ஒரு இளைஞன் நகரத்தில் மிகப்பெரிய வாலிபர்களுக்கான சபையை உருவாக்கப் போவதாகப் பெருமையாகக் கூறிக்கொண்டிருந்தான். ஒரு மூத்த தலைவர் அந்த இளைஞனிடம் எப்படி என்று கேட்டார். அதற்கு அவன்; "என்னிடம் சிறந்த இசைக் குழு, ஈர்க்கக்கூடிய மேடை, நவீன தொழில்நுட்பம் கொண்ட ஆடியோ, வீடியோ உபகரணங்கள், ஒலி-தடுப்பிற்கான குளிரூட்டப்பட்ட அரங்கம் மற்றும் சிறந்த பாடகர்கள் உள்ளனர்"; என்றான். சரி யார் பிரசங்கம் செய்வார்கள் என்றார். அதற்கென்ன நானே பத்து நிமிஷம் பிரசங்கிப்பேன் என்றான் அந்த இளைஞன். அந்த தலைவர் அப்படியா; சரி நீங்கள் வேதாகமத்தை ஒருமுறையேனும் படித்துள்ளீர்களா என்றார். அதற்கு பதிலளிக்காமல் காது கேளாதவனைப் போல அந்த இளைஞன் அமைதியாக இருந்தான். சில சபைகள் மாநாடு போல சபைக்கான கூட்டங்களை வருடம் ஒருமுறை நடத்துவதுண்டு; அன்று, உலகத்தரம் வாய்ந்த ஆடிட்டோரியத்தில் உலகத்தரம் வாய்ந்த இசையுடன் ஆவிக்குரிய சிறப்பு கச்சேரி நடக்கும்.
துரதிர்ஷ்டவசமாக, அவர்கள் இந்த வசனத்தை வாசிக்கவில்லை போலும்; "ஒருவன் மூடரின் பாட்டைக் கேட்பதிலும், ஞானியின் கடிந்துகொள்ளுதலைக் கேட்பது நலம்" (பிரசங்கி 7:5). தேவன் இருப்பதை மறுப்பவர்கள் முட்டாள்கள் அல்லது மதிகேடர்கள்(சங்கீதம் 14:1). வேறு சிலர், தேவனை மறுக்கவில்லை, ஆனால் அவர்கள் செய்யும் எல்லாவற்றிலும் அவரைப் புறக்கணிக்கிறார்கள். அவருடைய குணாதிசயங்கள், முன்னுரிமைகள், நோக்கம், விருப்பம் மற்றும் வழிகாட்டுதல் ஆகியவற்றை அறியாமல், தாங்கள் விரும்பியதைச் செய்கிறார்கள். “சட்டியில் இல்லையென்றால் அகப்பையில் எப்படி வரும்?" என்பதாக ஒரு தமிழ்ப் பழமொழி உண்டு. ஆம், அவர்களின் இருதயத்திலும் சிந்தையிலும் ஞானம் இல்லாதபோது, அவர்களின் பாடல்களில் மட்டும் எப்படி போதனையை எதிர்பார்க்க முடியும்? அவர்களின் நம்பிக்கையின் அடிப்படையில் அவர்கள் முட்டாள்கள் அல்ல, ஆனால் அவர்களின் அணுகுமுறை மற்றும் செயல்களில் முட்டாள்கள். முட்டாள்களின் பாடலைக் கேட்பது மூடத்தனம் அல்லது விவேகமற்றது என்று எருசலேமைச் சேர்ந்த ஞானப் போதகர் கூறினார். மாறாக, அவர்கள் ஞானிகளின் கண்டிப்பிலிருந்து ஞானத்தைத் தேட வேண்டும்.
கடிந்துகொள்ளுதல், கண்டித்து உணர்த்துதல், சீர்திருத்துதல், மறுசீரமைத்தல் மற்றும் பயிற்றுவித்தல் என இருந்தால் தான் அது நீதியுள்ளவர்களாகவும், இவ்வுலகில் நன்மைசெய்யவும், வசனத்தைப் பிரசங்கிப்பதற்கும் கற்பிப்பதும் பிரயோஜனமாக அமையும். "வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படி,
அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது" (2 தீமோத்தேயு 3:15-16).
உள்ளூர் சபைகள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடத்தும் முட்டாள்களுக்கான தளங்களாக மாறக்கூடாது. ஆனால் கேட்பவர்கள் மாற்றத்தை அடையும்படியான சத்தியத்தைக் கற்பிக்க வேண்டும்.
இன்று என்னுடைய உள்ளூர் ஆவிக்குரியக் கூட்டங்கள் எப்படி இருக்கின்றன?
Author: Rev. Dr. J .N. மனோகரன்