தொடர் – 6
வருடாந்திர மருத்துவச் சோதனைக்காகச் சென்றவர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி காத்திருந்தது. ஒரு அங்குலம் புற்றுநோய் கட்டியுள்ளது என 1993ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை ஸ்டேன்லி மருத்துவமனையில் கூறினர். உண்ட உணவுகள் சீரணமாகவில்லை. வேலூர் மருத்துவமனையில் சோதனை செய்யப்பட்டு, புற்றுநோய் எனக் கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. கிமோதெரபி மருந்துகள் ஏற்றப்பட்டன.
அறுவை சிகிச்சை நடைபெற்றது. சகோதரி சுசீலாவை அதிகமாக நேசித்து அன்பு பாராட்டிய அவர்களுடைய நாத்தனார் அன்பு அவர்களுக்கு செய்தி பறந்தது. பேட்ரிக் அவர்களும், அவர்களுடைய தங்கையும், திருமணத்திற்கு முன்பு ஒருவரையொருவர் எவ்வளவு அதிகமாக நேசித்தார்களோ, அதே அன்பின் உறவு திருமணத்திற்குப் பின்பும் தொடர்ந்தது. சற்று விரிந்த அன்பாக, அதாவது அண்ணன் மீதும், அண்ணனுக்குத் தான் தேர்ந்தெடுத்த அருமையான அண்ணி மீதும் பாசமழை பொழிந்தார். இவர்களைப் போல அன்பு அவர்களுடைய கணவர் தேவகரம் அவர்களும், சகோதரர் பேட்ரிக் குடும்பத்தை அதிகம் நேசித்து வருகிறார்கள். சகோதரி சுசீலாவை தன் உடன் பிறந்த சகோதரியைப் போலவே நேசிக்கும் பாங்கு, அவர்களிடம் காணப்படுகிறது. எனவே சகோதரி சுசீலாவிற்கு அறுவை சிகிச்சை என்ற செய்தி கிடைத்த வேளை 'தேவகரம் அவர்கள் அதிக சுகவீனத்தில் பாதிக்கப்பட்டு, வேதனை அனுபவித்து வந்த நேரம். தன்னை மறந்தார். தன் வேதனையை மறந்தார். தன் மனைவி அன்புவை வேலூருக்கு அனுப்பி வைத்தார். என்னே குடும்பப் பாசம்!
வேதனைக் கடலில் கட்டுமரப் பயணம் :
அறுவை சிகிச்சை கொடுத்த தீர்ப்பு; '“நோய் முற்றி விட்டதால் ஒன்றும் செய்ய முடியாது!” என்பதே. புற்று நோய்க்கு கொடுக்கப்படும் சிகிச்சை சாதாரணமானதன்று. அதிக வேதனையைத் தரும்.
புற்று நோய் ஆரம்பிக்கும்போது வலியோ வேதனையோ காணப்படாது. ஆனால் குறிப்பிட்ட காலத்தில் அந்நோய் முதிர்ச்சி அடையும்போது அது கொடுக்கும் வேதனையும், வலியும் தாங்க முடியாததாக இருக்கும்.
புற்று நோயில் வாடிய ஒரு சகோதரியிடம் வலியைப் பற்றி விசாரித்த போது, "விண்... விண்”' என்று தெறிக்கிறது. 'பளிச்... பளிச்'” என்று குத்துகிறது. 'சுருக்... சுருக்' என்று தைக்கிறது. வலியும் வேதனையும் என்னால் தாங்க முடியவில்லை. என்று கூறியதோடு, '“எனக்கு அந்த ஊசி (புற்று நோய்க்கு மருந்து ஏற்றக் கூடிய ஊசி) வேண்டாம். அந்த வலியை என்னால் தாங்கவே முடியவில்லை”! என்று கதறினார்கள். மற்றொரு சகோதரி வேதனை வந்தவுடன் அலறுவார்கள். ஊசி போடவும் மறுத்துவிட்டார்கள். புற்றுநோய் தரும் வலி என்பது நம் சிந்தனைக்கு எட்டாத துன்பம் தருவது. ஆனால் இந்த வேதனையை பொறுமையோடு சகோதரி சகித்தார்கள். ஆவியின் கனியின் ஒன்பான் சுவையில் பொறுமை என்ற சுவையைத் தருவது என்பது அநேகருக்கு மிகக் கஷ்டமான காரியமாகும். ஆனால் சகோதரியிடம் பொறுமை குடியிருந்தது என்றால் மிகையாகாது.
நடுக்கத்திலும் நகைச்சுவை :
நகைச்சுவை என்பது சகோதரியின் உடன்பிறப்பு என முன் அத்தியாயங்களில் பார்த்தோம் அல்லவா? நடுங்க வைக்கும் சுகவீனத்திலும் நகைச்சுவை மறந்த பாடில்லை. அறுவை சிகிச்சைக்குப் பின் மூக்கிலிருந்து தொங்கும் ரப்பர் குழாயுடன், மருத்துவர் கட்டளைப்படி அவர்கள் தினமும் நடக்க வேண்டியிருந்தது.
