மனந்திரும்புதலா அல்லது மனவருத்தமா?

உலகில் சுமார் 105 நாடுகளில் இருந்து 15000க்கும் மேற்பட்டவர்களிடம் 'எதைக் குறித்து மன வருத்தம்' என்பதாக டேனியல் பிங்க் என்பவர் ஒரு ஆய்வை மேற்கொண்டார்.  மக்கள் பொதுவாக நான்கு வகைகளில் வருத்தப்படுவதை அவர் கண்டறிந்தார். வருத்தம் என்பது பச்சாத்தாபம், அவமானம், குற்ற உணர்வு மற்றும் ஏமாற்றத்தை ஏற்படுத்தும் கடந்த கால நிகழ்வு அல்லது செயல் அல்லது நடத்தை பற்றி வருத்தமாகவும் கவலையாகவும் உணர்வதாகும். இது ஒரு எதிர்மறையான உணர்வு, இதனால் பிரயோஜனமே இல்லை. ஆனால் அதற்கு மாறாக, மனந்திரும்புதல் என்பது ஒரு நேர்மறையான உணர்வாகும். ஆம், இது ஒரு நபர் தனது பாவத்தைப் புரிந்துகொள்ள உதவுகிறது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் மன்னிப்புக்காக மன்றாடுகிறது, பாவத்தை விட்டுவிட்டு பரிசுத்த வாழ்க்கையை வாழ முடிவு செய்கிறது.

இன்னும் சொல்ல வேண்டுமென்றால்; உலக துக்கம் பேரழிவாக இருக்கும் போது, மனந்திரும்புதலின் தெய்வீக துக்கம் இரட்சிப்புக்கு வழிவகுக்கிறது.   "தேவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது; லெளகிக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது" (2 கொரிந்தியர் 7:10). டேனியல் பிங்கின் கணக்கெடுப்பு இந்த உலக துயரத்தைப் பற்றிய விவரங்களைத் தருகிறது.

1) பொறுப்பேற்கத் தவறுதல்:
வயது மூத்தவர்கள் (பெரியவர்கள்) பள்ளி பருவத்தில் நன்றாக கற்கவில்லையே, வெற்றிக்கான ஓட்டத்தில் செல்வத்தை புறக்கணித்தோமே, தங்கள் துணைக்கு சரியாக உதவி செய்யவில்லையே, ஒரு நல்ல காரியத்தில் பங்களிக்கவில்லையே எனப் போன்ற விஷயங்களை நினைத்து வருந்துகிறார்கள்.

2) தைரியமாக இருக்க தவறுதல்:
வாழ்க்கையை மாற்றும் முடிவுகளை எடுப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தபோது, ​​​​அவர்கள் செய்யவில்லை.  அபாயம் ஏற்படுமோ என்ற பயம், பின்விளைவுகள் அல்லது மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்பதெல்லாம் அதற்கு ஒரு காரணம்.  இந்த தைரியமின்மையால் பலர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்காகவும் ஒரு முடிவை எடுப்பதில்லை.

3) தார்மீக ஒழுங்கில் தவறுதல்:
கீழ்ப்படியாமை, கலகம், பிறரைப் புண்படுத்தும் சுயநலம் போன்ற தார்மீகத் தோல்விகளுக்காக மக்கள் வருந்துகிறார்கள். பெற்றோர்களை காயப்படுத்தியதற்காக குழந்தைகள் வருந்துகிறார்கள்; அதுபோல குழந்தைகளை மனம் நோக செய்து விட்டோமே என்று பெற்றவர்களும் வருந்துகிறார்கள். விபச்சாரம் அல்லது ஆபாச படங்கள் மற்றும் பிற வகையான வஞ்சகத்தால் துணையை ஏமாற்றும் போதும் வருத்தம் ஏற்படுவதுண்டு.  

4) உறவு முறைகளில் தவறுதல்:
புறக்கணிப்பு, அலட்சியம் அல்லது சுயநலம் அல்லது அன்பற்ற நிலை அல்லது கடுமையாக நடந்துக் கொள்ளல் போன்ற காரியங்களால் 
குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள், சக ஊழியர்கள் என உறவுகளை இழக்க நேரிடுகிறது. ஒப்புரவாகுதலுக்கு வாய்ப்பு இல்லாததால், அந்த நபர் இறக்கும் வரை இந்த வருத்தம் காணப்படும்.

"தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்" (கலாத்தியர் 6:7-8). நீதியை விதைப்பவர்கள் நீதியை அறுவடை செய்கிறார்கள். "சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான்" (2 கொரிந்தியர் 9:6).

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைக் காட்டிக் கொடுத்ததற்காக யூதாஸ் வருந்தினான், ஆனால் மனந்திரும்பவில்லை, முற்றுமாய் இழந்தான். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை மறுதலித்ததற்காக பேதுரு வருந்தினான் மற்றும் திருந்தினான், அவன் மீட்டெடுக்கப்பட்டான்.

நான் மனஸ்தாபப்படுகிறேனா அல்லது மனந்திருந்துகிறேனா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download