இந்தியா ஜனவரி 26, 1950 அன்று அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டது. அந்த நாள் குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது.
அறுதிஇறுதி நியமனங்களை வழங்குபவர்:
தேவனே சிருஷ்டிகர், இறையாண்மையாளர், சர்வவல்லமையுள்ளவர், நீதியுள்ளவர் மற்றும் நியாயாதிபதி என்பதால் அவரே அறுதிஇறுதியான சட்டமியற்றுபவர். பாராளுமன்றங்கள் அல்லது அரசர்கள் உட்பட மனிதர்கள், தாங்கள்தான் இறுதி அதிகாரம் என்று ஆணவத்துடன் நினைத்தால், அவர்களின் சட்டங்கள் ஆபத்தானதாக இருக்கும். சட்டம் தேவ அதிகாரத்தின் கீழ் மற்றும் அவரது பண்புகள், எதிர்பார்ப்புகள், விருப்பம் மற்றும் கட்டளைகளின்படி இயற்றப்பட வேண்டும். எந்த தேசமும் தேவனை மீறி வாழ முடியாது.
பிரமாணத்தின் ஆவி:
கர்த்தராகிய இயேசு நியாயப்பிரமாணத்தின் வெளிப்புற எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிய பரிசேயர்களைக் கண்டனம் செய்தார், அவர்களின் மிதமிஞ்சிய நியாயப்பிரமாண ஆவியை புறக்கணித்தார். ஆம், சடங்குகளைச் செய்வதிலும், மரபுகளைக் கடைப்பிடிப்பதிலும், தசமபாகம் கொடுப்பதிலும் அவர்கள் நல்லவர்களாக இருந்தனர். இருப்பினும், அவர்கள் நீதி, இரக்கம் மற்றும் விசுவாசத்தை புறக்கணித்தனர் (மத்தேயு 23:23).
பிரமாணத்தின் நோக்கம்:
பவுலின் கூற்றுப்படி, பிரமாணத்தின் நோக்கம் மனிதர்களுக்குள் இருக்கும் பாவத்தை உணர்த்துவது அல்லது வெளிப்படுத்துவது; அது அவர்களுக்கு இரட்சிப்பைத் தேட உதவும் (கலாத்தியர் 3:19-25). தேவனுடைய வார்த்தை ஒரு கண்ணாடியைப் போன்றது, நவீன மொழியில் சொல்ல வேண்டும் என்றால் லேசர் ஸ்கேனர் (ஒளிக்கதிர் மூலம் கூர்மையாக காணல்) போன்றது; தேவ வார்த்தை உள் அசுத்தத்தையும் பாவத்தையும் வெளிப்படுத்துகிறது (யாக்கோபு 1:23).
பிரமாணத்தின் உள்ளடக்கம்:
மோசே பிரமாணம் வெளிப்படுத்துவது போல், ஆவிக்குரிய வழிபாட்டு கட்டளைகள், சமூகத்தில் நடத்தை மற்றும் உறவுகளை நிர்வகிக்கும் தார்மீக கட்டளைகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை நடத்த சுகாதாரம் மற்றும் உணவுமுறைக்கென கட்டளைகள் உள்ளன.
பிரமாணத்தின் முடிவு:
பிரமாணத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் மனிதன் பிழைக்க முடியும். "என் கட்டளைகளையும் என் போதகத்தையும் உன் கண்மணியைப்போல் காத்துக்கொள், அப்பொழுது பிழைப்பாய்" (நீதிமொழிகள் 7:2). எனினும் எந்த மனிதனாலும் நியாயப்பிரமாணத்தைப் பரிபூரணமாக கடைபிடிக்க முடியாது. எனவே, கர்த்தராகிய இயேசு நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றவும், நியாயப்பிரமாணத்தின்படி மனிதர்களின் சார்பாக மரிக்கவும் இந்த உலகத்திற்கு வந்தார், மேலும் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் (மத்தேயு 5:17).
பிரமாணம் கற்பிக்கப்பட வேண்டும்:
ஆபிரகாம் தனது சந்ததியினருக்கு நியாயப்பிரமாணம், உடன்படிக்கை மற்றும் வாக்குத்தத்தம் ஆகியவற்றைக் கற்பிப்பார் என்று தேவன் எதிர்பார்த்தார், அதனால் அவர்கள் வலிமைமிக்க மற்றும் பெரிய தேசமாக மாறுவார்கள் (ஆதியாகமம் 18:18,19).
நீதியுள்ள தேசம்:
ஒரு தேசம் நேர்மையாக இருப்பதன் மூலம் பெரிய தேசமாக முடியும் (நீதிமொழிகள் 14:34). தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, வேதாகம கோட்பாடுகளின்படி தேசத்தை ஒழுங்கமைத்து ஆளும் தேசம் நீதியுள்ள தேசம்.
தேவ பிள்ளைகள் ஜெபிக்க வேண்டும், நாடுகளுக்காக பரிந்து பேச வேண்டும், மேலும் தேவ வார்த்தையான சத்தியத்தை நாடுகளுக்கு கற்பிக்க வேண்டும்.
வேதாகமத்தை அறியணுமே, என் தேசம் மாபெரும் தேசமாக மாற வேண்டுமே என்ற வாஞ்சை என்னிடம் உள்ளதா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்