“டாண் டாண்”: திருநகரில் அமைந்த சிலுவை நாதர் ஆலயத்தில் ஆராதனைக்கான முதல் மணி ஒலித்தது. முதல் வரிசையில் நெடு முழங்காலில் நின்று கரம் குவித்து, சிரம் தாழ்த்தி ஜெபம் செய்துகொண்டிருந்தார் ஜேக்கப். அந்த ஆலயத்தில் அங்கொருவரும் இங்கொருவருமாக சபையார் அமர்ந்திருந்தனர். ஆனந்த் ஆலயத்தின் உள்ளே வந்தான். அவன் விழிகள் ஜேக்கப்பின் மீது நின்றது. அடுத்த கணம் அவன் முகத்தில் தெளிவு பிறந்தது. முழங்கால் படியிட்டான் உள்ளம் உருக வேண்டினான். ஆலயமணி ஓசை இரண்டாம் முறை ஒலித்தது. ஆராதனை ஆரம்பமானது. சபையார் வந்து கொண்டேயிருந்தனர். குருவானவர் பிரசங்கபீடம் ஏறும்போது ஆலயம் ஓரளவு நிரம்பியிருந்தது.
தாங்கள் பணிபுரியும் இடங்களுக்கும், திரைப்பட அரங்குகளுக்கும் சரியான நேரத்தில்... ஏன் முன்கூட்டியே செல்லும் மக்கள், ஆலயம் வரும்போது மட்டும் அசட்டையாக இருப்பது ஏனோ?
ஆலயப் பொருளாளரும், அவ்வூரிலிருந்த பிரபலமான கம்பெனியின் மானேஜருமான ஜேக்கப்பைக் காணவேண்டும் என்ற துடிப்புடன் வந்த ஆனந்த், ஆலயத்தில் முதல் மணி ஒலிக்கும்போதே அவர் ஆலயத்தில் இருப்பார் என்பதை இங்கு வந்தபின் தான் அறிந்து கொண்டான். எனவே ஆராதனையில் கூட ஆனந்தின் மனம் ஈடுபடவில்லை. அவன் கண்கள் ஜேக்கப்பையே சுற்றி சுற்றி வந்தன. கம்பீரமான உடை! கண்ணியமான தோற்றம். பாடல் பாடும்போது அவரிடம் காணப்பட்ட பக்திப் பரவசம். அவர் ஒரு சிறந்த பக்திமான் என்ற முடிவுக்கு வந்தான். அவன் மனதில் நிம்மதி பிறந்தது.
கல்வியில் சிறந்த ஆனந்த், எம்.காம் முதல் வகுப்பில், ஈராண்டுள் ஓடிவிட்டன. வேலையொன்றும் இவனுக்குக் கிடைக்கவில்லை. நாளைய தினம் அவன், ஜேக்கப் மேனேஜராக இருக்கும் கம்பெனிக்கு நேர்முகத் தேர்விற்குச் செல்ல வேண்டும். ஜேக்கப்பை நேரில் கண்டு, தன் குடும்ப நிலைமையை எடுத்துக் கூறி, வேலை கிடைக்க ஏற்பாடு செய்யலாம் என்ற நப்பாசையுடன் வந்தவன் ஜேக்கப்பைக் கண்டவுடன் தன் எண்ணம் ஈடேறும் என்ற முடிவிற்கு வந்தான்.
ஆராதனை முடிந்தது. வெளியே வந்தார், ஜேக்கப் அவருடைய ஸ்தோத்திரங்களிடையே மிதந்து கொண்டிருந்தார் ஜேக்கப். அவர் வீட்டிற்குச் சென்று காத்திருக்கலாமென உத்தேசித்து அவர் வீடு நோக்கி நடந்தான். அவருக்கு முன் சென்று கொண்டிருந்த இருவரது உரையாடலும் அவனை ஈர்த்தது.
"என்னப்பா சிகாமணி! அவர் வர அதிக நேரமாகுமோ?! என ஒருவர் கேட்க, சில்க் ஜிப்பா போட்ட மற்றவர், எவ்வளவு நேரமானால் என்ன? காரியம் முடிந்தா போதாதா?
அதுவும். சரிதான்!... ஆனா... மனுஷன் 25-க்கு சம்மதிப்பாரா?!"
பார்ப்போமே! 25-க்கு அழுத்துவோம். ஆள் மசியாவிட்டால் கூட ஐந்தோ, பத்தா தள்ளுவோம். வேலை கிடைச்சிட்டா இந்த முப்பது, முப்பத்தைந்தை உன் மகன் அதை ஒரு வருடத்தில் சம்பாதிச்சிற மாட்டானா என்ன?! அலட்சியமாகப் பேசினார்.
“*ஆனா...”?
“என்ன... ஆனா... ஆவன்னா?
