ஜெபங்களும் பதில்களும்

ஒரு நல்ல தெய்வ பக்தியுள்ள பெற்றோர் தங்கள் நோய்வாய்ப்பட்ட மகனுக்காக ஜெபித்தனர் மற்றும் அனைத்து மருத்துவ உதவிகளையும் நாடினர். ஆனாலும், அவன் இறந்துவிட்டான்.  அவர்கள் உடைந்து போனார்கள், சபைக்கு செல்வதையே நிறுத்திவிட்டார்கள், அது மாத்திரமல்ல விரக்தியில் இனி அவர்கள் தேவனை நம்ப போவதே இல்லை என்று சொன்னார்கள்.  அவர்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் தேவ பிரசன்னத்தையேச் சந்தேகிக்க வைத்தது. வேதாகமத்தில் தாவீது ராஜா தனது மகன் குணமடைய வேண்டும் என்று ஜெபித்ததை வாசிக்கிறோம், ஆனால் அவன் இறந்தான்.  அப்போது தாவீது; “ பிள்ளை இன்னும் உயிரோடிருக்கையில், பிள்ளை பிழைக்கும்படிக்குக் கர்த்தர் எனக்கு இரங்குவாரோ, எப்படியோ, யாருக்குத் தெரியும் என்று உபவாசித்து அழுதேன். அது மரித்திருக்கிற இப்போது நான் உபவாசிக்க வேண்டியது என்ன? இனி நான் அதைத் திரும்பிவரப்பண்ணக்கூடுமோ? நான் அதினிடத்துக்குப் போவேனே அல்லாமல், அது என்னிடத்துக்குத் திரும்பி வரப்போகிறது இல்லை” (2 சாமுவேல் 12:22-23) என்றான்.

தேவன் கடமைப்பட்டவர் அல்ல: 
தேவன் தனது ஜனங்களின் அனைத்து ஜெபங்களையும் நிறைவேற்ற அல்லது பதிலளிக்க கடமைப்பட்டிருக்கிறார் என்று சிலர் தவறாக புரிந்துகொள்கிறார்கள்.  மேலும் அவர்களைப் பொறுத்தவரை, தேவன் பதிலளிக்கக் கடமைப்பட்டவர், அவர் பதில் சொல்லியே ஆக வேண்டும், அவருக்கு வேறு வழியில்லை என்று நினைக்கிறார்கள்.  

முதலாவதாக, இறையாண்மையுள்ள தேவன் யாருக்கும் பதிலளிக்கவோ அல்லது கடமைப்பட்டிருக்கவோ தேவை இல்லை. ஒரு குயவன் களிமண்ணிடம் பதில் அளிக்கவோ அல்லது விளக்கம் அளிக்கவோ தேவையில்லை  (ஏசாயா 45:9)

இரண்டாவதாக, பாவமுள்ள மனிதர்களுக்கு தேவன் முன்பாக எந்த உரிமையும் இல்லை. கிருபை என்பது தகுதியற்ற, தகுதியே இல்லாத மற்றும் நரகத்திற்குத் தகுதியான பாவிகளுக்குக் காட்டப்படும் தேவனின் இரக்கம் ஆகும்.  இரக்கமும் கிருபையும் தேவனின் தனிச்சிறப்பு மற்றும் ஒரு கடமை அல்ல.  

மூன்றாவதாக, தேவன் நல்லவர், சரியானபடி மற்றும் அவரை நேசிப்பவர்களின் நன்மைக்காக அவர்களின் ஜெபங்களுக்குப் பதிலளிப்பார்.  அவருடைய திட்டத்தையும் நோக்கத்தையும் தடுக்கும் ஜெபங்கள் பதிலளிக்கப்படாது.   

நான்காவதாக, தேவன் ஞானமுள்ளவர், எல்லா ஜெபங்களுக்கும் பதில் அளிப்பதில்லை.  பலர் முதிர்ச்சியடையாதவர்கள், எதைக் கேட்பது, எதற்காக ஜெபிப்பது என்று தெரியவில்லை. சிலர் நீண்ட காலத்திற்கு தீங்கு விளைவிக்கும் அல்லது அழிவுகரமான விஷயங்களைக் கேட்கிறார்கள்.  ஒரு இரண்டு வயது குழந்தை ஒரு கத்தியைக் கேட்கலாம், இது ஆபத்தானது, தீங்கு விளைவிக்கும் மற்றும் உயிருக்கு ஆபத்தானது.   ஒரு ஞானமுள்ள தகப்பன் இதற்கு இணங்கிட மாட்டார், அதுபோலவே நம்முடைய பரலோகத் தந்தையும் இதற்கு பதிலளிக்க மாட்டார்.  

ஐந்தாவதாக, தேவன் எதிர்காலத்தை அறிவார். ஜெபிக்கும் போது விசுவாசிகளுக்கு நாளை அல்லது அதற்குப் பிறகு என்ன நடக்கும் என்று தெரியாது.   இருப்பினும், தேவன் எதிர்காலத்தை அறிவார்.   எனவே, எதிர்காலத்தை மனதில் வைத்து, தேவன் அத்தகைய ஜெபங்களுக்கு பதிலளிப்பதை நிராகரிக்கலாம் அல்லது ஒத்திவைக்கலாம்.     

ஜெபத்தைப் பற்றி எனக்கு சரியான புரிதல் உள்ளதா?  

 Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download