இரட்சிப்பு
மனுக்குலம் முழுவதும்: முழு ஏக்கத்தோடு வேண்டி நிற்பது இரட்சிப்பு. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிலையிலும் இரட்சிப்பு தேவை.கடின உழைப்போடு பல கஷ்டங்கள் பிரயாசங்கள் ஏற்று மனிதன் இந்தஇரட்சிப்புக்காக பல திசை நோக்கி இடம் நோக்கி புண்ணிய ஸ்தலம்நோக்கி அலைந்து திரிகிறான். மனிதன் கடவுளை அடைய விரும்புகிறான்ஆனால் கடவுளோ மனிதனை தேடி சிலுவையில் வந்து தனது இரத்தம்சிந்தி மீட்டுக் கொண்டாரென்ற இந்த உண்மையே .இரட்சிப்பின்அடிப்படை. இயேசுகிறிஸ்து எனது பாவங்களுக்காக மரித்தாரெனஒப்புக்கொண்டு விசுவாசத்தோடு அவரது இரத்தத்தினால் தன்னை கழுவி சுத்திகரித்துக்கொள்வதே இரட்சிப்பு. இது இன்றைக்கேசொந்தமாக வேண்டியது. என்றைக்கும் நிலைத்து நிற்பது. இதுஇலவசமானது உண்மையான மனந்திரும்புதலை கொண்டு இலவசமானஇந்த பாவமன்னிப்பை பெற்றுக் கொள்வதே இரட்சிப்பு. இன்றேஇரட்சிப்பின் நாள். இதை அனுபவமாக்க வேண்டும்.
இரட்சிப்பின் அனுபவம்
விலையேறப் பெற்ற இரட்சிப்பு அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்து கொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும், தேவன் தாமே சாட்சி கொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம். எபிரேயர் 2 : 4 இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்களா? ஆண்டவரை சொந்த இரட்சகராக ஏற்றுக் ‘கொண்டிருக்கிறீர்களா? “ஆண்டவருக்கு ஒப்புக் கொடுத்திருக்கிறீர்களா? இது போன்ற கேள்விகளுடே நாம் நடந்து வந்திருக்கிறோம். இக்காலத்திலே இக்கேள்விகள் குறைவாகவே கேட்கப்படுகின்றன. இரட்சிப்பு ஒவ்வொருவருடைய வாழ்விலும் அவசியம். பாவங்களிலிருந்து விடுதலை அவசியம்.” வியாதிகளிலிருந்து பயங்கரங்களிலிருந்து, பாதுகாப்பற்ற தன்மைகளிலிருந்து விடுதலை அவசியம். மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் ஆதிமுதல் சொல்லப்பட்டு வரும் ஒன்று. பழையன களைந்து புதியன தரித்துக் கொள்ளுதல் முக்கியம். புதிய வாழ்வு புதிய திருப்பம் தேவை. இது நமது வாழ்விலே ஒரு நாள் ஆரம்பித்து தொடர்ந்து நடைபெற வேண்டிய ஒன்று. இந்த விடுதலை வாழ்வை மீட்பை காலந்தொட்டு கேட்டு வந்திருக்கிறோம். சிறு வயது முதல் வாலிபர் வட்டத்திலும், - நடுவயதிலும் தெரிந்தே வந்திருக்கிறோம். இவ்விடுதலை வாழ்வு மூதாதையர் மூலம் கேள்விப்பட்ட ஒன்று. — உண்மை என உணர்த்தப்பட்ட ஒன்று. பிரசங்கிக்கப்பட்ட ஒன்று. கேள்வி கேட்கப்பட்ட ஒன்று இந்த செய்தியை உறுதியாய் பிடித்திருக்கிறோமா? என்னை தேடி வந்த இந்த இரட்சிப்பின் செய்தியை உறுதியாய் ஏற்றுக்கொண்டிருக்கிறேனா? இயேசு கிறிஸ்து எனக்காக சிலுவையில் அறையப்பட்டு மரித்து உயிர்த்தெழும்பி பரிசுத்த ஆவியானவரை அனுப்பி, அவர் மூலம்அவரது இரத்தத்தின் மூலம் பாவமன்னிப்பு உண்டாயிற்று என்ற மாறாத பிரமாணத்தை சொந்த வாழ்வில் சொந்தமாக்கியிருக்கிறோமா? இதற்கு சம்மதம் சொல்லி இருப்போமென்றால் நல் திருப்பங்கள் நம்மில் ஏற்பட்டிருக்கும். இவ்வளவு பெரிய இரட்சிப்பைக் குறித்து கவலையற்றிருக்கிறோமா? இந்த இரட்சிப்பு இயேசுகிறிஸ்துவால் உறுதிபண்ணப்பட்டு அற்புத அடையாளங்களால் நிருபணம் பெற்று தூய ஆவியானவரால் சாட்சியிடப்பட்டு வருகிறது. அவராலே சுத்திகரிப்பு பெற்றும் சுத்திகரிப்பாக்கப்பட்டும் இருக்கிறோம்.