“அன்பு! இங்க பாரு (குழாயைக்காட்டி) யானைக்குத் தும்பிக்கை மாதிரி. இது வேற இப்படித் தொங்கி ஆடிக்கிட்டு வருதா? டாக்டர் வேற எனக்கு 'குட்மானிங்' சொன்னார். நானும் யானை தும்பிக்கையை ஆட்ற மாதிரி ஆட்டிக்கிட்டே “குட்மானிங்!” சொன்னேன்!” என்று கூறிச் சிரித்தார்கள். அண்ணியின் வேடிக்கைப் பேச்சு அன்பு அவர்களை சிரிக்க வைத்தாலும், தன் அண்ணிக்கு இப்படி ஒரு நோய் வந்து விட்டதே எனத்துடித்தார்கள். ஒரு நாளாவது தன் அன்புக் கணவரிடம் '“எனக்கு வலிக்கிறது என்றோ, இந்த மருந்துகள் எல்லாம் வேண்டாம்'' என்றோ கூறவில்லை.
வியாதியின் மத்தியிலும் விசுவாசத்தோடு வாழ்ந்தார்கள்.
“இந்த மருந்துகள், சிகிச்சை எல்லாம் சும்மா! கர்த்தர் எனக்கு சுகம் கொடுப்பார் என்று விசுவாசத்தோடு முழங்குவார்கள். புற்று நோய்க்கான சிகிச்சை பெறும் போது வாந்தி அதிகமாக இருக்கும். தலையின் கேசமெல்லாம் உதிர்ந்துவிடும். சகோதரிக்கு இருந்த அடர்த்தியான, அழகிய, கருமைநிற கேசம் உதிரவும் இல்லை. வாந்தி வரவும் இல்லை. குடியிருந்த வீட்டை மாற்றும்படி அநேகர் ஆலோசனை கூறினார்கள்.
“வீட்டை மாற்றச் சொல்பவர்களை இங்கு வந்து உபவாச ஜெபம் செய்யச் சொல்லுங்கள்'' என்று கூறிவிட்டார்கள்.
அதன்படி மூன்று நாள் உபவாச ஜெபம் நடந்தது. குமரன் நகர் பகுதியில் சுவிசேஷ பிரதிகள் விநியோகிக்கப்பட்டன. ஆண்களும், விருப்பப்பட்ட பெண்களும் நற்செய்திப் பிரதிகள் வழங்கச் சென்றனர். ஏனையோர் சகோதரி வீட்டில் கூடி ஜெபித்தனர். ஊழியத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அந்தத் தெரு அன்று நற்செய்திப் பிரதிகளைப் பெற்றுக் கொண்டது. குமரன் நகரில் ஊழியம் ஆரம்பிக்கப்பட்டது. சகோதரி சுசீலாவிற்காக ஹார்லிக்ஸ் பாட்டில்கள் வந்து குவிந்தன. அலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தவற்றை அவர்களும், அவர்கள் குடும்பத்தினரும் பருகலாமே. கொடுத்தே பழகிய கரங்கள் ஹார்லிக்ஸ் பாட்டில்களை எல்லாம் பெலவீனமான மிஷனரிகளுக்கு வழங்கினார்கள். வழங்குவதற்கு வரையறை இல்லை அவர்கள் வாழ்க்கையில்!
தானே தனியொருவளாக குடும்பத்தின் அத்தனை வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்து கொண்டிருந்த சகோதரியின் சீரம் பெலவீனமடைந்தது. எனவே வீட்டுக் காரியங்களைச் செய்ய உதவியாள் நியமிக்கப்பட்டாள். 'இந்திரா' என்ற அந்தப் பெண்ணின் ஆத்துமாவைக் குறித்து கரிசனை கொண்ட சுசீலா அவளுக்கு இரட்சிப்பைக் குறித்துக் கூறினார்கள்.
வியாதிப் படுக்கையும் ஜெய ஊழியமும் :
வியாதியின் காரணமாக ஜெபம் தடைபடவுமில்லை! தள்ளாடவும் இல்லை. மிஷனரிகள் பட்டியலை வைத்துக் கொண்டு, வேலைகள் செய்து கொண்டே ஜெபிக்கும் சுசீலாவிற்கு, வேலைகள் நின்று போனதால் இன்னும் அதிகமாக ஜெபிக்க நேரம் கிடைத்தது. ஜெபம்... ஜெபம்... இதுவே மூச்சாகியது. இதழ்கள் முணுமுணுத்தபடி இருந்தன. ஆம்... ஜெபித்துக் கொண்டே இருந்தார்.
சகோதரி சுசீலாவைப் பார்க்க மிஷனரி சகோதரர் தனபாலன் வந்தார்.
சகோதரியின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்குள் சகோதரியே குமரன் நகர் ஊழியத்தைக் குறித்தும், அங்குள்ள விசுவாசிகளைப் பற்றியும் விசாரிக்க ஆரம்பித்து விட்டார்கள். ஒருவாறு பதில் கூறிய தனபாலன் '“அக்கா கொஞ்சம் பொறுங்கள்! உங்க உடம்பு எப்படி இருக்கு? நீங்க என்ன ஆகாரம். சாப்பிடுறீங்க?'* என்று அன்போடு விசாரித்தார்.
