர் இயேசு! இயேசு உலகத்திலிருக்கிறவனிலும்.... அவள் இதயம் அவளோடு பேசியது. ஏதோ இனம் புரியாத வல்லமை அவள் உடலில் இறங்கியது. அனலாகக் கொதித்துக் கொண்டிருந்த தன் பிள்ளையை ஓர் ஓரமாய் படுக்க வைத்தாள். உத்வேகத்தால் மேஜை மீதிருந்த வேதத்தைக் கையிலேடுத்துக் கொண்டு வந்து ரூத்தின் தலைமீது அழுத்தி வைத்து, “இயேசுவின் இரத்தம் ஜெயம்!” எனக் கூறிக்கொண்டே இருந்தாள்.
ரூத் பயங்கரமாகத் கத்தியபடி திருமறையைத் தள்ள முயற்சித்தாள்.
தலைமை ஊழியருடனும், மற்றொரு ஊழியருடனும் வீட்டினுள் நுழைந்த சாராளின் செவிகளை,
“இயேசு கிறிஸ்துவின் வல்லமையுள்ள நாமத்தினாலே நான் உனக்குக் கட்டளையிடுகிறேன். பிசாசே! நீ வெளியே போ!” என்ற தாயம்மாளின் கட்டளை வாக்கியம் நிரப்பியது.
“ஐயோ! எரியுதே! எரியுதே! போறேன். போறேன்!” எனக் கத்திய ரூத் மயக்கமடைந்தாள். அடுத்தகணம் எதுவுமே நடைபெறாதது போல் ரூத் எழுந்து அமர்ந்தாள். அனைவருக்கும் ஓரே ஆச்சரியம்.
“ரூத் என் மகளே!” எனக் கதறியபடி ஓடிப்போய் சாராள் தன் மகளை அணைத்துக் கொண்டாள்.
“ஸ்தோத்திரம் ஐயா! வாங்க” என்று கரங்குவித்த தாயம்மா, தன் பிள்ளையைத் தூக்கினாள். அனலாகக் கொதித்த உடல் தண்மலரெனக் குளிர்ந்திருந்தது. ஆறு திங்களுக்குப் பின் அன்றலர்ந்த மலர்போல் அழகாகச் சிரித்தது அந்தப் பிஞ்சுக் குழந்தை.
“ஸ்தோத்திரம்பா! ஸ்தோத்திரம்பா! என் பிள்ளையையும் என்னையையும் தேவன் தொட்டுவிட்டார்!” மகிழ்ச்சியால் கூவினாள் தாயம்மா, ஆச்சரியமுமாகப் பார்த்த ஊழியாகள் சிலையெனச் சமைந்தனர்.
“நானல்ல! என்னுள் இருப்பவரே பெரியவர். அவர் விரும்பித் தங்குமிடம் அர்ப்பணிக்கும் உள்ளங்கள்தான்! என்பதை இனியாவது உணர்வார்களா?
இந்தக் கதை நிலாக்காயுது என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.