இயற்கையாகவே மக்கள் பிறப்பு அல்லது குடியுரிமை அல்லது அரசாங்க பதவியின் மூலம் தங்களுக்கு இருக்கும் சலுகைகளை/ உரிமைகளை நிரந்தரமாக்க விரும்புகிறார்கள். தியாகம் என்பது உக்கிராணத்துவத்துடன் இணைந்தால், ஒரு பெரிய காரணத்திற்காக முன்னுரிமைகளை ஒதுக்க வேண்டும்.
சலுகைகள் இல்லாத கவர்னர்:
நெகேமியா அர்தசஷ்டா ராஜாவுக்கு சேவை செய்யும் ஒரு உயர்மட்ட அதிகாரி. எருசலேம் நகரத்தின் நிலையைக் கேள்விப்பட்டபோது, வருத்தப்பட்டு, பாரப்பட்டு, ஜெபித்தான். அவன் ராஜாவிற்கு சமையல்காரனாக பணியாற்றியபோது அவனது முகம் அவனது துக்கத்தை சுட்டிக்காட்டியதால் மன்னரின் பார்வையில் தயவைப் பெற்றான். தேவன் தனது இறையாண்மை திட்டத்தில், நெகேமியாவை ஆளுநராக நியமித்தார், அவன் நகரத்தை மீண்டும் கட்டுவான். அவன் பன்னிரண்டு ஆண்டுகள் பணியாற்றினான். யூத மக்களின் வரியை அதிகரிப்பதன் மூலம் உணவுக்கான சலுகைகளை (உதவித்தொகை) அவன் ஏற்க மறுத்துவிட்டான். அவனுக்கு முன்பாகப் பணிபுரிந்த ஆளுநர்கள் நாற்பது வெள்ளிக் காசுகளை தினசரி சேகரித்தார்கள். அவர்களின் பிரதிநிதிகள், வேலையாட்கள் ஆளுநரின் முன்மாதிரியைப் பின்பற்றி, தங்களுக்கு கூடுதல் பணத்தைப் பிரித்தெடுப்பதன் மூலம் ஜனங்களை ஆளுகை செய்தார்கள். நெகேமியா அலங்கத்தின் வேலையைச் செய்ய நின்ற போதும், நிலமோ சொத்துக்களோ எதையும் கையகப்படுத்தவில்லை (நெகேமியா 5:14-16).
பவுலின் பணி:
ஒரு அப்போஸ்தலராக, பவுல் தனது தனிப்பட்ட தேவைகள் மற்றும் ஊழியங்களுக்காக சபையால் ஆதரிக்கப்படும் பாக்கியத்தைப் பெற்றான். ஆயினும்கூட, பவுல் தனது தேவைகளுக்கும் சக ஊழியர்களின் தேவைகளுக்கும் தானே உழைத்து கவனித்துக்கொள்வதை தேர்ந்தெடுத்தான் (அப்போஸ்தலர் 20:34; 1 கொரிந்தியர் 4:12).
முற்பிதா:
ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபு ஆகியோர் கூடாரங்களில் வாழ்ந்தனர் (எபிரெயர் 11:9,10). அவர்கள் சிறந்த வீடுகளை கட்டி குடியிருந்திருக்கலாம், ஆனால் தேவனால் கட்டப்பட்ட நகரத்தைத் தழுவும் எதிர்பார்ப்பில் எளிமையான வாழ்க்கை முறையை தேர்ந்தெடுத்தனர்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து:
நம்முடைய கர்த்தரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்து மிகப் பெரிய மாதிரி. "அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்"
(பிலிப்பியர் 2:6-7).
ராஜ்ய மக்கள் பதவி, அதிகாரம், உடைமைகள் மற்றும் சலுகைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. கர்த்தருடைய மகிமைக்காகவும் ராஜ்ஜியத்திற்காகவும் இவை அனைத்தையும் அவருடைய பாதத்தில் வைக்கிறார்கள்.
தியாகம் என் உக்கிராணத்துவத்தின் அடையாளமா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்