வாக்களிக்கப்பட்ட தேசமா அல்லது கனவு தேசமா

ஆபிரகாமின் சந்ததியினருக்கு வாக்களிக்கப்பட்ட தேசத்தை அவர்களுக்கு சுதந்திரமாக கொடுப்பதாக தேவன் ஒரு உடன்படிக்கை செய்தார் (ஆதியாகமம் 15:18-21). இது ஈசாக்கிற்கு ஒரு வாக்குறுதியாகவும், யாக்கோபுக்கான பிரமாணமாகவும், இஸ்ரவேல் தேசத்திற்கு நித்திய உடன்படிக்கையாகவும் உறுதிப்படுத்தப்பட்டது (சங்கீதம் 105:9 -11). மோசேயின் தலைமையில், இஸ்ரவேல் புத்திரர் எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டனர். ஆனாலும், அவர்களுடைய விசுவாசமின்மையால் அவர்கள் தேசத்தை சுதந்தரிக்க தேவன் அனுமதிக்கவில்லை; நாற்பது வருடங்கள் வனாந்தரத்தில் அலைந்தார்கள் (எண்ணாகமம் 14:33). பிற்பாடு, யோசுவாவின் தலைமையில் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தைச் சொந்தமாக்க தேவன் அவர்களுக்கு உதவினார். ஆனாலும், சுதந்தரித்துக் கொள்ள தேசம் மகா விஸ்தாரமாயிருந்தது. தேசத்தை சதந்தரிப்பதில் ஆர்வம் காட்டாததற்காக யோசுவா இஸ்ரவேலர் மீது கோபமடைந்தான் (யோசுவா 13:1; 18:2-3). நானூறு ஆண்டுகளுக்குப் பிறகுதான் எபூசியர்களால் ஆளப்பட்ட எருசலேம் நகரைக் கைப்பற்றி அதைத் தலைநகராக தாவீது மாற்றினான் (2 சாமுவேல் 5:6-8). இஸ்ரவேல் தேசத்தைப் போலவே, உலகளாவிய திருச்சபை அனைத்து கலாச்சாரங்கள், மொழிகள், மக்கள், தேசங்கள் ஆகியவற்றிற்குச் சென்றடையவில்லையா?

 1) அறியாத பயம்:
இஸ்ரவேலர் வனாந்தரத்தில் நாடோடி வாழ்க்கைக்கும் ஆயத்தம் செய்யாமலே கிடைக்கும் உணவுக்கும் பழகியிருந்தார்கள். நிரந்தர குடியேற்றத்தை அவர்கள் விரும்பவில்லை.

2) அலட்சியம்:
இஸ்ரவேல் தேசம் தேவ சித்தம், திட்டம், நோக்கம் மற்றும் வாக்குத்தத்தம் ஆகியவற்றில் அலட்சியமாக இருந்தது.

3) ஐக்கியமின்மை:
தேவன் இந்த கோத்திரங்களை தனது சொந்த ஜனங்களாக தேர்ந்தெடுத்த நோக்கத்தை நினைத்து ஐக்கியப்பட்டிருக்கலாம், ஆனால் ஒன்று கூடவில்லை.

4) விசுவாசமின்மை:
தேவனின் கிருபையான செயல்களினால் ஒரு பெரிய வரலாற்று நிகழ்வை தேசம் கொண்டிருந்தாலும், வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தைச் சுதந்திரமாக தேவன் வழங்குவார் என அவர்களால் நம்ப முடியவில்லை.

5) தரிசனமின்மை:
இஸ்ரவேல் ஜனங்களுக்கு தேவன் தங்கள் மீது வைத்துள்ள ஒரு உலகளாவிய திட்டத்தைப் பற்றிய வரைப்படத்தைப் பற்றிய சிந்தையோ தரிசனமோ அவர்களிடம் இல்லை. "கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றும்படியாய் அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன் என்றார்" (ஆதியாகமம் 18:19). ஆம், இஸ்ரவேல் தேசம் தன் கட்டளைகளைக் கைக்கொண்டு ஒரு பெரிய தேசமாக மாற வேண்டும் என்று விரும்பினார்.  

ஆகவே, தேசங்களைத் துரத்தமாட்டேன் என்று கர்த்தர் சொன்னார், மாறாக அவர்கள் உங்களை நெருக்குவார்கள்; அவர்களுடைய தேவர்கள் உங்களுக்குக் கண்ணியாவார்கள் என்றார். துரதிர்ஷ்டவசமாக, இஸ்ரவேல் புத்திரர், கானானியர், ஏத்தியர், எமோரியர்,பெரிசியர், ஏவியர், எபூசியராகிய இவர்கள் நடுவே வாழ்ந்தனர் (நியாயாதிபதிகள் 2:3; 3:5). 

நான் தேவனுடைய பெரிய கட்டளையை நிறைவேற்றுவதில் சிரத்தையுடைய நபரா?

Author: Rev. Dr. J. N. Manokara



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download