**அது... நல்லாத்தாப்பா இருக்கு. எல்லாம் சாப்பிடலாம். அத விடுப்பா! ஊழியத்தைக் குறித்துப் பேசப்பா! அதுதான் முக்கியம்” என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
அவர்கள் இதயத்துடிப்பே... ஊழியம்... ஊழியம்... என்றுதான் துடித்தது போலும்.
சகோதரியின் வியாதிப்படுக்கை அநேகரிடமிருந்து அனுதாபத்தைப் பெறும் படுக்கையாக அமையவில்லை. இவரைக்காண வந்தவர்கள் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் விசுவாசத்தோடு வாழ ஏவப்பட்டார்கள்.
சகோதரியின் சுகவீனத்தை அறிந்த “உலகிற்கு வார்த்தை'' என்ற ஊழியத்தைச் செய்து வரும் சகோதரர் அகஸ்டீன் ஆசீர் அவர்களுடைய மனைவியார் சகோதரியைப் பார்த்து உற்சாகப்படுத்தி வரலாம் என்று சகோதரியின் இல்லத்திற்குச் சென்றார்கள். அவர்களோடு பேசிவிட்டு வந்தார்கள். அங்கு என்ன பேசினார்கள்? அவர்களுடைய எண்ணம் எதுவென
அவர்களிடமே கேட்போமே!
**நான் திருமதி சுசீலா அவர்களைப் பார்த்து உற்சாகப்படுத்தி விட்டு வரலாம் என்று போனேன். நான் அவர்களை உற்சாகப்படுத்துவதற்கு முன் அவர்கள் என்னை கர்த்தருக்குள் உற்சாகப்படுத்தினார்கள். அவர்களோடு பேசிவிட்டு வந்தபோது என்மனம் நிர்மலமாய் இருந்தது. அவர்கள் வாழ்வில் எது நடந்தாலும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்ற உணர்வுக்கு நான் வந்தேன்'' என்றார்கள்.
திருமதி ஆசீர் அவர்கள் சகோதரி சுசீலாவுடன் உரையாடியதில் சுசீலா பரிபூரண விசுவாசத்தோடு பக்திப்பாவையாக இருக்கிறார்கள்: எனவே அற்புத சுகம் கிடைத்தாலும் அது ஆண்டவர் சித்தம். அவர் தம்மிடம் அழைத்துக் கொண்டாலும் அது அவர்களுக்கு மேன்மையே! என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள் போலும்.
அதிக சுகவீனத்திலும் ஆலய ஆராதனை :
சுகவீனமும், பலவீனமும் சகோதரியை உறிஞ்சிக் கொண்டிருந்தாலும் ஆலயம் செல்லத் தவறுவதில்லை. எப்படியாவது ஞாயிறு மாலை ஆலயத்திற்கு சென்று விடுவார்கள். கர்த்தர் தம் பிள்ளைகள் மூலமாக, சகோதரியை ஆலயத்திற்கு அழைத்துச் செல்ல அவ்வப்போது ஏற்பாடு செய்தார்.
புனித வெள்ளி அன்று மும்மணி தியானம் நடைபெறும் அல்லவா? அத்தியானத்திற்கு சகோதரி வந்திருந்தார்கள். அவர்களைப் பார்த்த திருமதி. பாலையா அவர்கள், “மூன்று மணி நேரம் எப்படி உட்கார்ந்திருக்கப் போகிறீர்கள்? மிகக் கஷ்டமாக இருக்குமே': என கரிசனையோடு வினவ, கூடையில் வைத்திருந்த கேனைக் காட்டி இதில் இளநீர் வாங்கி வைத்திருக்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாக குடிச்சிட்டு, ஆலயத்தில் இருந்து கவனிப்பேன்'' என மலர்ந்த முகத்தோடு பதில் கூறினார்கள்.
நல்ல சுகத்தோடு உள்ள மக்களே மும்மணி தியான நேரத்தில் கவலையீனமாக இருப்பதையும், ஆலயத்திற்கு வராமல் காலம் கடத்துவதையும், காணும்போது சகோதரியின் ஆலயவாஞ்சை நமக்கு ஒரு சவாலே!
சாட்சி கூற சளைக்காத உள்ளம் :
அறுவை சிகிச்சைக்குப் பின் ஒருநாள் திடீரென தான் முன்பு பணியாற்றிய சாரா டக்கர் மேல்நிலைப் பள்ளிக்குத் தம் கணவருடன் சகோதரி வந்தார்கள். நண்பர் சுவிசேஷ ஜெபக்குழுவின் உதவிப் பொதுச் செயலாளரான சகோதரர் துரைசிங் அவர்களின் துணைவியார் திருமதி. மனோரமா துரைசிங் அவர்கள் சாட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார்கள். சுமார் 30 நிமிடங்கள் சகோதரி சுசீலா அந்தக் கூட்டத்தில் சாட்சி பகர்ந்தார்கள். விசுவாச வார்த்தைகள் அவர்கள் சாட்சியில் விளையாடின. தான் மரிக்கப் போகிறோம் என்ற எண்ணம் கிஞ்சித்தும் அவர்கள் நெஞ்சத்தில் இல்லை.