பழைய காணியாட்சியிலே இருந்து பிடுங்கி எடுக்கப்பட்டு, புதிய தளத்திலே நாட்டப்பட்டிருக்கிறோம். இரட்சிப்பின் அனுபவத்தில் பரிசுத்த ஆவியானவர் இயேசு கிறிஸ்துவின் வெளிப்பாட்டை தந்திருக்கிறார். புதிய ஆவியை தந்திருக்கிறார். எல்லாம் புதிதாயின, பழைய பழக்க வழக்கங்களிலிருந்து வெளி வர பெலனும் ஆவியானவரே தந்திருக்கிறார் இனி நானல்ல கிறிஸ்து இயேசுவேஎனக்குள் ஜீவிக்கிறாரென உன்னத அனுபவத்தையும் அச்சாரமாக தந்தவரும் அவரே. பழைய வாழ்வுக்கும் புதிய வாழ்வுக்கும் வேறு பிரித்து ஒரு அறுவை சிகிச்சை துண்டிப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். துவக்க நாள்ஒன்று வேண்டும். கிருபையினால் இந்த துவக்கம் ஒரு நாளிலே துவக்கம் பெற வேண்டும். அன்றாடகம் இந்த இரட்சிப்பு நடை பெற வேண்டும். இன்றே இரட்சிப்பின் நாள் என எல்லாருக்கும் சொல்லியாக வேண்டும். இவ்வாறான பெரிய இலவசமான இரட்சிப்பைகுறித்துகவலையற்றிருப்போமென்றால் தண்டனைக்கு தப்ப முடியாதே. இன்றைக்கே இரட்சிப்பு இயேசுகிறிஸ்துவின் மூலமே இரட்சிப்பு. நாம்இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழே பூமியின் மேலே இயேசுகிறிஸ்துவின் நாமமே அல்லாமல் வெறொரு நாமம் கட்டளையிடப்படவில்லை.
இரட்சிப்பின் திட்டம்
ஏனென்றால் தமக்காகவும் தம்மாலேயும் சகலத்தையும் உண்டாக்கினவர், அநேகம் பிள்ளைகளை மகிமையில் கொண்டு வந்து சேர்க்கையில் அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபத்திரவங்களினாலே. பூரணப்படுத்துகிறது. அவருக்கேற்றதாயிருந்தது. எபிரேயர் 2:7-10
இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பு இல்லை என்பது உலகெங்கும் சொல்லப்பட்டு வந்த வேதமொழி. மனிதன் செய்த பாவத்துக்கு ஆடு மாடு இரத்தம் சிந்துவது கொடுமை. பிராயசித்தம் பரிகாரம் என்ற பெயரில் விலங்கினங்களை பறவையினங்களை சிதைப்பதென்பதை சகித்துக்கொள்ள முடியாது. பரிகாரம் தேடி தேடி பலனில்லை, கடவுளே பரிகாரியாக பதிலாளாக நமக்காக தண்டிக்கப்பட்டு நமது பாவத்தை மன்னிக்க அவரே இரத்தம் சிந்த முடிவு எடுத்ததே கல்வாரி காட்சி. அதுவே பரிகாரம். அப்படி பரிகாரம் செய்ய இறைமைந்தரே இயேசுவே இந்த பூலோகத்துக்கு அனுப்பப்படும் திட்டமேஇரட்சிப்பின் திட்டம். காலம் நிறைவேறின போது தன்னையே பாவ நிவாரணமாக கொடுப்பதற்கு பாவமில்லாத அவரை பாவமாக்க தேவனே சம்மதம் தெரிவித்ததே தேவ திட்டம். இவ்வளவாய் அன்பு கூறுவதே கடவுளுடைய சம்மதம். ஒரே பேறான குமாரனை தேவ தூதரில் மகிமை குறைந்தவராக மாற்றுவதே இதற்கு வழியாக தெரிந்தது. அப்படி சிறுமைப்படுத்தப்பட்டு இப்பூமிக்கு அனுப்பப்பட்டு நமது பாவங்களுக்காக சரித்திரத்திலே பிறந்து ஊரறிய வாழ்ந்து மரித்து, சிலுவையிலே அந்த கோலமெடுத்து பாவத்துக்கு பரிகாரம் செய்தார். அவர் நமக்காக மரித்தார். அப்படி அவர் நமக்காக சிலுவை பரியந்தம் மரணத்தில் தன்னை ஊற்றிக் கொடுத்து ஒப்புக்கொடுத்ததினாலே