பலவான் கை அம்புகள் (மகிழம் பூ)

தொடர் - 12
“அக்கா! இன்னைக்கு வாலிபப் பிள்ளைகளுக்காக மன்றாட்டு ஜெபம் ஏறெடுக்கணும்க்கா. வாலிப பிள்ளைகள் நிலைமைதான் கவலையைத் தருது.” என மெர்ஸி கூற,

ஆமா மெர்ஸி நானே சொல்லணும்ன்னு நினைச்சேன். பங்கஜம் மகன் டேவிட்க்காக ஜெபிக்கணும். சின்னப்பிள்ளையா இருந்தப்ப ஒழுங்கா சன்டே கிளாஸ் போய் வசனங்களை மனப்பாடம் பண்ணி ஒப்பிச்ச பிள்ளைதான். கல்லூரிக்குப் போனான். ஆளே மாறிட்டான். இதுக வயத்தைக்கட்டி, வாயக்கட்டி பணம் அனுப்பினா, அவன் சென்னையில உட்கார்ந்துகிட்டு பணத்தை சீரழிக்கிறான்.'” அங்கலாய்த்தாள் அன்புமணி அம்மா.

“யாரைச் சொல்றேங்கக்கா? பங்கஜம் அக்கா மகன் டேவிட்டையா? ரொம்ப நல்லா படிப்பானே....! பிளஸ் டூல ஸ்கூல் பஸ்ட் அவன்தானே! எப்படி இப்படிப் போனான்?” ஆச்சரியமாகக் கேட்டாள் விமலா.

பங்கஜம் ஹஸ்பண்ட் பரமானந்தம் ரொம்ப கண்டிப்புப் பேர்வழி. பங்கஜமும் பிள்ளைக படிப்பில ரொம்ப கவனம் செலுத்துவா. சின்னதுல கண்டிச்சு, அரட்டி, உருட்டி படிக்க வைச்சாங்க. அவன நல்ல நிலைமைக்கு கொண்டு வரணும்ன்றதுல பங்கஜத்துக்கு அளவில்லா ஆசை. அவள் மனக்கோட்டையே தன் மூத்த பையன் டேவிட் பெரிய மருத்துவரா வரணும்றதுதான். இரண்டு வருஷம் நல்லாதான் இருந்தான். இந்த எட்டுமாதமாதான் “அவன் குடிக்கிறான் சினிமாப் பார்க்கிறான்னு' செய்தி வந்திருக்கு பாவம் பங்கஜம் துடிக்கிறா.”

அன்புமணியின் கூற்றைக் கேட்ட மெர்ஸி, அவனோட அப்பா சும்மாவா விட்டார்? கண்டிக்க வேண்டியதுதானே.” என்றார்.

சின்னதில அளவிற்கு அதிகமாக கண்டிச்சு வளர்க்கிறப்ப பிள்ளைகளுக்கு பெற்றோர்கிட்ட பாசம் வளர்ரதுக்கு பதிலா பயம் வளருது. சாத்தானுக்கு இது நல்ல சான்ஸ். அந்த பிள்ளைகளுடைய எண்ணத்திற்கு சாத்தான் நல்லா எண்ணெய் ஊற்றி, உன்னிடத்தில் பெற்றோருக்குப் பாசமே இல்லை.'' என்று கூறி, அதிருப்தியை வளர்க்கிறான். விளைவு... பிள்ளைகள் வாலிபராகும் போது பெற்றோரை வெறுக்க ஆரம்பிக்கின்றனர். சிறையிலிருந்து விடுபட்டது போன்ற உணர்வு தங்கள் விருப்பப்படி வாழத் துணிகின்றனர். அடுத்து அவர்களுக்கு அமையும் தகாத நண்பர்கள் தகாத நட்பு தவறான பாதைக்கு வழிநடத்துகிறது. துணிகரமாய் பாவம் செய்ய தூண்டுகிறது.” 