அவர்கள் சாராடக்கரில் பணியாற்றிய கடைசி வருடம் (1964ல்) அவர்களிடம் பயின்ற மாணவிகளில் ஒருவர் சகோதரி. மார்ஜினி அவர்கள்.
சில வருடங்கள் கழித்தபின் மார்ஜினி அவர்களும் ஆசிரியை ஆகி, திருமணமும் நடந்து, இரு பிள்ளைகளுககுத் தாயாகிய பின் 1980ல் டேனீஷ்பேட்டில் நடைபெற்ற மாநில முகாமில் தனது ஆசிரியையாகிய சுசீலா அவர்களைக் கண்டு சகோதரி மார்ஜினி உரையாடினார்கள்.
அப்பொழுது சகோதரி சுசீலா, தாராபாய் மார்ஜினி அப்பாத்துரைதானே!'' என தனது மாணவியின் முழுப்பெயரையும் கூறினார்கள். மாணவியின் வியப்பிற்கு அளவே இல்லை. 16 வருடங்களுக்குப் பின் தனது முழுப்பெயரையும் நினைவு வைத்திருப்பதைக் குறித்து மகிழ்ச்சியும், அதிர்ச்சியும் அடைந்தார்கள்.
தனது பணியில் கடைசி ஆண்டு பயின்ற மாணவிகளின் பெயர்களை எழுதிவைத்து ஜெபித்து வருவதாக சகோதரி தெரிவித்தார்கள். மாணவியின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
சகோதரி சுகவீனமடைந்த சமயம் ஒரு குறிப்பிட்ட தொகையை, சுசீலா பேட்ரிக்கிற்கு மார்ஜினி அனுப்பினார்கள். சகோதரி. சுசீலா அத்தொகையை நண்பர் சுவிசேஷ ஜெபக்குழுவிற்கு காணிக்கையாக அனுப்பிவிட்டு, அந்த இரசீதுடன், நன்றிக் கடிதம் ஒன்றையும் தனது அன்பு மாணவிக்கு அனுப்பி வைத்தனர்.
மாமியும் மருமகளும் :
இந்நிலையில் மூத்தமகன் ஷலோமுக்கு திருமணம் ஒழுங்காகியது. ஷலோம் - வைலட் திருமணம் ஆலயத்தில் சிறப்புற நடைபெற்றது. அதுசமயம் சகோதரி திட உணவு எதுவும் சாப்பிட முடியாத நிலையில் இருந்தார்கள். ஆயினும் மிக்க மகிழ்ச்சியோடு காணப்பட்டார்கள். தான் இப்படி இருக்கிறோமே என வருத்தப்படவே இல்லை. மாமியாரை நேசித்த மருமகள் சுசீலாவிற்கு, அன்புடைய மருமகளே அமைந்தார்கள். திருமதி. வைலட் ஷலோம் தம் மாமியாரை தன் அன்னையாகவே கருதி பராமரித்து வந்தார்கள். அனைத்து உதவிகளையும் அன்போடு செய்தார்கள். வேலைக்காரப் பெண்மணி சகோதரி சுசீலாவிற்கு உதவி செய்வதற்கு, திருமதி வைலட் அனுமதிக்கவில்லை. தானே தன் மாமியாரின் காரியங்களை பரிவோடு கவனித்தார்கள். சகோதரி சுசீலாவும் தன் மருமகளை, மகளாகவே கருதி நேசித்தார்கள். மாமியார் - மருமகள் உறவு பாசம் மிகுந்ததாக, குடும்பத்தினரை மகிழ்விக்கக் கூடியதாக, தேவநாமம் மகிமைப்படத்தக்கதாக அமைந்திருந்தது.
தேவ சத்தம் :
சகோதரியின் உடல் நாளுக்கு நாள் நலிவுற்று வந்தது. தியாக தீபம் எரிந்தது போதும் என சிலுவையில் தன்னை ஈத்த தியாகராஜனாம் எம்பெருமான் இயேசு நினைத்தாரோ?சகோதரியின் சரீரம் சீர் குலைந்தது. வாந்தி வர ஆரம்பித்தது. ஆனாலும் கலங்கவோ, புலம்பவோ இல்லை.
சகோதரி சுசீலாவைக் குறித்து அவர்களுடைய அன்புக் கணவர் கூறுவதைக் கேட்போமா?
