ஜெர்மன் அதிபராக ஏஞ்சலா மெர்க்கல் 2005 முதல் 2021 வரை ஜெர்மனியை ஆட்சி செய்தார். தனது வாழ்நாள் முழுவதும் அவர் தனது கணவருடன் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வாழ்ந்தார், பெரிய பங்களாவில் அல்ல. ஒருசமயம் பத்திரிக்கையாளர்கள் நேர்காணலில், அவர் வீட்டில் தனக்கு வேலையாட்கள் இல்லை, கணவன் மனைவியாக தாங்கள் இருவருமே வீட்டு வேலைகளை செய்வதாகப் பகிர்ந்து கொண்டார். உங்களிடம் ஒரு சில உடைகள் தான் இருக்கிறதா! என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, “ஆம், நான் ஒரு அரசு ஊழியர் அல்லவா” என்றார். அதிலும் சுவாரஸ்யமானது என்னவென்றால், துணிகளை துவைக்க பயன்படுத்தும் வாஷிங்மெஷினின் சத்தம் கூட தங்கள் அண்டை வீட்டாரை தொந்தரவு செய்யாதபடி, இரவில் அதற்கான நேரத்தில் இயக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார். உன்னைப் போல் அண்டை வீட்டாரை நேசி என்பதற்கான மற்றும் பணிவிடைத் தலைமைத்துவத்தின் உதாரணத்துவம் அல்லவா இது (மாற்கு 12:31). மேற்கத்திய நாடுகளில் புராட்டஸ்டன்ட் சீர்திருத்தம் காரணமாக இராஜரீக பிரமாணம் ஒரு கலாச்சார மதிப்பாக மாறியுள்ளது.
சேவை:
பதினாறு வருடங்கள் ஐரோப்பாவில் ஒரு சக்திவாய்ந்த தலைவராக இருந்த போதிலும், அவர் தனது அரசியல் அதிகாரமும் அந்தஸ்தும் மக்களுக்கு சேவை செய்யவே என்பதை அறிந்திருந்தார். மற்றவர்களை ஒடுக்கவோ அல்லது ஈர்க்கவோ அவர் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தவில்லை.
எளிமை:
அரசியல்வாதிகளில் சிறிய பதவியில் இருப்பவர்கள் கூட வேலைக்காரர்கள் மற்றும் ஓட்டுனர்களுடன் மாளிகைகளில் வாழ விரும்பும்போது, ஏஞ்சலா எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார். கிறிஸ்தவ தலைவர்கள் கூட எளிமையான வாழ்க்கை முறையை வாழ்வதில்லை, அது மாத்திரமல்ல, சிலர் உலகின் பிரபலங்களுடன் போட்டியிடுகிறார்கள். சிலருக்கு, அவர்களின் துணைக்கு வேலையாட்கள் அல்லது காவலர்கள் என அதிக ஆட்கள் துணையோடு இருப்பது அவர்களின் சுயமரியாதையை தீர்மானிக்கிறது.
உணர்திறன்:
மற்றவர்களின் தேவைகளை உணர்ந்து செயல்படுவது ஒரு கிறிஸ்தவ நற்பண்பு. “இது என் வீடு; நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்” என்பதாக பலருக்கு ஒரு மனப்பான்மை உள்ளது. கிரிக்கெட் ஜாம்பவான்கள், சினிமா பிரபலங்கள் போன்ற பிரபலங்கள் கூட சத்தமாக பார்ட்டிகள் நடத்தி அக்கம் பக்கத்தினர் அனைவரையும் கலங்க வைக்கின்றனர். ஆனால் இவரோ சலவை இயந்திரத்தைப் பயன்படுத்துவது ஏஞ்சலாவின் நியாயமான உரிமையாக இருந்தபோதிலும், அவர் தனது அண்டை வீட்டாரின் மீது கரிசனைக் கொண்டார், தங்களால் மற்றவர்களின் தூக்கம் பாதிப்படையக்கூடாது என நினைத்தார். அண்டை வீட்டாரை நேசிப்பது என்பது அவர்களின் உரிமைகளை மதிப்பது, அவர்களை கண்ணியமாக நடத்துவது, அவர்களை தொந்தரவு செய்யாமல் அல்லது தொல்லைக் கொடுக்காமல், அமைதியான வாழ்க்கையை வாழ வழிவகுப்பதாகும்.
திருப்தி:
தன்னிடம் இருப்பதே போதும் என்று ஒருவன் திருப்தி அடைகிறானெனில் அத்துடன் அவனுக்குள்ள தேவபக்தியானது மிகுந்த இலாபமாயிருக்கும், என்பதே உண்மை (I தீமோத்தேயு 6:6). ஒரு நாளைக்கு பலமுறை ஆடைகளை மாற்றும் அரசியல் தலைவர்கள் இருந்தபோது, ஏஞ்சலாவிடம் எண்ணி நினைவில் கொள்ளக்கூடிய ஒரு சில உடைகள் மட்டுமே இருந்தன. அதுமட்டுமின்றி ஒரு அரசு ஊழியராக, அதுதான் என்னால் முடியும் என்றும் கூறினார்.
நான் என் வாழ்க்கையில் வேதாகம விழுமியங்களை நிரூபிக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்