இளம் வாலிபன் ஒருவன் தற்கொலைக்கு முயன்றான். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அந்த இளைஞன் போதைப்பொருட்களுக்கு அடிமையாக இருந்தான், மேலும் அவனை யாரும் நேசிக்கவும் இல்லை. எனவே இந்த மோசமான முடிவை எடுத்தான். இப்படி சூழ்நிலையில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சீஷரான அவனுடைய நண்பர் ஒருவர் அவனை தினமும் மருத்துவமனைக்குச் சென்று சந்தித்து நம்பிக்கையையும் தைரியத்தையும் கொடுத்தார். அவ்விளைஞனும் போதைப்பொருளில் இருந்து விடுவிக்கப்பட்டு, சுவிசேஷத்தின் மூலம் நல் மாற்றம் அடைந்தான். அவனது பெற்றோர் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர், அவர்கள் தங்கள் மகனுக்கு புதிய வாழ்க்கையை கொடுத்த தம்பதிகளுக்கு நன்றி தெரிவித்தனர். இருப்பினும், அவர்கள் "நீங்கள் செய்த உதவிக்கு நன்றி, ஆனால் தொடர்ந்து என் மகனோடு நட்புறவு வேண்டாம்; ஏனெனில் எங்கள் மகன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றினால் எங்களுக்கு இருக்கும் சமூக அந்தஸ்து மரியாதை எல்லாம் காணாமல் போய் விடும்; எங்களால் அதை இழக்க முடியாது" என்றனர். பின்னர் அவர்களது நட்பு துண்டிக்கப்பட்டது. "இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்" (1 கொரிந்தியர் 15:19) என்பதாக பவுல் எழுதுகிறார்.
கலாச்சாரம்:
சில கலாச்சாரங்கள் கௌரவம் மற்றும் அவமானம் ஆகியவற்றின் அடிப்படையில் செயல்படுகின்றன. மக்கள் வாழ்க்கையின் சில அம்சங்களை மதிக்கிறார்கள் அல்லது உயர்வாய் எண்ணுகிறார்கள் அல்லது மரியாதை செலுத்துகிறார்கள். ஆற்றல் மிக்கவராகவும், செல்வாக்கு மிக்கவராகவும், வளங்களை கட்டுப்படுத்தும் திறன் கொண்டவராகவும், செல்வந்தர்களாகவும் இருத்தல் மரியாதைக்குரியதாகக் கருதப்படுகிறது. அந்த நபர் அதிகாரத்தை அபகரித்திருக்கலாம் அல்லது ஏழைகளை ஒடுக்கியிருக்கலாம் அல்லது தவறாக சம்பாதித்து செல்வத்தை வைத்திருந்திருக்கலாம். அவர்கள் அடைந்த அல்லது சாதித்த இழிவான வழிமுறைகள் எடுத்துக் கொள்ளப்படவில்லை. சட்டத்திற்கு புறம்பாக செல்வம் ஈட்டிய செல்வந்தர், சட்டத்தின் பிடியில் சிக்கினால், அந்த நபர் வெட்கப்பட்டு புறக்கணிக்கப்படுகிறார். நற்பண்புகள், மதிப்புகள் மற்றும் நல்லொழுக்கங்கள் என எதுவும் இல்லை.
சூழல்:
துரதிர்ஷ்டவசமாக, இந்த மரியாதைக்குரிய சூழல் இளைஞர்களைப் பாதுகாக்க முடியவில்லை. அந்த இளைஞன் நிராகரிக்கப்பட்டதாக உணர்ந்தான், மரியாதை இல்லை, கலாச்சாரத்தால் மதிக்கப்படவில்லை, அவமானப்படுத்தப்பட்டான், அதனால் போதைப்பொருள் உட்கொண்டான், அதிலும் திருப்தி இல்லாமல் தற்கொலைக்கு முயன்றான். சுற்றுச்சூழலில் இருந்து எந்த உறுதிமொழியும் இல்லை, விமர்சனங்களும் விரோதமான கண்டனங்கள் மட்டுமே உள்ளன.
திறன்:
ஒருவரைக் கண்டிக்கும் கலாச்சாரம், வீழ்ந்த ஒருவனை மீட்டெடுக்கும் திறனோ ஆதாரமோ இல்லை. நிராகரிக்கப்பட்ட இளைஞனை மீட்கவோ மாற்றத்தை ஏற்படுத்தவோ முடியவில்லை. நற்செய்தி மட்டுமே அவனுக்கு விடுதலை அளித்தது. கலாச்சாரத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும், நற்செய்தி மட்டுமே நம்பிக்கை.
நம்பிக்கை:
இத்தகைய கலாச்சாரம் ஆபத்தானது மற்றும் செத்தது, அது மாத்திரமல்ல இது ஜீவனையோ வாழ்க்கை மீதான நம்பிக்கையையோ கொடுக்க முடியாது. இளைஞன் அநாமதேயமாக (தனக்கென்று எவ்வித அடையாளம்) இறந்திருக்கலாம், ஆனால் சுவிசேஷகர்கள் நற்செய்தியினால் அவனுக்கு வாழ்வளித்தனர் என்றே சொல்ல வேண்டும்.
நான் வேதத்தை மதிக்கிறேனா அல்லது கலாச்சாரத்தை மதிக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்