"சுசீலா! எப்பொழுதும் எளிமையா, சுத்தமா இருப்பா வியாதியாய் இருந்தபோது கூட தலை வாராமலோ, கசங்கின உடையோடோ இருக்கமாட்டா! எனக்கு எப்பவுமே, சுத்தமா, எளிமையா இருக்கிறதுதான் பிடிக்கும் கடைசிவரை என் சுசீலா அப்படித்தான் இருந்தா. வியாதிப் படுக்கையிலும் ஜெபித்துக் கொண்டே இருப்பா! 24 மணி நேரமும் ஜெபந்தான். வீட்டிற்குப் பின்னால் இருக்கும் தோட்டத்தில் மலரும் முல்லைப் பூவைக்கட்டி கூந்தலில் வைத்துக் கொள்வாள். அவ முடி நரைக்கவும் இல்லை. உதிரவும் இல்லை 24 வயதில் என் சுசீலா எப்படி இருந்தாளோ அப்படியேதான் 54 வயதிலும் இருந்தாள். ஒரு நாளாவது என்னைப் பார்த்து 'எனக்கு வலி எடுக்கிறது' என்றோ என்னால் தாங்க முடியவில்லை' என்றோ 'நான் இறந்துவிட்டால் என்ன செய்வீர்கள்? பிள்ளைகளை எப்படிப் பார்த்துக் கொள்வீர்கள்?!” என்றோ அவள் புலம்பவே இல்லை. மலர்ந்த முகத்தோடு இருந்தாள்'' என்று கூறுகிறார்கள்.
“மலர்ந்த முகமே வாழ்வின் இன்பம்: என்பதை அறிந்தவர்கள் அல்லவா சுசீலா மண்ணுலக வாழ்வை அவர்கள் பூர்த்தி செய்கின்ற நாள் நெருங்க ஆரம்பித்தது. ஏறக்குறைய தேவராஜ்ஜியத்திற்கு சகோதரி செல்ல, ஒரு வாரம் இருக்கும் போது சகோதரி மெர்ஸி சகோதரி சுசீலாவைப் பார்க்க வந்தார்கள். வேதனையின் மத்தியில், ஊழியப் பாதையில் நடந்து வரும் மெர்ஸியைக் கண்டதும் சகோதரி சுசீலா அவர்களுக்குக் குடிக்கப் பானம் கொடுத்து உபசரித்து, உபதேசிக்கவும் ஆரம்பித்து விட்டார்கள்.
“மெர்ஸி! . நாம் ஆண்டவருக்காக யுத்தம் பண்ண நம்மைப் படைத்திருக்கிறார். பிசாசு தேவன்கிட்ட அனுமதி வாங்கிட்டுத்தான் வர்றான். நாம் சோர்ந்து போகக் கூடாது. தேவன் நம்மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்; என்று கூறி, ஊழியத்தில் ஏற்படும் பிரச்சனைகள், தடைகள் இவற்றைத் தகர்த்தெறிந்து, முன்னேற வேண்டுமென'' ஆலோசனையும்,
அறிவுரையும் கூறினார்கள்.
அதுமட்டுமல்ல!
'கோதுமைமணி செத்ததேயாகில், மிகுந்த பலனைக் கொடுக்கும். எனவே ஊழியப் பாதையில் எதையும் சவாலோடு ஏற்று முன்னேற வேண்டும்' என உற்சாகப்படுத்தினார்கள்..
தன் வாழ்வைக் குறித்த தேவசத்தத்தையும் பகிர்ந்து கொண்டார்கள்.'" மெர்ஸி! நான் ஜெபித்துக் கொண்டிருந்த போது, வெண்ணிற ஆடையில் ஒருவர் என் முன் தோன்றி, “கோதுமையை சுளகினால் புடைப்பது போல் உன்னைப் புடைக்க உத்தரவு கேட்டுக் கொண்டான்.'' என்று கூறியது போல் இருந்தது. நம்மைப் புடைக்க அவன் உத்தரவு வாங்கித்தான் வருகிறான். நாம் கலங்க வேண்டியது இல்லை! கோதுமை மணிகளாகிய நாம் அவருக்கென்றே வாழவேண்டும்.''
மெர்ஸி ஆவியில் உற்சாகமடைந்தவர்களாக விடைபெற்றுச் சென்றார்.
தரிசனங்களும் தேவசித்தமும் :
சகோதரியின் சுகத்திற்காக அநேகர் ஜெபித்தனர். ஊழியர்கள் மன்றாடினர். அன்புள்ளங்கள் கண்ணீரில் கரைந்து உருகின. அநேகர் பேட்ரிக் அவர்களுக்குக் கடிதம் எழுதினார்கள்.
ஊழியர் ஆனந்த ஸ்திரா எழுதிய கடிதத்தில், “இரு தூதர்களிடையே வெண்ணிற ஆடையில் சகோதரி சுசீலா அவர்கள் மேலே செல்வதை ஜெபத்தில் பார்த்தேன்.' மீண்டும் ஜெபித்த போது 'இரு மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டிருந்தன. ஒன்று அணைக்கப்பட்டது. இதைக் கண்டேன்.' என எழுதினார் பின் 'சகோதரி சுகம் பெற அதிகமாக ஜெபிப்போம்' என ஆறுதலாக எழுதியிருந்தார்.
சகோதரியை தம்மிடம் அழைத்துக் கொள்வது ஆண்டவர் சித்தமாக இருந்தது.
பாடியில் உள்ள திருமதி எஸ்தர் சந்தோஷ்ராஜ் சுசீலா பேட்ரிக் அவர்களின் அன்பிற்குரிய, சகோதரியை அதிகம் நேசிக்கும் அருமையான ஆண்டவருடைய பிள்ளை. சகோதரியைப் பற்றிப் பேசும் போதே கண்ணீரோடு பகிர்ந்து கொள்கிறார்கள். அக்காவுடைய அறிவிற்கும், அழகிற்கும், ஊழிய வாஞ்சைக்கும், ஜெப வாழ்க்கைக்கும் நாம் எதிர் நிற்க முடியாது. ஆனாலும் கூட அவர்கள் என்னை அதிகம் நேசித்தார்கள்' என்று கூறி அவர்கள் அழுதார்கள்.