இடைமறித்தாள் விமலா, “ செல்லமாய் வளர்க்கப்படும் பிள்ளைகள் மட்டும் சிறப்பாய் இருக்காங்களாக்கா. எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்திலே தாயும் தகப்பனும் ஆண்பிள்ளையை அதிகச் செல்லம் கொடுத்து வளர்த்தார்கள். சின்னப்பையனா இருக்கும்போதே அவன், “இந்த வேலைக்காரி வேண்டாம்” ன்னு சொன்னான். உடனே அந்த வேலைக்காரியை வேலையை விட்டு நிறுத்திட்டாங்க. நினைத்ததை வாங்குவான். வாலிபன் ஆனான். தகப்பனார் எதற்கோ கண்டித்தார். வீட்டை விட்டு ஓடிப்போனான். வீடே கலங்கித் தவித்தது. “நீங்க ஜெபம் பண்றதுனாலதான் என் பையன் ஓடிப் போனான்”ன்னு மகளையும், மனைவியையும் தகப்பனார் திட்டினார். “ஆண்டவரே! உம் நாமம் தூஷிக்கப்படாதபடி ஓடிப்போனவனை அழைத்து வாரும்ப்பா!” என மகள் கண்ணீரோடு ஜெபித்தாள். கடவுள் பிரார்த்தனைக்குப் பதில் கொடுத்தார். ஓடிப் போனவன் நடு இரவில் தன் ஊருக்கு வந்து கொண்டிருந்த லாரியில் ஏறி, ஊரில் வந்து இறங்கினான். அவனைத் தேடிக் கொண்டிருந்தவர்கள் வீட்டிற்கு அழைத்து வந்தாங்க. தாயும், தகப்பனும் அவனைக் கட்டிப்பிடித்து அழுதாங்க. விளைவு........ அவன் நிலை இன்னும் சீர் கேடானது. தான் நினைத்ததெல்லாம் நடக்க வேண்டும் என்றான். அவன் சொன்ன கோர்ஸ்ல சேர்த்து படிக்க வைச்சாங்க. அறிவு இருந்தது. ஆற்றல் இருந்தது. நல்ல சரீர சுகம் இருந்தது. எல்லாம் இருந்து என்ன பயன்? அதைப் படிப்பேன், இதைப் படிப்பேன் என்று எதை எதையோ படிச்சான். ஒரு வேலையிலேயும் ஒட்ட மாட்டேன்டான். தாயும் - தகப்பனும் இருந்தவரை உண்டான். உடுத்தினான். ஊரைச் சுற்றினான். வயது, நோய், மனவேதனை என இருவரும் இவ்வுலகை விட்டுக் கடந்து போயிட்டாங்க. அவனும் எங்கோ போயிட்டான். என்ன கதி ஆனானோ?” ஒரு பெருமூச்சு விட்டாள்.

“கண்டிக்கவும் கூடாது. செல்லமும் கொடுக்க கூடாதுன்னா எப்படித்தான் பிள்ளைகளை வளர்க்கிறது?” மெர்ஸியின் கேள்வியைக் கேட்ட சத்யபிரியா வாய் திறந்தாள்.

“செல்லமும் தேவை கண்டிக்கவும் வேணும். பிள்ளையானவனை நடக்க வேண்டிய வழியிலே அவனை நடத்து. அவன் முதிர் வயதிலும் அதை விடாதிருப்பான். (நீதி.22:6) என சாலொமோன் ஞானி கூறுகிறார். சிறுவயதிலேயே வேத வாசிப்பில் வாஞ்சையுள்ளவனாகவும், ஜெபமின்றேல் ஜெயமில்லை என்ற சத்தியத்தை நன்கு அறிந்தவனாகவும், அனுபவித்தவனாகவும் வளர்க்க வேண்டும். அவனிடம் (அவளிடம்) காணப்படும் நல்ல காரியங்களை நற்குணங்களைப் பாராட்ட வேண்டும். பாராட்டுதல் ஒருவனை உயர்வடைய வைக்கும். உத்தமனாகவும் உருவாக்கும். தவறுகள் செய்யும் போது கண்டிக்க வேண்டும். “பிள்ளையை தண்டியாமல் விடாதே. அவனை பிரம்பினால் அடித்தால் சாகான். நீ பாதாளத்துக்கு அவன் ஆத்துமாவை தப்புவிப்பாயே!”* (நீதி.23:13,14) என சாலொமோன் கூறுகிறார். தகப்பன் சிட்சியாத (தண்டிக்காத) புத்திரனுண்டோ? (எபி.12:8) என வாய்க்கு வந்தபடி பேசுவதும், கைக்கு கிடைத்ததை எடுத்து பிள்ளை மீது விட்டெறிவதும், அடிப்பதும் தவறு.”