பிதாவானவர் அவருக்கு எல்லா நாமத்துக்கும் மேலான நாமம் தந்தருளி மகிமைப் படுத்தினார். பூலோகக் குடும்பமும் பரலோக குடும்பமும் இனைப்புப் பெற்றது. திருச்சீலை கிழிந்தது. நம்மை அவரது இரத்தத்தினாலே கடவுளோடு ஒப்புரவாக்கினார். பாவத்தின் சம்பளம் மரணம் என்ற சட்டத்தை திருத்தி இயேசுகிறிஸ்துவின் கிருபை வரமோ நித்திய ஜீவன் என மாற்றி எழுதப்பட்டது. நமக்கெதிராக இருந்த குற்றம் சாட்டும் எல்லா கையெழுத்தும், அதிகாரமும் குலைத்துப் போடப்பட்டன. தொலைந்துபோயின. இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி சுத்திகரிக்குமென்ற சுத்திகரிப்பின் தொனி எல்லா இடமும் சென்றடைந்தன. இதுவே தேவ திட்டம். இரட்சிப்பின் திட்டம். மனுக்குலம் மீட்பு கண்டது. சத்துருவாகிய பிசாசின் தலை நசுக்கப்பட்டது. நானே பரிகாரியாகிய கர்த்தர் என்ற வேத வாக்கு மெய்யானது. பிரகடனப்படுத்தப்பட்டது. ஏற்றுக் கொள்ளப்பட்டது. மனந்திரும்புதலும், பாவ மன்னிப்பும் அப்போஸ்தலர் காலம் துவங்கி இன்றும் பெருகிவருகின்றன. இரட்சிப்பின் திட்டம் செயலாகிறது.
இரட்சிப்பின் குடும்பம்
எப்படியெனில், பரிசுத்தஞ்செய்கிறவரும் பரிசுத்தஞ்செய்யப்படுகிறவர்களுமாகிய யாவரும் ஒருவராலே உண்டாயிருக்கிறார்கள்: இதினிமித்தம் அவர்களைச் சகோதரரென்று சொல்ல அவர் வெட்கப்படாமல் ... எபிரேயர் 2: 11-14 இரட்சிப்பின் குடும்பத்தின் தகப்பனார் தேவன். மூத்த குமாரர் இயேசு கிறிஸ்து. அன்பு குடும்ப மொழி- உறவு ஒப்புரவாகுதல் மன்னிப்பு மகிழ்ச்சி இக்குடும்பத்தில் மூத்தகுமாரர் நமக்கெல்லாம் மூத்த சகோதரராவார். அவரது சுத்திகரிப்பின் மூலம் இந்த கனமான அந்தஸ்தை பெறுகிறார். அழுக்கான கந்தையான நம்மை கன்னியப்படுத்துகிறார். தன் இரத்தம் தெளித்ததினால் சுத்தமானீர்கள் என்று சொன்னார். சுத்தப்படுத்தினவர் அவரே, சுத்தமாக்கப்பட்டவர்கள் நாமே சுத்தமாக்கியவருக்கும் சுத்தப்படுத்தப்பட்டவருக்கும் ஒரே தகப்பன். கடவுளை அப்பா என அழைக்க புத்திர சுவீகார ஆவியை தந்தவரும் அவரே. பயப்படுத்தும் உறவல்ல அப்பா பிதாவே என்றழைக்க புத்திரசுவீகார உறவு பெற்றோம். அவரே பரிசுத்தமானார். அவரே பரிசுத்தவான்களென்றும் அழைக்கிறார்.தேவனுடைய பிள்ளை என்ற அச்சாரத்தை கொடுத்தவரும் அவரே. கடவுள் எனக்குக் கொடுத்த பிள்ளைகளென. குடும்ப உறவை பலப்படுத்துகிறார். நாம் மாம்சமும் இரத்தமும் கொண்டவர்களாயிருப்பதனால் அவரும் மாம்சமும் இரத்தமும் கொண்டு மனிதனானார். மனிதனாகிய என்னை வாழ வைத்து உண்மை மனிதனாக்கினார். மனிதனை மனிதனாக வாழ வைத்ததே இந்த சுவிசேஷம். மிருகமாய் அலைந்த என்னை தன் அன்பின் இரத்தம் கொண்டு கழுவி சொந்த குடும்பத்தில் குழந்தை பாசத்தோடு சகோதர பாசத்தோடு குடும்ப பாசத்தோடு நிலை நாட்டினார். இதுவே இரட்சிப்பின் குடும்பம் பிசாசானவனை அழிக்கவே இப்படி செய்தார். இனி மரண பயமுமில்லை இரட்சிப்பு. பயத்திலிருந்து விடுதலை அடிமைத்தனத்திலிருந்து விடுதலை. இயேசுவின் குடும்பத்தில் இணைந்திருக்கிறேன். இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு. அன்பு ஒன்றே அவர் நடுவில் உண்டு. ஆமென்.