திருமதி எஸ்தர் அவர்கள் தாம் கண்ட கனவை பின்வருமாறு எடுத்துரைத்தார்கள்.
“1994ஆம் ஆண்டு ஜுன் 24ம் நாள் ஒரு கனவு கண்டேன். அக்கா என் தலையில் கை வைத்து, '“ஆண்டவரே! இந்த மகளுடைய இருதயம் உம்முடைய பார்வையில் இவ்வளவு பிரியமாயிருக்கிறதே அப்பா!'' என்று ஜெபிப்பது போல் கனவு கண்டேன்.
இந்தக் கனவைக் கண்டதும், '*இன்றைக்கும் கூட முறு முறுத்தேனே அப்பா! என்னை மன்னியும்'' என்று கூறி அழுதேன். ௮க்கா என் தலையில் கை வைத்து ஜெபித்ததால் 'இன்னும் அதிகமாக ஊழியம் செய்வார்கள். உயிரோடு இருப்பார்கள்.” என்று நினைத்தேன். தேவ சித்தம் வேறு விதமாய் இருந்திருக்கிறதே!'” என்று கூறி அங்கலாய்த்தார்கள்.
பரம கானான் பயணம் :
1994 ஆகஸ்ட் 13, 14, 15 ஆகிய தினங்களில் விருதுநகரில் 'கிதயோனியர் முகாம் நடைபெற்றது. கிதியோனியர் முகாமிற்குச் சிறப்புச் செய்தியாளராக சகோதரர் பேட்ரிக் அழைக்கப்பட்டிருந்தார். எனவே பேட்ரிக் அவர்கள் புறப்படும்போது சகோதரி சுசீலா தடையேதும் கூறவில்லை. மகன் ஜிம் தன் பணி செய்ய பணித்தளத்திற்குப் புறப்பட ஆயத்தமானபோது மோனிகா, “மம்மி இப்படி இருக்கும்போது நீயும் புறப்படுறையே!'' என அங்கலாய்த்தபோது,
ஜிம், ''இங்க ஒரு உயிருக்கு நீ இப்படிச் சொல்ற. பீஹாரில் ஒரே நாளில் எத்தனை மரணம் நடக்குது? நான் அவர்களைக் காப்பாற்றப் போக வேண்டும்'” என பிடிவாதமாகக் கூறியபடி ஜிம் புறப்பட்டு விட்டார்.
தமிழ் இலக்கியத்தில் முதல்நாள் போரில் தன் அண்ணனையும், மறுநாளில் தன் கணவரையும் இழந்தவள், மூன்றாம் நாள் போரில் தன் மகன் சின்னஞ்சிறு பாலகன் புறமுதுகில் புண்பட்டு இறந்தான் என்ற தவறான செய்தி கேட்டுத் துடிக்கின்றாள். தன் மகன் மார்பில் புண்பட்டு இறந்து கிடப்பதைக் கண்டு உவகையுற்று “நான் என் மகனுக்கு ஊட்டியது வீரப்பால்!'' என்று முழங்கினாளாம்.
அதே போல் தியாகம், ஊழியம் என்றே ஓடிக் கொண்டிருக்கும் இந்தக் குடும்பத்தின் மகனான ஜிம் 'ஊழியமே பெரிது' என பணித்தளம் நோக்கிப் புறப்பட்டது அதிசயமல்லவே! சுசீலா -அவர்கள் ஊட்டியது ஊழியப்பால் அல்லவா?
அன்னையின் நிலையும், அருமைப் பிள்ளைகளின் மனநிலையும் :
1994ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள்! அருமை மகள் சபைன்க்கு பி.எட் தேர்வு. அதற்காக ஆயத்தம் செய்து கொண்டிருந்தார்கள். விளக்கப்படங்கள் தயாரிப்பதில் தன் தமக்கைக்கு உதவி செய்து கொண்டிருந்த பிராங்கோ, '“சபைன் அம்மா ஆண்டவர்கிட்ட சீக்கிரமா போயிடுவாங்க! அப்படித்தான் எனக்குத் தெரிகிறது.”
“அப்படிச் சொல்லாதே! எனக்கு அம்மா வேணும். அம்மா இல்லாமல் என்னால் இருக்கவே முடியாது.'' அழுத்தம் திருத்தமாக சபைன் பேசினார்கள்.
அவர்கள் இதயத்திரையில், சின்னாட்களுக்கு முன் தன் தமையன் ஜிம், “'சபைன்! அம்மா வெகு நாட்கள் இருக்கமாட்டார்கள். நீ இப்பொழுதே உன்னை திடப்படுத்த முயற்சி செய்.'' தமையன் தீர்க்கமாகக் கூறினாலும், தங்கையால் ஏற்க முடியவில்லை. '*அப்படிச் சொல்லாதே! எனக்கு அம்மா வேணும்'' என தான் கூறியது படமாகியது. தாயைப் பிரிய சேய் மறுத்தது.