“அக்கா! சின்ன வயசில எல்லாம் சரியாத்தான் இருக்கு. வாலிபவயதில்தான் பிரச்சனையே அதிகமாகுது. விமலா அவசரமாக சொன்னாள்.

“தோளுக்கு மிஞ்சினா தோழன்” ன்னு சொல்வாங்க தோழன் மாதிரி பிள்ளைகளோட பழகணும். பிள்ளைகளும் மனந்திறந்து பெற்றோர்ட்ட பேசணும். தெய்வ பயமும், அடுத்து பெற்றோர்ட்ட பாசமும் உள்ள பிள்ளைகள் வழி தவற மாட்டடாங்க. சின்ன வயதில சன்டே கிளாஸ்க்கு அனுப்பற மாதிரி வாலிப வயதில வாலிபர் கூட்டத்திற்கு அனுப்பணும். நற் செய்திக் கூட்டங்களில் பங்கு பெற ஊக்குவிக்கணும்.”

“பிள்ளைகளிடம் பெற்றோர் பாகுபாடு காட்டி வளர்க்கக் கூடாது. “அப்பா பிள்ளை, அம்மா பிள்ளை,ன்னு பேசக்கூடாது. அடுத்தடுத்து பிறக்கிற பிள்ளைகள் ஒன்றையொன்று நேசித்து வளருது. வயது வித்தியாசம் இருந்தா... மூத்த பிள்ளை 'தன்னைப் பெற்றோர் நேசிக்கலை. தன் தம்பியை அல்லது சங்கள் தங்கச்சியைத்தான் நேசிக்கிறாங்க என்ற முடிவுக்கு வந்திராங்க. எங்க வீட்டிலேயும் இந்தக்கூத்து நடக்குது. டேனியேலுக்கும் டேவிட்டுக்கும் 5 வருட வித்தியாசம் டேவிட் பிறக்கவும் டேனியல் எல்லாவற்றிலேயும் போட்டிபோட ஆரம்பிச்சான். “'தம்பி மட்டும் அம்மா கிட்டப்படுக்கிறான். அவன மட்டும் அம்மா குளிக்க வைக்கிறாங்க.”” என்று எல்லாத்துக்கும் போட்டி போடுவான். டிராப்ஸ் கொடுக்கும் போதும் “அவனுக்கு மட்டும் என்னமோ கொடுக்கிறீங்கன்னு சொல்லுவான். அந்த நேரம் “இந்தா நீயும் குடின்னு ஸ்டென்த்துக்கு தானேன்னு அவனுக்கு இரண்டு ட்ராப்ஸ் கொடுத்து விடுவேன். அதுதான் நான் செய்த தப்பு. அவனுக்கு நான் விளக்கம் கொடுத்திருக்கணும் “நீ பெரிய பையன் நீ பழம், முட்டை, பிஸ்கட், இட்லி, சாப்பாடு எல்லாம் சாப்பிடுறைல. ட்ராப்ஸ் தம்பிக்குத்தான்''ன்னு சொல்லியிருக்கணும். உண்மையிலேயே பார்க்கப் போனா குழந்தைப் பருவத்திலிருந்து டாக்டர் ஆலோசனைப் படி பிஸ்கட், பால், ஆரஞ்சு, முட்டைன்னு நல்ல உணவுகளைக் கொடுத்து வளர்த்தது டேனியலைத்தான். டேவிட் சின்ன வயசிலே நோய், நோய்ன்னு கிடந்ததுனால, ரொம்ப சத்தான உணவையும் கொடுக்க முடியலை.