மனுஷனைப் பார்த்தா ரொம்ப பக்தியா தெரியுதே லஞ்சம் வாங்குவாரா?
*லஞ்சமா? சேச்சே! அதெல்லாம் வாங்க மாட்டார் இதெல்லாம் அன்பளிப்பு!... அன்பளிப்பு... வாங்குவார், தாராள மனது! ஏராளமாய் வாங்குவார்!? வாய்விட்டுச் சிரித்தவர், தொடர்ந்தார் **ஆலயத்திற்கும் தருவார்.?
“பார்த்தேன்! அவர் பெயர் பொறித்த மின்விளக்குகளையும், மின்விசிறிகளையும்!?*
ராஜீ! அவர் பெயர் பொறிக்கப்படும் என்றால் காணிக்கை தாராளமாக வரும். மூன்றாம் பேருக்குத் தெரியாமல் என்றால் பைசா வராது. அதுமட்டுமல்ல பெற்ற தாயை, தகப்பனைக்கூட கவனிப்பது இல்லை. பாவம் இவருடைய அண்ணன்தான் தன் ஏழ்மை நிலையிலும் தன் பெற்றோரை கவனிக்கிறார்.
“சிகாமணி! பகலில் பக்கம் பார்த்துப் பேசவேண்டும் என்பார்கள். நாம் தெருவில் இப்படிப் பேசிக் கொண்டு போவது சரியல்ல! என மற்றவர் எச்சரிக்க அவர்கள் பேச்சு திசைமாறியது.
ஆனந்திற்கோ வானமே இடிந்து தன் தலையில் வீழ்ந்தது போல் இருந்தது. தனது ஆசை நிராசையாகப் போவதை உணர்ந்தான். அவனுக்கு முன் நடந்தவரும் ஜேக்கப் வீட்டில் நுழைந்தனர். இவனும் பின் தொடர்ந்தான். இவர்களுக்கு முன்னை ஒரு சிலர் அங்கு காத்திருந்தனர். அனைவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். வெகு நேரத்திற்குப், பின் வந்தார் ஜேக்கப் அனைவரும் மரியாதை செலுத்தினர். பல்லெல்லாம் தெரியச் சிரித்த சிகாமணியைக் கண்ட ஜேக்கப், சிகாமணியா? ... வாங்க .. வாங்க... உள்ளே வாங்க! என்றபடி உள்ளே சென்றார். காத்திருந்த அனைவர் மீதும் அலட்சியமாக ஒரு பார்வையை வீசி விட்டு உள்ளே போனார் சிகாமணி.
ஆனந்தின் முறை வந்தபோது, ஆனந்தும் சென்றான். அன்பாகப் பேசினார் ஜேக்கப், நேர்முகத் தேர்வு, என்ற நாடகத்திலும் பங்கு பெற்று வீடு வந்து சேர்ந்தான். ஆனந்த். அவனுக்கு வேலை கிடைக்கவில்லை என சொல்லவும் வேண்டுமோ?
ஆனந்த் தன் தங்கையை பெண் பார்க்க வந்த தம்பதியினரைக் கூர்ந்து பார்த்தான். பழுத்த பப்பாளிப் பழப் போல் பளபளப்பாக இருந்தனர்... அந்த அம்மையாரின் கை, கழுத்து, காது ஒன்றிலும் ஒரு பொட்டு நகை இல்லை. தங்கை பியூலா, டிபன், காப்பி கொண்டு வந்து வைத்துவிட்டு, வணங்கி விட்டுச் சென்றாள்.
வைத்தவிழி வாங்காமல் பார்த்தாள், அந்த அம்மையார். பி.எஸ்.ஸி. பட்டத்துடன் அழகுப் பதுமையாக இருக்ரும், தன் தங்கையை மருமகளாக ஏற்க இவர்களுக்கு கசக்கவாப் போகிறது? என எண்ணிணான் ஆனந்த்.
இருவீட்டாரும் கலந்துரையாட ஆரம்பித்தனர். அந்த அம்மாவே பேச ஆரம்பித்தார். எங்களை நீங்க நல்லா புரிஞ்சக்கணும். நாங்க மணவாட்டி சபயைச் சேர்ந்தவர்கள். நாங்க பூ வைக்க மாட்டோம். நகை போட மாட்டோம் பரிசுத்தமா ஜீவிக்கிறோம்! இந்த வீண் அலங்காரம் எதுக்கு? கேள்விக்குறியோடு பெருமை கண்களில் பளிச்சிட ஆனந்தின் தாய் மேரியைப் பார்த்தாள்.
ஆனந்தின் விழிகள் அந்த அம்மையார் உடுத்தியிருந்த பளபளக்கும் நவீன வெண்ணிறப் பட்டாடையையும், தங்கச் செயின் போட்ட கைக்கடிகாரத்தையும் பார்த்தன.