மகனும் மகளும் மெல்லிய குரலில் உரையாட, தன் மாமியைக் கருத்தூன்றி கவனித்துக் கொண்டிருந்தாள் அருமை மருமகள்.
சகோதரியுடன் ஊழியப்பாதையில் இணைந்து வந்த திருமதி ரூபன் சகோதரியைப் பார்க்க வந்தார். அவர்களுக்கு ''ஹார்லிக்ஸ் போட்டுத்தரும்படி தன் மகளுக்கு சகோதரி அன்புக் கட்டளையிட்டார். உடல் சோர்ந்து வேதனையில் வெந்தாலும் உபசரிப்பை மறவாத உள்ளம் சுசீலாவிற்குச் சொந்தமானதாகும்.
சகோதரியைக் காண வந்த ஒரு அம்மையார் '“மகளை விட்டுட்டுப் போகப் போறையே!'' எனக்கதறி அழுதபோது, சகோதரியின் முகத்தில் எந்தவிதச் சோகத்தின் நிழலும் காணப்படவில்லை. தெளிந்த நிர்மலமான அந்த வதனம் என்றும் போல் இன்றும் அப்படியே இருந்தது.
இரவு! மகளும், மருமகளும் சகோதரியின் படுக்கையருகே விழித்திருந்து கவனித்தனர். சகோதரிக்கு பிடித்தமான சங்கீதங்கள் 91, 103, 46, 121 ஆகியவற்றையும், ரோமர் 8ஆம் அதிகாரம் 28ஆம் வசனத்தையும் வாசித்தனர். ஜெபித்தனர். மன்றாடினர். இரவு கடந்தது. பொழுது புலர்ந்தது. '*தன் தாய் மரண இருளின் பள்ளத்தாக்கைக் கடந்துவிட்டார். இனி பயமில்லை!'' என மகளின் உள்ளம் சற்று தேறியது.
விருதுநகர் முகாம் முடிந்து சகோதரியின் கணவர் பேட்ரிக் வீட்டிற்கு வந்தார்.
சபைன் தேர்விற்குப் புறப்பட்டார். அன்னையிடம் மகள் வந்தபோது, வேதம் வாசிக்கச் சொல்லி, வெகுநேரம் ஜெபித்து அனுப்பி வைத்தார்கள். அருமை மகளை ஆண்டவரிடம் ஒப்படைத்தார்கள் போலும். தேர்விற்குச் சென்றுவிட்டார் சபைன்.
கல்லூரிக்குச் சென்ற பிராங்கோ உள்ளத்தில் தடுமாற்றம்.
“திரும்பிப்பார்! உன்னைத்தான் கூப்பிடுகிறார்கள்'' உள்ளுணர்வு தொடர்ந்து பேச, சற்று நேரத்திலெல்லாம், கல்லூரியிலிருந்து பிராங்கோ வீட்டிற்குச் சென்றுவிட்டார்.
சகோதரியின் நிலைமை கவலைக்கிடமாகத் தோன்றவே, குழுக் கூடுகைக்குச் சென்றிருந்த சகோதரியின் கணவருக்குத் தொலைபேசி மூலம் செய்தி அனுப்பி வீட்டிற்கு வரவழைத்தனர்.
1994 ஆகஸ்ட் 16ஆம் நாள்! மதியம் 2 மணி! சகோதரியால் பேச முடியவில்லை. ஆனால் ஏதோ சொல்ல விரும்பியது போல் தோன்றவே, சகோதரி சுசீலாவின் கணவர் அருகில் வந்து, சத்தமாய்ப் பேசும்படி கூறினார்கள். சகோதரி முயற்சி செய்தார்கள். முடியவில்லை!
அடுத்த கணம்... அவர்கள் உயிர்ப்பறவை அவர்களது உடலென்ற கூட்டைவிட்டுத் தன்னைத் தந்த தேவனிடத்திற்குப் பறந்தே போய்விட்டது. கண்ணீர்! கண்ணீர்! உறவுகள் கதறின! ஊழியப்பாதையில் உடன் வந்த உடன்பிறப்புகள் ஓலமிட்டன. இதையறியாது தேர்வு முடித்து, பக்தியுள்ள தன்தோழி ரீட்டாவுடன் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த சபைன், “*ரீட்டா! நேற்று இரவு மம்மி அதிகக் கஷ்டப்பட்டாங்க. அதைக் கடந்திட்டாங்க. இனி பயமில்லை.” என தைரியமாகக் கூறிய தன் தோழி மீது ரீடாவிற்கு இரக்கமே வந்தது. “உன் அன்னை ஆண்டவரிடம் சென்று விட்டார்கள்!” என்று எப்படிக் கூறுவது? அமைதி காத்தார் ரீட்டா. “ஜெபவீரரான சகோதரர் சுந்தர்ராஜ் அவர்களை அழைத்து வந்து உபவாச ஜெபம் வைக்க வேண்டும்” பேதைப்பெண், மனதில் திட்டம் வகுத்தபடி வந்தார்.
