தாடி இல்லா பரிசுத்தம் ?
ஒரு பிரசங்கியார் மணமகனை தாடி வைத்திருந்ததற்காக அவரைக் கண்டித்து, அதை அகற்றுமாறும், அவ்வாறு செய்யும்படி அவரைத் தூண்டுமாறும் திருமண விழாவில் மணமகளிடமும் அறிவுரை கூறினார். மேலும் இதில் சுவாரஸ்யம் என்னவெனில் உதாரணமாக யோசேப்பின் வாழ்க்கையிலிருந்து ஒரு சம்பவத்தையும் மேற்கோள் காட்டினார். "அப்பொழுது பார்வோன் யோசேப்பை அழைப்பித்தான்; அவனைத் தீவிரமாய்க் காவல்கிடங்கிலிருந்து கொண்டுவந்தார்கள். அவன் சவரம்பண்ணிக்கொண்டு, வேறு வஸ்திரம் தரித்து, பார்வோனிடத்தில் வந்தான்" (ஆதியாகமம் 41:14). "அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தன் முகநாடியை வேறுபடுத்தி, அவர்களிடத்தில் பித்தங்கொண்டவன்போலக் காண்பித்து, வாசற்கதவுகளிலே கீறிக்கொண்டிருந்து, தன் வாயிலிருந்து நுரையைத் தன் தாடியில் விழப்பண்ணிக் கொண்டிருந்தான்" (1 சாமுவேல் 21:13) என்பதான தாவீதின் கதையெல்லாம் பிரசங்கியார் அறியவில்லை போலும். "அந்த மனுஷர் வருகையில், அவர்கள் செய்தி தாவீதுக்கு அறிவிக்கப்பட்டது; அப்பொழுது அந்த மனுஷர் மிகவும் வெட்கப்பட்டபடியினால், அவர்களுக்கு எதிராக ராஜா ஆட்களை அனுப்பி: உங்கள் தாடி வளருமட்டும் நீங்கள் எரிகோவிலிருந்து பிற்பாடு வாருங்கள் என்று சொல்லச்சொன்னான்" (1 நாளாகமம் 19:5). "அடிக்கிறவர்களுக்கு என் முதுகையும், தாடைமயிரைப் பிடுங்குகிறவர்களுக்கு என் தாடைகளையும் ஒப்புக்கொடுத்தேன்; அவமானத்துக்கும் உமிழ்நீருக்கும் என் முகத்தை மறைக்கவில்லை" (ஏசாயா 50:6). ஆம், மேசியாவாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தாடி பறிக்கப்பட்டது. "உங்கள் தலைமயிரைச் சுற்றி ஒதுக்காமலும், தாடியின் ஓரங்களைக் கத்தரிக்காமலும்…." (லேவியராகமம் 19:27; 21:5). தாடியை எப்படி பராமரிக்க வேண்டும் என்று ஆசாரியர்களுக்குக் கட்டளையிடப்பட்டது.
1) வேத கல்வியறிவின்மை:
துரதிர்ஷ்டவசமாக, பல பிரசங்கிகள் வேத அறிவற்றவர்கள் என்றே சொல்ல வேண்டும். அவர்களுக்கு சில கதைகள் அல்லது பகுதிகள் மாத்திரம் நன்கு தெரியும் அல்லது நன்கு அறிந்த பிரபலமான வசனங்களைத் தேர்ந்தெடுத்து பேசுவார்கள். அநேகமாக, பிரசங்கியாருக்கு தாடி பிடித்திருக்காது, அதற்கு ஏதுவாக யோசேப்பின் வாழ்க்கையிலிருந்து ஒரு சம்பவத்தை எடுத்து தன் கருத்தை நியாயப்படுத்தும் விதமாக வேதாகமத்திற்கு மாறான நிலைப்பாட்டை ஆதார உரையாக எடுத்துக் கொண்டார்.
2) தேவையில்லாதவற்றைப் பிரசங்கித்தல்:
ஒரு திருமணத்தில், பலர் வெவ்வேறு நம்பிக்கை பின்னணியில் இருந்து வரும்போது, திருமணத்தைப் பற்றி வேதாகமம் என்ன கற்பிக்கிறது என்பதை போதகர் கற்பிப்பார் என்று எதிர்பார்க்ப்படும். திருமண உடன்படிக்கை, திருமணத்தில் அன்பு, திருமணத்தை தேவன் கனப்படுத்துகிறார் போன்ற கருப்பொருள்களுக்குப் பதிலாக; பிரசங்கியாரின் கருப்பொருள்: 'தாடி இல்லாத திருமணம்'. தேவ செய்தியை அளிப்பதற்கான பொன்னான வாய்ப்பை தேவையற்ற விஷயங்களைப் பற்றி பேசி வீணடித்து விட்டார்.
3) உள்ளடக்கம்:
வருபவர்கள் தேவனுடைய வார்த்தையைக் கேட்க விரும்பவார்கள். "ஆசாரியனுடைய உதடுகள் அறிவைக் காக்கவேண்டும்; வேதத்தை அவன் வாயிலே தேடுவார்களே; அவன் சேனைகளுடைய கர்த்தரின் தூதன்" (மல்கியா 2:7). ஆம், கேட்போர் கர்த்தரிடமிருந்து போதனையையும் செய்தியையும் எதிர்பார்க்கும்போது, பிரசங்கி யாரையும் மேம்படுத்தாத முட்டாள்தனமான விஷயங்களைப் பேசுகிறார்.
4) சூழல்:
சூழல் தெரியாமல், பிரசங்கியார்கள் பிறந்தநாள் விழாவில் மரணத்தைப் பற்றி பேசுவதும்; திருமணத்தில் வேசியான ராகாபின் முந்தைய வாழ்க்கையைப் பற்றி பேசுவதும்; யாக்கோபும் அவனது மனைவிகளும் என திருமண ஆண்டு விழாவில் பேசுவதும் வழக்கமாயிற்று.
நான் சத்தியத்தை வாழ்வில் கடைபிடிக்கிறேனா, அதையே போதிக்கின்றேனா அல்லது அற்ப விஷயங்களைப் பற்றி விவாதிக்கிறேனா?
Author. Rev. Dr. J. N. Manokaran