இரட்சிப்பின் விடுதலை
ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்கு உள்ளானவர்கள் யாவரையும் விடுதலை பண்ணும்படிக்கும் அப்படியானார். எபிரேயர் 2:15.
விடுதலை விடுதலை பெற்றேன். விதவிதமான பாவ பழக்கங்களிலிருந்து விடுதலை அச்சுறுத்தும் பயங்களிலிருந்து விடுதலை. அடிமைத்தனத்தினின்று விடுதலை. இரட்சிப்புக்குள்ளாக வந்தவர் சுதந்திரத்தின் ஆவிக்குள்ளாவார். அடிமை சங்கிலிகளெல்லாம் விலங்கொடிக்கப்பட்டன. பாவத்தினால் கூனிப் போயிருந்த எனக்கு விடுதலை இந்த விடுதலை செய்தி அறிவிப்பு வேத வசனத்தின் மூலம் வருகிறது. ஆட்டுக்குட்டி சேற்றிலிருந்து தூக்கி எடுக்கப்பட்டால் எழுந்து ஒடும். பாவத்தின் ஆணிவேர் அறுக்கப்பட்டதினாலே விடுதலை. இனி பாவத்தின் விளைவு என்னை தொடாது. பழைய பாவம் என்னை தொடராது. சாபம் அகன்று போனது. அடிமைத்தன வாழ்வை என்னிலிருந்து அகற்றிப்போட்டார் எண்ணத்தில் உணர்வில் பலவிதமான அடிமைத்தனத்தில் இருந்த நாட்கள் உண்டு. அவைகள் இனி என்னை அணுகாது. மரணபயம் என்னை ஆட்கொண்டிருந்தது விடுதலை. மரணமே உன் கூர் எங்கே?பாதாளமே உன் ஜெயம் எங்கே? என் மரணத்தின் கூரைமுறித்தவர். பாதாளத்தின் ஜெயத்தை விழுங்கியவர் எனக்கு விடுதலை தந்தார். முற்றிலும் மரண பயம் நீங்கி விடுதலை பெற்றேன். விடுதலையை அனுபவமாக்க வேண்டும். பல நாட்கள் கட்டி வைக்கப்பட்ட யானை சங்கிலியை தரித்தெரிந்த பின்னும் அந்த யானை அதே நிலையிலே சுற்றி சுற்றி நிற்கும். அதுபோல பழைய நிலையிலே நின்று போகக்கூடாது. விடுதலையை ஏற்று புதிய நிலைக்குள் பிரவேசிக்க வேண்டும். புதிய அறிக்கைகள் வெளி வர வேண்டும். புதிய செயல்கள் புதிய புதிய சாட்சிகள் கூற வேண்டும். எல்லாம் புதிதாயின என்பதற்கு சாட்சி பகர வேண்டும். விடுதலை பெற்றவர்கள் மற்றவர்களையும் இந்த இரட்சிப்பின் விடுதலைக்கு அழைப்பு கொடுக்க வேண்டும். சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும். இயேசுகிறிஸ்துவே சத்தியம்.
இயேசு கிறிஸ்துவே உங்களை விடுதலையாக்குகிறவர், குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள். ஆமென்.