வீட்டின் முன் சகோதரர் நவநீதர், சகோதரர் சுந்தர்ராஜ் இவர்கள் நிற்பதைக் காணவும், “ஆஹா! நினைத்தவுடனே வந்து விட்டார்களே! இன்று எப்படியும் கூடி ஜெபித்து விட வேண்டியதுதான்!'' திட்டம் மேலும் வலுப்பெற வீட்டினுள் நுழைந்ததும், தொலைபேசியில் கண்ணீரோடு பேசும் தன் தகப்பனாரைக் கண்டார். வீட்டின் நிலைமை சோகக் கதையைச் சொல்லியது. '*தன் தாயின் நிலைமை எப்படியிருந்தாலும் கர்த்தர் காத்துத் தருவார்!” என விசுவாசச் சிறகடித்துப் பறந்த அந்த இளஞ்சிட்டு சிறகொடிந்த நிலையாயிற்று. கண்ணிழந்த சிலையாய், கால் இழந்த கலையாய் (மான்), இதயம் நொறுங்க, கண்ணீர் பரள, எண்ணங்கள் சிதற, தாயிருந்த அறைக்குள் நுழைய இயலாமல், பக்கத்து அறையில் தஞ்சம் புகுந்தார்கள். அவர்களுடைய அண்ணி அருகிலிருந்து ஜெபித்துக் கொண்டே இருந்தார்கள். தான் இருந்த அறைக்குள் வேறு ஒருவரும் வராதபடி, சபைன் கையை அசைத்து தடுத்துவிட்டார். 'சபைன் சித்தம் தடுமாறிவிடுமோ?' திகைத்தனர்.
ஒருவாறு அன்றைய தினம் உருண்டது. மறுநாள் மதியம் தேவன் சபைனோடு இடைபட ஆரம்பித்தார்.
சில மாதங்களுக்கு முன் மரணத்தறுவாயில் வாழ்ந்து வந்த ஒரு தாய்க்காக மன்றாடி சபைன் ஜெபித்து வந்தார். தேவன் அந்தத் தாயை தம்மிடம் அழைத்துக்கொண்டார். “தன் ஜெபம் கேட்கப்பட வில்லையோ?' எனத் தடுமாறிய சபைனிடம் “ஒரு தாய் தேற்றுவது போல நான் தேற்றுவேன் என்பதை மறந்தாயோ? தாயைக் காட்டிலும் நான் அவர்கள் பிள்ளைகளை கவனிப்பேன்'” எனப்பேசித் தேற்றினார்.
அதேபோல் இன்றும் தேவன் பேச ஆரம்பித்தார். “அருமை மகளே! உன் தாயின் இடத்தில் உன்னை நான் வைக்கிறேன். நீ குடும்பத்தை கவனித்து, வருவாயா?” ஏக்கத்தின் குரல் ஏந்திழையை நனவுலகுக்குக் கொண்டு வந்தது அதே வேளை!...
ஆறுதல் அளிக்கும் அருமைநாயகர் சகோ. பேட்ரிக் அவர்கள் மனதில்,
“நான். அவளை எனக்கென்று பூமியிலே விதைத்து இரக்கம் பெறாதிருந்தவளுக்கு இரங்குவேன்; என் ஜனமல்லாதிருந்தவர்களை நோக்கி நீ என் ஜனமென்று சொல்லுவேன். அவர்கள் என் தேவனே என்பார்கள் என்றார்'” என்ற ஓசியா 2ஆம் அதிகாரம் 23ஆம் வசனத்தின் அடிப்படையில் பேசினார். மெய்ச் சமாதானம் அவர்கள் உள்ளத்தில் நிரப்பவே, ஓசியா 2:23னின்
அடிப்படையில் சகோ. பேட்ரிக் செய்தி கொடுத்தார்கள். உடனே அதிகமாக அழுது கொண்டிருந்த மகள் மோனிக்காவை சகோதரர் பேட்ரிக் - இடம் கொண்டு வந்த சகோதரிகள் விட்டார்கள். தந்தையின் ஆறுதல் செய்தி மகளைத் தேற்றியது.
“கர்த்தரை அறியாத ஜனம் கர்த்தரை அறிந்து கொள்ளவும், கர்த்தாதி கர்த்தரும், அந்த ஜனங்களை தம் ஜனமாக அழைக்கவும், குமரன் நகர் குமாரன் நகராக மாறவும் என் மனைவி பரலோக வங்கியில் முதலீடாக மாறினார்'' என சகோதரர் செய்தி கொடுத்தார்.
கர்த்தர் சித்தத்திற்கு கடவுள் பணி செய்து வந்த அந்தக் குடும்பம், தலைதாழ்த்தி அர்ப்பணித்து.
சகேதரியின் சரீரம், சர்வ வல்லமையுள்ள தேவன் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்தி, நித்திய ஜீவனை அடையச் செய்வார் என்ற உயிர்த்தெழுதலின் நம்பிக்கையோடு நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சி இலட்சிய தீபம்! என்ற தலைப்பில் உள்ளது.
இந்த கதை அணையா தீபம் என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.