சீஷர்களுடனான முன்னுரிமை

சீஷர்களுடனான முன்னுரிமை

கர்த்தராகிய இயேசு தனிமையில் கடலின் கரையிலிருந்து ஜெபித்துக் கொண்டிருந்தார்; சீஷர்கள் படகில் சென்றார்கள். "அப்பொழுது காற்று அவர்களுக்கு எதிராயிருந்தபடியினால், அவர்கள் தண்டு வலிக்கிறதில் வருத்தப்படுகிறதை அவர் கண்டு, இராத்திரியில் நாலாம் ஜாமத்தில் கடலின்மேல் நடந்து, அவர்களிடத்தில் வந்து, அவர்களைக் கடந்து போகிறவர்போல் காணப்பட்டார்" (மாற்கு 6:48). கர்த்தர் கரையிலிருந்தே காற்றை நிறுத்தியிருக்கலாம். ஆனால் அந்த அற்புதம் கர்த்தரிடமிருந்து தான் வந்தது என்பதை சீஷர்கள் அறிய மாட்டார்கள். தொலைதூரத்தில் இருந்து ஒரு அற்புதத்தைச் செய்வதற்குப் பதிலாக, கர்த்தர் அவர்களுடன் இருப்பதைத் தேர்ந்தெடுத்தார்.

1) சீஷர்களைப் பார்த்தார்:
கர்த்தர் தூரத்திலிருந்தே சீஷர்களைப் பார்த்தார். அவரது பிள்ளைகள் எப்போதும் அவரது கனிவான கண்காணிப்பின் கீழ் இருக்கிறார்கள். அவரது பார்வையில் இருந்து நாம் ஒருபோதும் தப்ப முடியாது. "என் ஆபத்துநாளிலே உமது முகத்தை எனக்கு மறையாதேயும்; உமது செவியை என்னிடத்தில் சாயும்; நான் கூப்பிடுகிற நாளிலே எனக்குத் தீவிரமாய் உத்தரவு அருளிச்செய்யும்" (சங்கீதம் 102:2) என்பதாக சங்கீதக்காரன் கர்த்தரிடம் வேண்டிக்கொண்டான். நாம் அவரைப் பார்க்க முடியாமல் போகலாம், ஆனால் அவர் நம்மைப் பார்க்கிறார்.

2) தண்ணீரில் நடந்தார்:
தண்ணீரோ அல்லது இயற்கையின் அனைத்து விதிகளின் மீதும் அவருக்கு அதிகாரம் ஆளுகை இருக்கிறது என்பதை கர்த்தராகிய இயேசு தம்முடைய சீஷர்களுக்கு விளக்குவதற்காக தண்ணீரின் மேல் நடந்தார், நம் துன்பத்தில், தேவன் தனது வல்லமையையும் பண்புகளையும் வெளிப்படுத்துகிறார்.

3) கடந்து சென்றார்:
"கடலின்மேல் நடந்து, அவர்களிடத்தில் வந்து, அவர்களைக் கடந்து போகிறவர்போல் காணப்பட்டார்" (மாற்கு 6:48). அவர் விலகிச் செல்வது போல் காட்டினார். ஆனாலும், சீஷர்கள் அவரைக் கவனித்தனர், "அவர் கடலின்மேல் நடக்கிறதை சீஷர்கள் கண்டு, ஆவேசம் என்று எண்ணி, சத்தமிட்டு அலறினார்கள்" (மாற்கு 6:49). அவர்கள் மிகுந்த அச்சமடைந்தனர். சீஷர்களைப் போல நாமும் தேவனை கிரகிப்பதில்லை. அவருடைய அன்பைத் தவறாகப் புரிந்து கொள்கிறோம், அவருடைய பிரசன்னத்தையும் உணருவதில்லை.

4) வருத்தத்தைக் கண்டார்:
அவர்கள் ஆபத்திலிருந்து தப்பிப்பதற்காக கூக்குரலிட்டபோது, கர்த்தர் அவர்களிடம் பேசினார். "அவர்களெல்லாரும் அவரைக் கண்டு கலக்கமடைந்தார்கள். உடனே அவர் அவர்களோடே பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாதிருங்கள்" (மாற்கு 6:50) என்றார். அவருடைய வார்த்தை அவர்களுக்கு சமாதானத்தையும் நம்பிக்கையையும் அளித்தது. அவருடைய வார்த்தைகள் எல்லா சூழ்நிலைகளிலும் நம்மை எப்போதும் பலப்படுத்துகின்றன.

5) படகில் உடனிருந்தார்:
கர்த்தர் அவர்களுடன் இருப்பதைத் தேர்ந்தெடுத்தார், "அப்பொழுது அவரைப் படவில் ஏற்றிக்கொள்ள மனதாயிருந்தார்கள்; உடனே படவு அவர்கள் போகிற கரையைப் பிடித்தது" (யோவான் 6:21). கர்த்தர் தம்முடைய அடையாளங்களையும் அற்புதங்களையும் காண்பிப்பதைக் காட்டிலும் நம்முடைய ஐக்கியத்தை அதிகமாக மதிக்கிறார்.

தேவனுடைய முதன்மை எதுவெனில் நம் பிரச்சனையைத் தீர்ப்பதோ அல்லது அவரது அற்புத வல்லமையை நிரூபித்து நம்மை கவர்ந்திழுப்பது அல்ல. தன் சீஷர்களுடன் ஐக்கியம் கொள்வதும், தேவனை அறிகிற அறிவில் வளர அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதும் ஆகும்.

மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, நம் ஆத்துமா தேவனை நோக்கி அவரின் பிரசன்னத்திற்கும் ஐக்கியத்திற்கும் வாஞ்சித்துக் கதறுகிறதா? (சங்கீதம் 42:1)

Author : Rev. Dr. J. N. Manokaran



Topics: Daily Devotions Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download