நட்பு என்ற ஒன்று எப்போதும் மதிக்கப்படுகிறது மற்றும் கொண்டாடப்படுகிறது. நட்பைப் பற்றி வேதாகமம் பல விஷயங்களைக் கற்பிக்கிறது.
1) பாவிகளின் நண்பன்:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தனது சீஷர்களை சிநேகிதர் என்றழைத்தது முற்போக்கானது (யோவான் 15:15). பூமியில் அவரின் ஊழியத்தின்போது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து லாசரை தன்னுடைய சிநேகிதன் என்று அழைத்தார் (யோவான் 11:11). குருக்கள் தங்கள் சீஷர்களை தூசியைப் போல் கருதினாலும், தேவகுமாரன் தன் சீஷர்களை நண்பர்களாக மதிக்கிறார். தங்களை தாங்களே நீதிமான்கள் என்றழைத்துக் கொள்ளும் மதத் தலைவர்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை பாவிகளின் சிநேகிதன் என்று கேலி செய்தனர் (மத்தேயு 11:19). அந்த மதத் தலைவர்களைப் பொறுத்தவரையில், பாவிகள் அழிக்கப்பட வேண்டும், நண்பர்களாக்கக் கூடாது, உண்மையான நண்பர்கள் ஜீவனைக் கொடுப்பவர்கள் (யோவான் 15:13).
2) தேவனின் நண்பன்:
"ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்கிற வேதவாக்கியம் நிறைவேறிற்று; அவன் தேவனுடைய சிநேகிதனென்னப்பட்டான்" (யாக்கோபு 2:23). ஆபிரகாம் விசுவாசம் மற்றும் கீழ்ப்படிதல் காரணமாக தேவனின் சிநேகிதன் என்று அழைக்கப்பட்டான்.
3) நல்ல நண்பர்கள்:
"பரிமளதைலமும் சுகந்ததூபமும் இருதயத்தைக் களிப்பாக்குவதுபோல, ஒருவனுடைய சிநேகிதன் உட்கருத்தான ஆலோசனையினால் பாராட்டும் இன்பமானது களிப்பாக்கும்" (நீதிமொழிகள் 27:9). வெளிப்படையாகவும் நேரடியாகவும் பேசும் உண்மையான நண்பர்களைக் கொண்டிருப்பது நல்லது. அவர்களின் கண்டனங்கள் மதிக்கப்படுகின்றன (நீதிமொழிகள் 27: 5-6). உண்மையான அன்பான நண்பர்கள் முன்னேற்றத்தில் மகிழ்ச்சியடைகிறார்கள், அவர்களிடத்தில் பொறாமை இல்லை. யோனத்தான் இளவரசன் மற்றும் சவுலின் மகன், அவன்தான் அடுத்த ராஜாவாக வர வேண்டும், ஆனால் தேவன் தாவீதைத் தேர்ந்தெடுத்தார். யோனத்தானோ பொறாமைப்படுவதற்குப் பதிலாக, தாவீதுடன் உடன்படிக்கையை ஏற்படுத்தினான் (1 சாமுவேல் 18). சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான் (நீதிமொழிகள் 17:17).
4) கெட்ட நண்பர்கள்:
"சிநேகிதருள்ளவன் சிநேகம் பாராட்டவேண்டும்; சகோதரனிலும் அதிக சொந்தமாய்ச் சிநேகிப்பவனுமுண்டு" (நீதிமொழிகள் 18:24). எல்லாமே டிஜிட்டல் என்றான பின்பு இந்த தலைமுறையில் கெட்ட நட்பு என்பது சாத்தியம். கெட்ட, தீய, பொல்லாத, அநீதி, மற்றும் சுயநல நண்பர்கள் நமது ஒழுக்க விழுமியங்களை அழித்து, நம்மை ஆவிக்குரிய விரக்திக்கு தள்ளலாம் (1 கொரிந்தியர் 15:33).
5) பரிதாபகரமான நண்பர்கள்:
ஒரே எண்ண ஓட்டம் இல்லாத நண்பர்கள், யோபின் நண்பர்களைப் போலவே 'அலட்டுண்டாக்குகிற தேற்றரவாளர்களாக' தான் இருக்க முடியும் (யோபு 16:2)
6) கோபக்கார நண்பர்கள்:
"கோபக்காரனுக்குத் தோழனாகாதே" (நீதிமொழிகள் 22:24). அவர்களை கணிக்க முடியாது மற்றும் எடுத்த முடிவில் உறுதியாக இருக்க மாட்டார்கள். அவர்களின் நட்பு ஆபத்தில் முடியலாம் (நீதிமொழிகள் 22: 24-25).
எல்லா காலங்களிலும் சிறந்த உண்மையான நண்பர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மாத்திரமே. ஜோசப் எம். ஸ்க்ரீவனுடன் சேர்ந்து நாமும் பாடுவோமே; "பாவ சஞ்சலத்தை நீக்க பிராண நண்பர் தான் உண்டே.....".
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நண்பர் வேண்டுகோளுக்கு என்னுடைய மறுமொழி என்ன?
Author : Rev. Dr. J. N. Manokaran