சூனேம் பட்டணத்தைச் சேர்ந்த சூனேமியப் பெண் ஒரு கனம் பொருந்திய ஸ்திரீ (2 இராஜாக்கள் 4: 8-37). அவள் இசக்கார் கோத்திரத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் (யோசுவா 19:17-18).
1) ஆவிக்குரிய பகுத்தறிவு:
எலிசாவை தேவ மனிதனாக, பரிசுத்தவானாக, தீர்க்கதரிசியாகப் புரிந்து கொள்ளளவு சூனேமியப் பெண்ணுக்கு ஆவிக்குரிய பகுத்தறிவு இருந்தது.
2) உதாரணத்துவமான விருந்தோம்பல்:
எலிசா இஸ்ரவேல் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஊழியங்களைச் செய்து வந்தார். இந்த இல்லத்தில் தங்கும் பாக்கியம் அவருக்கு கிடைத்தது மற்றும் வழங்கப்பட்டது எனலாம். ஆயினும்கூட, சூனேமியப் பெண் தாராள குணத்தைக் காட்டுவதன் மூலம் தீர்க்கதரிசியையும் தேவனையும் கனம் பண்ணுபவளாக இருந்தாள்.
3) அழுத்தமான ஏற்பாடு:
"நாம் மெத்தையின்மேல் ஒரு சிறிய அறைவீட்டைக் கட்டி, அதில் அவருக்கு ஒரு கட்டிலையும், மேஜையையும், நாற்காலியையும், குத்துவிளக்கையும் வைப்போம்; அவர் நம்மிடத்தில் வரும்போது அங்கே தங்கலாம் என்றாள்" (2 இராஜாக்கள் 4:10). அது வெறும் படுக்கை அறையோ மற்றும் உணவு உண்ணும் அறையோ அல்ல.
4) கர்ப்பத்தின் கனி என்னும் ஆசீர்வாதம்:
அந்த ஸ்திரீயின் சேவைக்கும் தாராள மனப்பான்மைக்கும் கைம்மாறு செய்ய எலிசா விரும்பினார். அப்போது அப்பெண்ணுக்கு குழந்தை இல்லை என்ற விவரம் தன் வேலைக்காரனான கேயாசி மூலம் தெரிய வந்ததால், அடுத்த வருடம் அவளுக்கு குழந்தை இருக்கும் என்று தீர்க்கதரிசனம் கூறினார். தேவன் அவளை ஆசீர்வதித்து அவளுக்கு ஒரு மகனைக் கொடுத்தார் (2 இராஜாக்கள் 4:11-17).
5) பிரமிக்க வைக்கும் விசுவாசம்:
அந்த குழந்தை வளர்ந்தது, பல வருடங்கள் கழித்து, என்னவென்று தெரியாத நோயால் தனது தாயின் மடியிலே இறந்தது. இறந்த குழந்தையை எலிசாவின் படுக்கையில் கிடத்தி விட்டு, அவள் கார்மேல் மலைக்கு 20 மைல்கள் பயணம் செய்து வந்து எலிசாவிடம் தன் துக்கத்தைத் தெரிவித்தாள். உடனடியாக எலிசா அவ்வீட்டிற்கு வந்து; "கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்து, கிட்டேபோய், தன் வாய் பிள்ளையின் வாயின்மேலும், தன் கண்கள் அவன் கண்களின்மேலும், தன் உள்ளங்கைகள் அவன் உள்ளங்கைகளின்மேலும் படும்படியாக அவன்மேல் குப்புறப் படுத்துக் கொண்டான்; அப்பொழுது பிள்ளையின் உடல் அனல் கொண்டது.
அவன் எழுந்து, அறைவீட்டில் இங்கும் அங்கும் உலாவி, திரும்பக் கிட்டப் போய் அவன்மேல் குப்புறப்படுத்தான்; அப்பொழுது அந்தப் பிள்ளை ஏழுதரம் தும்மித் தன் கண்களைத் திறந்தான்" (2 இராஜாக்கள் 4:35).
6) கீழ்ப்படிதல்:
பஞ்சத்தின் போது பெலிஸ்தரின் தேசத்திற்கு இடம் மாற எலிசா பரிந்துரைத்தபோது, அவள் உடனே கீழ்ப்படிந்தாள் (2 இராஜாக்கள் 8:1-6). அவள் திரும்பி வந்ததும், தன் வீட்டையும் வயலையும் திருப்பித் தருமாறு ராஜாவிடம் முறையிட்டாள். கேயாசி அந்த நேரத்தில் பிள்ளை உயிரடைந்த சாட்சியைப் பகிர்ந்து கொள்ள நேர்ந்தது. எல்லாவற்றையும் கேட்டறிந்த ராஜா அவளுக்கான அனைத்தையும் திரும்ப கொடுத்தான்.
7) நீடித்த மரபு:
"ஸ்திரீகள் சாகக்கொடுத்த தங்களுடையவர்களை உயிரோடெழுந்திருக்கப்பெற்றார்கள்; வேறுசிலர் மேன்மையான உயிர்த்தெழுதலை அடையும்படிக்கு, விடுதலைபெறச் சம்மதியாமல், வாதிக்கப்பட்டார்கள்" (எபிரெயர் 11:35).
எனக்குள் இருக்கும் விசுவாசம் என் செயலில் வெளிப்படுகிறதா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்