ஒரு போதகர் நான்கு சபைகளை மேற்பார்வையிட வேண்டியிருந்தது. ஆகையால் ஒவ்வொரு சபையிலும் சில தலைவர்களை மூப்பர்களாக நியமிக்க அவர் திட்டமிட்டார். ஒரு கிராம சபையில் இதற்கு தகுதியுள்ள இரண்டு சாத்தியமான வேட்பாளர்கள் இருந்தனர். ஒருவர் கொஞ்சம் படித்தவர், அவர் அருகில் உள்ள ஒரு மளிகைக் கடையில் வேலை செய்தும் கொண்டிருந்தார். இன்னொருவர் கிராமத்தில் நிறைய நிலங்கள் மற்றும் தானியக்கிடங்குகளைக் கொண்ட ஒரு விவசாயியுடன் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது போதகருக்கு புத்திசாலித்தனமான யோசனை தோன்றியது, அதன்படி அவர்களின் முதலாளிகளைச் சென்று அவர்களைப் பற்றி விசாரிக்க முடிவு செய்தார். முதலில் மளிகைக் கடை உரிமையாளரிடம் சென்றார்; அங்கு பார்த்தால் ஒரு நீண்ட புகார் பட்டியல் இருந்தது, அதாவது தன்னிடம் வேலை பார்ப்பவர் நேரத்தை கடைபிடிக்க மாட்டார், சோம்பேறி, நேரம் தாழ்த்துபவர், வாடிக்கையாளர்களுடன் மரியாதையாக பேச மாட்டார் எனக் கூறினார். அடுத்ததாக விவசாயிடம் வேலை பார்க்கும் தொழிலாளியை பற்றி விசாரிக்க போன போது அவர் நேரம் தவறாதவர், கடின உழைப்பாளி, பணிவானவர், பண்பானவர் மற்றும் நேர்மையானவர் என்று கூறினார். இப்போது முடிவு என்ன என்று ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஆம், போதகர் விவசாயத் தொழிலாளியை; அதாவது அவர் மற்றவரைப் போல் அதிகம் கற்கவில்லை என்றாலும் மூப்பராக நியமித்தார். உள்ளூர் சபையில் இருக்கும் தலைவர்களின் தகுதி பற்றி பவுல் எழுதுகிறார். சபையில் தலைமைக்கு ஆசைப்படும் நபர் தனது பணியிடத்திலும் அக்கம்பக்கத்திலும் அப்பழுக்கற்ற அல்லது குற்றமற்ற நற்பெயரைக் கொண்டிருக்க வேண்டும். "அவன் நிந்தனையிலும், பிசாசின் கண்ணியிலும் விழாதபடிக்கு, புறம்பானவர்களால் நற்சாட்சி பெற்றவனாயுமிருக்கவேண்டும்" (1 தீமோத்தேயு 3:7).
தலைமைத்துவத்திற்கான இடம் என்பது சபையின் நான்கு சுவர்களுக்குள் காணப்படும் செயல்பாடுகளை வைத்து தீர்மானிக்கப்படுவது என்பது மிகவும் வருந்தத்தக்கது. ஆமாம், கிறிஸ்தவ கலாச்சாரத்தை பிரதிபலிக்கக் கூடிய வகையில் தங்களின் ஆவிக்குரிய வாழ்வை அற்புதமாக (நடித்துக்) காட்டக்கூடிய பலர் உள்ளனர். சபையின் ஆராதனை நேரங்களில் வேதாகம வாசிப்பில் ஈடுபடலாம் அல்லது ஆராதனைக்கு துணை நிற்கும் பாடல் குழுவின் அங்கத்தினராக இருக்கலாம் அல்லது இருக்கைகளில் அமர வைக்கும் வரவேற்பாளராக இருக்கலாம். ஒன்றை நினைவில் கொள்வோம்; கிறிஸ்தவ சமூகத்திற்குள் பங்கேற்பதும் பக்தியும் மாத்திரம் சபையின் தலைமைத்துவத்திற்கான அளவுகோல் அல்ல. சபைக்கு வெளியே, பணியிடங்களில் மற்றும் அருகாமையில் வசிப்போர், வெளியிடங்களில் நம்மை பற்றி சொல்வது என்ன, நமக்கு நற்பெயர் உள்ளதா என்பதான சாட்சி மிக அவசியம் என பவுல் வலியுறுத்துகிறார். இந்த அம்சங்களெல்லாம் விடப்பட்டததால் தான் சமுதாயத்தில் மோசமான சாட்சிகள் உள்ளன, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையும் தவறாக சித்தரிக்கின்றனர்.
உள்ளூர் சபையில் நற்பெயருக்கான தரநிலைகள் கோரப்படாததினால், சபையின் உறுப்பினர்கள் பணியிடங்களில் தார்மீக மதிப்புகள் மற்றும் நெறிமுறைகளுக்கான அணுகுமுறையில் குறைபாடுள்ளவர்களாக இருக்கிறார்கள். மேலும், அத்தகைய மக்களுக்கு தலைமைத்துவங்கள் கொடுக்கப்படும்போது, சபையானது எது சரி அல்லது தீமை என்று இல்லாமல் அனைத்தையும் அங்கீகரிக்கிறது மற்றும் கனத்திற்கு தகுதியற்றவர்களை குறித்ததான தேவையற்ற நம்பகத்தன்மையையும் அளிக்கிறது.
உண்மையைச் சொல்லப்போனால், அன்றாட வாழ்வில் சமூகத்தில் நாம் வெளிப்படுத்துவதுதான் உண்மையான ஆவிக்குரிய வாழ்வு. குடும்பத்திலும் சமூக வாழ்க்கையிலும் உண்மையோ அல்லது நேர்மையோ இல்லாமல் நடப்போமேயானால் அது மதம் சார்ந்த கபடநாடகம் (போலித்தனம்).
என் அன்றாட வாழ்க்கையில் கிறிஸ்துவின் சாயலை நான் வெளிப்படுத்துகிறேனா?
Author : Rev. Dr. J. N. Manokaran