அதோட.... அண்ணணும் அடிக்கடி சிக் ஆயிடுவாங்களா... இவன் பெரிய பையனா இருந்ததுனால பக்கத்துவீட்டில இல்லாட்டி உறவினர் வீட்டில விட்டுட்டு கைக்குழந்தையா டேவிட் இருந்ததால அவனை, தூக்கிட்டு இவரையும் கூட்டிகிட்டு ஹாஸ்பிடல் ஹாஸ்பிடலா அலஞ்சேன் “தன்னை மட்டும் விட்டுட்டு போறாங்க என்ற எண்ணம் அவனுக்கு வேர் விட ஆரம்பிச்சிட்டு. “டேவிட்டை தான் நேசிக்கிறாங்க தன்னை நேசிக்கலை” என்ற எண்ணம் ஆழமா அவன் மனசுல விழுந்துருச்சு. கல்லூரியில் படிக்கிறான் இன்னும் சில நேரம் அப்படித்தான் பேசுறான் பெருமூச்சு விட்டாள் மெர்ஸி. 
உங்க

“நீ உன் உயிரையே பயணம் வச்சுதான் அவனை பெற்றெடுத்த அவனை அளவுக்கு மீறி நேசிச்ச. ஒரு நாள் உன் அன்பை புரிஞ்சிக்குவான் கவலைப்படாதே.” சத்யபிரியா ஆறுதலாகப் பேசினாள்.

“பிள்ளைகள் கூட பெற்றோர் நேரம் செலவழிக்கணும். வேலை, வேலைன்னு பெற்றோர் அலையறாங்க. பிள்ளை பாசத்துக்கு ஏங்குதுக. அதனாலதான் பெற்றோர் பிள்ளைகளுக்குமிடையே இடைவெளி வந்திடுது. அதனால அப்பாக்கள் வேலைக்குப் போகணும். அம்மாக்கள் வீட்டிலிருந்து பிள்ளைகளைக் கவனிக்கணும்.” கோமதி மெதுவாகக் கூறினாள்.

“படிதாண்டா பத்தினிகளாக வாழச் சொல்லுவா போலிருக்கே. அந்த இருண்ட காலத்தை கடந்து எல்லாத் துறைகளிலும் பெண்கள் ஒளி வீசும் போது நீ கடந்த காலத்துக்கு போகச் சொல்லறையே. பெண் வேலைக்குப் போனாலும் வீட்டுக் காரியங்களை கவனிக்காமல் போகலையே! கணவனும், மனைவியும் வேலைக்கு போவதால் பிள்ளைகளை நல்ல ஸ்கூல்ல படிக்க வைக்கிறாங்க. அருமையான எதிர்காலத்தை அவங்களுக்கு அமைச்சுத் தர்றாங்க. இயேசுவின் கட்டளைப்படி வட இந்தியாவிற்கு மிஷனரிகளாக போறவங்க பிள்ளைகள் தென்னிந்தியாவில் உள்ள டோனவூரிலுள்ள பள்ளியிலோ, அல்லது உறவினர் வீட்டில தங்கி வேறு பள்ளியிலோ படிக்கிறாங்க. வருஷத்துக்கு இருமுறையோ, அல்லது  ஒருமுறையோதான் பெற்றோர் கூட சேர்ந்து இருக்காங்க. அந்தக் குடும்பத்துப் பிள்ளைக பாசமில்லாமல் போயிடுறாங்களா? இல்ல..... பாவத்தில் ஊறிப்போயிடுறாங்களா?” வினாக்கள் தொடுத்த சத்யா தொடர்ந்து பேசினாள்.

