சில கதவுகளின் கீல்கள் துருப்பிடித்து விடுகின்றன. அதற்கு கீல்களில் பயன்படுத்தப்படும் உலோகத்தின் தரமற்ற தன்மை, காற்றில் உள்ள உப்பு ஈரப்பதம் அல்லது பயன்படுத்தாதது போன்றவை காரணமாக இருக்கலாம். கதவை இழுத்து அடைக்கும் போது அல்லது திறக்கும் போது, அது எரிச்சலூட்டும் விதமாக சத்தங்களை உருவாக்குகிறது. எண்ணெய் தடவினாலும், சிலநாட்கள் நன்றாக வேலை செய்யும், மீண்டும் கிரீச் சத்தம் வரும். ஆம், முணுமுணுக்கும் உதடுகள் துருப்பிடித்த கீல்கள் போன்றவை, அவை தொடர்ந்து தேவையற்ற சத்தங்களை எழுப்புகின்றன. முணுமுணுப்பதும் கிசுகிசுப்பதும் உறவுகளையும் ஒற்றுமையையும் பாதிக்கிறது.
ஓயாத ஒழுக்கு:
“அடைமழைநாளில் ஓயாத ஒழுக்கும் சண்டைக்காரியான ஸ்திரீயும் சரி” (நீதிமொழிகள் 27:15). பேசும் திறன் என்பது மனிதகுலத்திற்கு கிடைத்த ஒரு பரிசு தான். ஆனால் அது புத்திசாலித்தனமாகவும், நோக்கமுள்ளதாகவும், அர்த்தமுள்ளதாகவும் பயன்படுத்தப்பட வேண்டும். எவ்வித பிரயோஜனமின்றி நடக்கும் சண்டைகள், வாக்குவாதங்கள் நமக்கும் பிறருக்கும் சுமையாகும். நிஜம் எதுவெனில், பேச தைரியம் இல்லாமல், மக்கள் தங்களுக்குள் முணுமுணுக்கிறார்கள்.
மகிழ்ச்சியற்ற முணுமுணுப்புகள்:
எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து விடுதலையை அனுபவித்தாலும், இஸ்ரவேல் புத்திரர்கள் மகிழ்ச்சியாக இல்லை. சுதந்திரத்தை அனுபவிப்பதற்குப் பதிலாக, அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் இடையூறுகளைப் பற்றி அவர்கள் கவலைப்பட்டனர். தேவன், மோசே மற்றும் ஆரோனுக்கு எதிராக முணுமுணுத்த பல நிகழ்வுகளை எண்ணாகமம் புத்தகம் பட்டியலிடுகிறது.
நன்றியற்ற முணுமுணுப்புகள்:
இஸ்ரவேலருக்கு வனாந்தரத்தில் தேவன் அற்புதமாக மன்னாவைக் கொடுத்தார். அவர்கள் அதை வழக்கமான மற்றும் சலிப்பான உணவாகக் கருதினர். மன்னா தேவதூதர்களின் உணவு என்று வேதாகமம் கூறுகிறது (சங்கீதம் 78:25). ஆனாலும் அவர்கள் முணுமுணுத்தார்கள், மேலும் உணவு பட்டியலில் இன்னும் பல பொருட்கள் அவர்களுக்கு தேவைப்பட்டன. நன்றியுணர்வு இல்லாதபோது, முணுமுணுப்பு விளைகிறது. நன்றியுடன் இருப்பது ஆவிக்குரிய பக்குவம்.
பரவும் முணுமுணுப்புகள்:
துரதிர்ஷ்டவசமாக, ஒருவர் முணுமுணுத்தால் அது விரைவில் மற்றவர்களுக்கு பரவுகிறது. ஒரு அதிருப்தியுள்ள நபர் ஒரு கூட்ட ஜனங்களுக்கு அல்லது சமூகத்தில் கலகத்தைத் தூண்டலாம். முணுமுணுப்புகள் சமூகத்திற்கும் முன்னேற்றத்திற்கும் பேரழிவு. பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக, முணுமுணுப்புகள் பிரச்சனைகளைப் பெருக்கி சிக்கலாக்குகின்றன.
நன்றி துதிகள்:
ஒரு சீஷனின் உதடுகள் துருப்பிடித்த கீல்கள் போல இருக்கக்கூடாது, ஆனால் புதிய மற்றும் எண்ணெய் தடவிய கீல்களாக இருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் எப்போதும் நன்றி செலுத்துவதே ஒரு கிறிஸ்தவ நற்பண்பு, ஏனென்றால் அது தேவனின் விருப்பம் (1 தெசலோனிக்கேயர் 5:18). விசுவாசிகள் எப்பொழுதும் உதடுகளின் கனியாகிய நன்றி, துதி, மற்றும் ஸ்தோத்திரங்களைச் செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும் (எபிரெயர் 13:15).
என் உதடுகளில் உற்சாகமான ஆவியும் நன்றியறிதலான ஸ்தோத்திரமும் இருக்கிறதா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்