அந்த அம்மையாரே தொடர்ந்தாள். சபைக்கு நன்றாகச் செய்வோம். தசமபாகம்... அதில் ஒரு பைசா தொடாம, அப்படியே எங்க சபை பாஸ்டர்கிட்ட கொடுத்திடுவோம். சரி... விஷயத்திற்கு வருவோம். பொண்ணை எங்களுக்கு பிடிச்சிருக்கு. ஆனா... அவ... பூ வைக்கக் கூடாது. நகை போடக் கூடாது. நாங்க போற சபைக்குத்தான் வரணும். பொண்ணுக்கு நகை வேண்டாம். டெளரி மாத்திரம் எண்பதாயிரம் கொடுத்தீங்கன்னா போதும் வீட்டிற்குத் தேவையான மிக்ஸி, கிரைண்டர், பீரோ இதெல்லாம் பண்ட பாத்திரதோடே சிறப்பாச் செய்திடுங்க. என் பையன் இன்ஜினியர் இல்லையா? என் பையனுக்கு லட்சம் கொடுக்க ரெடியா இருக்காங்க, எனக்கு உங்கப் பொண்ணைப் பிடிச்சிருக்கிறதுனாலே எண்பது போதும்ன்னு சொல்றே என்றவள் தன் கணவன் பக்கம் திரும்பி, ஏங்க, நான் சொல்றது சரிதானே!'? என அவரைத் துணைக்கு இழுத்தாள். மூச்சு விடாமல் பேசியவள். மூச்சு விட்டுக் கொண்டாள்..
ஆமா...ஆமா சரிதான்!*? என தன் அரைவழுக்கைத் தலையை அழகாக ஆட்டினார். தலையை ஆட்டி ஆட்டியே முடி உதிர்ந்து போச்சோ என்னவோ?
எங்களுக்கு இருப்பது ஒரே பொண்ணுதான். அவளுக்காக 20 பவுன் நகை செய்து வைத்திருக்கிறோம் ..? இழுத்தாள் மேரி.
அதனால் என்ன பரவாயில்லை. அதைக் கொடுங்கள், 60,000 ரூபாய் டெளரியாகக் கொடுத்து விடுங்கள்”? என அந்த அம்மையார் கூறவும், ஆனந்த் குறுக்கிட்டான். நீங்கள் தான் நகை போடக்கூடாது என்கிறீர்களே, பின் எதற்கு நகை?
நகை போட மாட்டோம் என்பதற்காக அதை தூக்கியா எறிய முடியும்? எனது நகைகளை எல்லாம் பத்திரமாக வச்சிருக்கேன். தங்க விலைதான் நாளுக்கு நாள் கூடிகிட்டே போகுதே. நகை இருந்தால் நமக்குச் சொத்துதான!? என்றவள்,
ஆனந்தின் அப்பா பக்கம் திரும்பி, என்ன முடிவு சொல்றீங்க? என்றாள்.
எங்களுக்கு அந்த அளவு வசதியில்லை!” அமைதியாகச் சொன்னார்.
*இலட்சத்தில் பாதியைக் குறைச்சிட்டேன். அதற்குக் கூடவா வக்கில்லை!” கேலியாகக் கூறவும், ஆனந்தின் ஆத்திரம் அணை கடந்த வெள்ளமாயிற்று.
௮ம்மா! உங்க அளவிற்கு நாங்கள் இன்னும் பரிசுத்தமாகவில்லை. உங்க மாதிரியே பரிசுத்தமா.... வாழறவங்க கூட சம்பந்தம் பண்ணிக்கிட்டாத்தான் உங்களுக்கு நல்லது, போங்க வீட்டிற்குப் போய் மத்தேயு 5,6,7 லுள்ள மலைப் பிரசங்கத்தைப் படிங்க. மத்தேயு அதிகாரத்திலுள்ள, மாயக்காரருக்கு தேவன் கூறியதையும் படித்து தியானம் பண்ணுங்க. இல்லைன்னா மணவாட்டி சபையான நீங்க மன்னாதி மன்னர் இயேசுவின் மணவாட்டியா போக முடியாது.
“பார்த்திங்களா அவன் பேசுறதை! உன்ன தேவன் தண்டிப்பார், அழிஞ்சுபோயிடுவ. எங்களையா பேசுற? கர்ஜித்தவள் வெளியே போய் விட்டாள்.
தொழுத கையுள்ளும் படையொடுங்கும். என்ற சொற்றொடரின்படி ஆழ்ந்த இறை பக்தியுடையவர் போல் கரம் குவிக்கும் இப்படிப்பட்ட பக்தர்.... அல்ல பக்தர்களின் குவிந்த கரங்களுக்கிடையே பிறருடைய வாழ்வைக் குலைக்கும் படை அதாவது, ஆயுதம் உள்ளவதை நினைத்துப் பார்த்தான்.
இந்தக் கதை உதய கீதம் என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.