இரட்சிப்பின் வழி
ஆதலால் அவர் தேவதூதருக்கு உதவியாகக் கைகொடாமல், ஆபிரகாமியின் சந்ததிக்கு உதவியாகக் கைகொடுத்தார். எபிரேயர் 2:16
ஆதி மனிதன் பாவம் செய்ததினாலே பாவம் உலகில் பிரவேசித்தது. பாவத்துக்கு பரிகாரம் வேண்டப்பட்டது. தோட்டத்திலே பரிகாரம் அறிவிக்கப்பட்டது. ஸ்தீரியின் வித்து பிசாசின் தலையை நசுக்குமென்ற தீர்க்க உரை தெரிவிக்கப்பட்டது. கடவுள் இரட்சிப்பின் வழியை தேவ தூதர்கள் மூலமாக செய்யாமல் மனிதனின் வம்சத்திலே இதை செய்ய திட்டமிட்டார். வந்து போய் பணிவிடை செய்து திரும்பும் தூதர்களுக்கு இச்சிலாக்கியம் கிட்டவில்லை. மாறாக கடவுள் மனிதர்களின் மத்தியில் தோன்றி செயல் திட்டத்தை துவக்கினார். ஆபிராகமை அழைத்து ‘நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்” என வாக்குத்தத்தம் அருளினார். ஆபிரகாம் விசுவாசித்தான் அவனுடைய விசுவாசமே நீதியெனப்பட்டது. விசுவாச சந்ததியும் பெருகினது. ஆபிரகாம் மூலம் தேசங்கள் உருவாயின. ஆபிரகாம் விசுவாசிகளின் தகப்பனார். விசுவாசத்தைச் கொண்டே இரட்சிப்பின் திட்டத்தை கொண்ட ஆண்டவர் விசுவாச சந்ததியை ஆசீர்வதித்தார். சரித்திரத்தின் நடுவிலே ஆபிரகாமின் ஆண்டவரே என அழைக்கும் விசுவாச சந்ததியாரும், ஈசாக்கின் ஆண்டவரே என சொல்லும் கீழ்ப்படிதலின் ஜனத்திரளும், யாக்கோபின் ஆண்டவரே என கூறும் கடவுளை அனுபவமாக்குகிற மக்களும் சந்ததியாயின. தீர்க்கன் மூலமும் நியாயாதிபதியின் மூலமும் இராஜாக்கள் மூலமும் பங்கு பங்காக தன்னை இந்த சந்ததியாருக்கு வெளிப்படுத்தி தாவீதின் வம்சத்தை இரட்சிப்பின் வழியாக்கினார். அந்தசந்ததியில் முன் குறித்து , முன்னுரைத்து, மனிதர்களின் மத்தியில் வாசம் பண்ணி மனிதருக்கு இரட்சிப்பின் தர்மத்தை இயேசுகிறிஸ்துவில் நிறைவேற்றினார். அவரை மனிதனாக்கி வெறுமையாக்கினதினாலே தாவீதின் குமாரன் என அழைக்கப்பட்டார். மேசியா என்றும் சொன்னார்கள். அபிஷேகிக்கப்பட்டவரெனவும் வெளிப்படுத்தப்பட்டார். பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பாரென இயேசு என பெயர் பெற்றார். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்களென விசுவாசத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. கிரியையினால் அல்ல. விசுவாசத்தினாலே இரட்சிப்பு கிருபையாக அளிக்கப்பட்டது. ஆபிரகாமின் பிள்ளைகளாக இன்றளவும் ஆபிராகமை விசுவாசிகளின் தந்தையாகக் கொண்டு விசுவாச உலகில் கிறிஸ்து இயேசுவின் இரட்சிப்பை வம்ச வழி பட்டியலிட்டு வேதம் நமக்கு கற்று கொடுத்தது. மண்ணில் கால்பதித்தவர் இயேசுகிறிஸ்து வேதாகம மனிதர் வம்சவழி வந்தவர். கால் பதிக்காத பதிக்க முடியாத தூதர்களை கடவுள் பயன்படுத்தாமல் ஆபிரகாமின் வம்ச வழியை தெரிந்து மனுஷகுமாரன் மூலம் மனுக்குலத்தை இரட்சித்தார்.