“ஆதாம் ஏவாளைப் படைத்த தேவன் அவர்களோடு நல்லுறவை வைத்திருந்தார். அதைக் கெடுக்க சாத்தான் விலக்கப்பட்ட 'கனியை புசித்தால் நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப் போல் ஆவீர்கள் என ஆசைவார்த்தைகளைக் கூறி, அவர்களை பாவத்தில் வீழ்த்தி, தனது அடிமைகளாக மாற்றிப் போட்டான். அதே வல்லமை இன்றைக்கும்... சாத்தானை ஜெயிக்கும் வல்லமை பெற்ற வாலிப பிள்ளைகளுக்கு வஞ்சகவலை விரித்திருக்கிறான். “உன் மீது பெற்றோருக்குப் பாசமில்லை. உன்னை சரியாக கவனிக்கவில்லை.” என்றெல்லாம் கூறி. பெற்றோர் கூட்டுறவிலிருந்து பிள்ளைகளை வழிவிலகச் செய்கிறான். கர்த்தருக்குள் வளர்க்கப்பட்ட பிள்ளைகள் சிந்திக்க வேண்டும். பாசமில்லாமலா தாய் பத்து மாதம் சுமந்து, தன்னையே கொடுத்து பெற்று, வளர்க்கிறாள்? பிள்ளைகள் மீது கரிசனை இல்லாமலா பராமரித்து, படிக்க வைத்து, விரும்பியவற்றை முடிந்த அளவு வாங்கிக்கொடுத்து, பிள்ளைகளை உயர்த்த பெற்றோர் பாடுபடுகின்றனர்? இவற்றை ஒரு நிமிடம் பிள்ளைகள் சிந்தித்தால் தவறான எண்ணங்களுக்கு இடமளிக்கமாட்டார்கள். நம்முடைய கடமை நம் பிள்ளைகளுக்காக அனுதினமும் தேவனிடம் மன்றாட வேண்டும். பிள்ளைகளை கர்த்தர் சித்தத்துக்கு ஒப்புக் கொடுத்து ஜெபிக்க வேண்டும்.”

சொந்த பிள்ளைகளுக்காக மன்றாடுவது கிடையாது. ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானாக வளரும்.” என்று கூறுவார்கள். இந்தப் பழமொழியின் அர்த்தம் என்ன?சுயநலத்தோடு வாழாமல் பிறருக்கு உதவினால், உன் பிள்ளைகள் வாழ்வு துளிர்க்கும் என்றுதான் பொருளே தவிர உன் பிள்ளையைக் கவனிக்காமல் விட்டுவிடு. அவனுக்காக (அவளுக்காக) ஜெபிக்க வேண்டிய அவசியம் இல்லை. என்று அர்த்தம் அல்ல சரிதானே அக்கா.” என்றாள். விமலா

“உண்மைதாம்மா சாத்தான் ௭வனை விழுங்கலாமோ என்று. கெர்ச்சித்துத் திரிகிற காலத்தில் நம் பிள்ளைகளுக்காக மன்றாடி ஜெபிக்க வேண்டியது அவசியம். செல்லமும் கொடுக்க வேண்டும். தவறுகளை சுட்டிக்காட்டி கண்டிக்கவும் வேண்டும். ஆசாரியனான ஏலியின் பிள்ளைகள் ஒப்பனியும் பினெகாசும் பாவ வாழ்வில் பவனி வந்ததை கண்டும், “என் மக்களே இப்படிச் செய்யாதீர்கள். என அறிவுரை கூறியே காலத்தைக் கடத்தினார் ஏலி. வழி தவறும் பிள்ளையை கண்டிக்க பிரம்பை எடுக்கவில்லை. என்னைக் காட்டிலும் நீ உன் பிள்ளைகளை மதிப்பானேன்?' என்று தேவாதி தேவனே வருத்தப்பட்டார். நடந்தது என்ன? ஒரே நாளில் இருவரும் செத்தார்கள். ஏலியும் செத்தான். பரிதானம் வாங்கிய சாமுவேலின் மகன்களையும் சாமுவேல் நியாயம் விசாரிக்கும் பதவியிலிருந்து தள்ளவில்லை விளைவு.... இஸ்ரவேலின் இராணுவங்களின் அதிபதியாயிருந்த ஆண்டவரைத் தள்ளி உலகப்பிரகாரமான ராஜாவைத் தமக்கு கேட்டனர். எனவே நாம் வெகு ஜாக்கிரதையாக பிள்ளைகளுக்காக மன்றாடுவோம். ஜெபிக்க ஆரம்பிப்போமா? என சத்யா கூற அனைவரும் ஜெபத்தில் ஏற்றி வைக்கப்பட்ட மெழுகுவர்த்தியாய் உருக ஆரம்பித்தனர்.

இதன் தொடர்ச்சி மனம் போல மாங்கல்யம் என்ற தலைப்பில் உள்ளது.

இந்தக் கதை  மகிழம் பூ என்ற புத்தகத்திலிருந்து   Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.



Topics: Tamil Christian Story Mahizham Poo - Story

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download