இரட்சிப்பின் ஸ்திரத்தன்மை
அன்றியும், அவர் ஜனத்தின் பாவங்களை நிவர்த்தி செய்வதற்கேதுவாக, தேவ காரியங்களைக் குறித்து இரக்கமும் உண்மையுமுள்ள பிரதான ஆசாரியராயிருக்கும்படிக்கு எவ்விதத்திலும் தம்முடைய சகோதரருக்கு ஒப்பாக வேண்டியதாயிருந்தது. ஆதலால், அவர் தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவி செய்ய வல்லவராயிருக்கிறார். எபிரேயர் 2:17,18.
இயேசுகிறிஸ்துவின் நாமத்திலே இலவசமாககிடைத்த இந்த இரட்சிப்பை காத்துக் கொள்ள வேண்டிய நமது பொறுப்பு. இரட்சிப்பு நிறைவேற பிரயாசப்படுங்கள். இரட்சிப்பில் கடவுளது பங்கும் நமது பங்கும் உண்டு. விசுவாசத்தைக் கொண்டு இரட்சிப்பை அடைகிறோம். ஒரு நாளில் நடந்து முடியும் ஒன்றல்ல. ஸ்திரத்தன்மை அவசியம்.பிசாசையும் உலகத்தையும் பாவத்தையும் வெறுக்கிறேன் என நிலைபாட்டில் நிறைந்த அர்ப்பணிப்பு அவசியம். எவனை விழுங்கலாமென சுற்றித்திரிகிற எதிரியானவனுடைய வலையில் சிக்கிக் கொள்ளாமல் விழிப்புணர்வும்எச்சரிப்பும் தேவை. உண்மையாயிருக்க முடியவில்லையே எனஅங்கலாய்ப்பின் நேரங்கள் வரும் பாவங்களுக்குத்தக்க என்னை தண்டியாதேயுமென அறிக்கை செய்து இரக்கங்களுக்கு மன்றாடும் நேரம் எடுத்து கொள்ள வேண்டும். பாவத்தின் விளைவில் இருந்து விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம். பாவ பிரசன்னம் உலகில் உண்டு. தொடாதே, ருசிபாராதே என்ற காரியங்களில் கவனமாயிருக்க வேண்டும். முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்போதோ அவரது விலையேறப் பெற்ற இரத்தத்தினால் சமீபமானோம். இனி தொடர்புகளில் உறவுகளில் எச்சரிப்போடு வாழும் போது ஸ்திரத்தன்மையுடன் இருப்போம். விலக்கி வைத்தவைகளில், விலகி நிற்பவைகளில் அர்ப்பணிப்புடன் அந்த எல்லைகளுக்கு விலகி ஓட வேண்டும். ஆண்டவர் இந்த உடன்படிக்கையில் உண்மையுள்ளவராயிருக்கிறார். அது போல நாமும் உண்மையுள்ளவர்களாயிருக்க வேண்டும். அவர் நம்மை கைவிடுவதில்லை நமக்காக பரிந்து பேசுகிற பிரதான ஆசாரியர் நமக்கு உண்டு பெலவீனத்தில் பெலன் கேட்டு ஜெபிக்க வேண்டும். பெலப்படுத்துவர், ஸ்திரப்படுத்துவார், பாவ பிரசன்ன வாழ்வில் பாவக்கறை பாடாதபடி நம்மை விலக்கி பாவத்துக்கு சோதனைக்கு தப்பிப் போக வழியும் உண்டு பண்ணுவார். தெரிந்த தெரிந்தெடுப்பில் நாம் உறுதியோடு இருக்கும் போது அவரும் தெரிந்து கொண்டவர்கள் விஷயத்தில் நன்மைக்காக செயல்படுவார். சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவி செய்ய வல்லவராயிருக்கிறார். தேவன் ஒருவரே மத்தியஸ்தரும் ஒருவரே. அவரது இரக்கங்களுக்கு முடிவில்லை. இரக்கமுள்ள சந்நிதானத்துக்கு களைப்படையாமல் அனுதினமும் தைரியமாய் கிட்டிச் சேர்ந்து இரட்சிப்பின் ஸ்திரத்தன்மையை உணர வேண்டும். இரக்கம் பெறுவோம். சோர்ந்து போகிறவர்களுக்கு சத்துவம் அளிப்பவர் அவரே. அவரது கிருபை வரமோ நித்திய ஜீவன் ஏற்ற நேரத்தில் சகாயம் கிடைக்கும் இவரது சமூகத்தை நாடுவோம். இரட்சிப்பு கர்த்தருடையது. ஆமென்.
Author Bro. C. Jebaraj