இரண்டு வகையான முட்டாள்தனங்கள் உள்ளன: ஒன்று மிகைப்படுத்துதல் மற்றொன்று குறைத்து மதிப்பிடல். ஒன்றுமற்ற விஷயங்களை மிகைப்படுத்தலாம் அவை எந்த நோக்கமும் இல்லாதவை, ஆனால் முக்கியமான விஷயங்களை மிகச்சிறியதாகக் குறைக்க முடியும். ஆவிக்குரிய வாழ்க்கையிலும் இது நிகழலாம். உரிமம் பெற்ற வாழ்க்கை மற்றும் நியாயப்பிரமாண வாழ்க்கை என இரண்டு உச்சநிலைகள் உள்ளது.
கிருபையைக் கேலிக் கூத்தாக்கும் வாழ்க்கை:
விசுவாசியான ஒருவர்: “கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மீது எனக்கு மிகுந்த விசுவாசம் உள்ளது, ஏனெனில் அவர் எனது கடந்த கால, நிகழ்கால மற்றும் எதிர்கால பாவங்களை மன்னித்துவிட்டார். எனவே, எனக்கு வரும் சோதனைகள் குறித்தோ அல்லது பாவங்களைப் பற்றியோ நான் கவலைப்பட மாட்டேன். ஒருவேளை இனி நான் பாவம் செய்தாலும், அவை ஏற்கனவே மன்னிக்கப்பட்டு விட்டது. எனவே, விபச்சாரபாவம் கூட எனக்கு எந்தவித குற்றுணர்ச்சியையும் ஏற்படுத்தாது", என்றார். என்ன ஒரு முட்டாள்தனமான அறிக்கை? அதிலும் அவர் பாவத்தை விட ‘குற்ற மனசாட்சி’ பற்றிதான் அதிகம் கவலைப்பட்டார். பவுல் எழுதுகிறார்: “ஆகையால் என்னசொல்லுவோம்? கிருபை பெருகும்படிக்குப் பாவத்திலே நிலைநிற்கலாம் என்று சொல்லுவோமோ? கூடாதே. பாவத்துக்கு மரித்த நாம் இனி அதிலே எப்படிப் பிழைப்போம்? (ரோமர் 6:1,2).
கிருபையை அதிகமாக வலியுறுத்துவதன் மூலமோ அல்லது சாதகமாகப் பயன்படுத்துவதன் மூலமோ அல்லது இரக்கத்தை மிகைப்படுத்துவதன் மூலமோ ஒரு நபர் பாவத்தில் தொடர விரும்புகிறார். பவுல் என்ன கேட்கிறார் என்றால், ஒரு விசுவாசி பாவத்துக்கு மரித்த பின்பு எப்படி பாவத்தில் வாழ முடியும்?
மிஞ்சின நீதிமான்களின் வாழ்க்கை:
இன்னும் சிலர் நியாயப்பிரமாணத்தின்படி எதையும் அணுகுபவர்களாக இருப்பவர்கள். உதாரணமாக, ஒரு சில விசுவாசிகளின் கூட்டம், பொது இடங்களில் கூட ‘மண்டியிட்டு’ ஜெபிக்க நினைக்கிறார்கள். உதாரணமாக, இவர்கள் ஒரு திருமண விழாவுக்குச் செல்லும்போது கூட, அங்கு தாங்கள் சாப்பிடத் தொடங்குவதற்கு முன்பு மண்டியிட்டு ஜெபிப்பார்கள். அதுமட்டுமன்றி நின்றோ அல்லது உட்கார்ந்தோ அல்லது சிரம் தாழ்த்தியோ ஜெபிப்பவர்களை கண்டிக்கிறார்கள். பரிசேயர்கள் இப்படிபட்டவர்கள் தான். மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தையத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள், இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே. குருடரான வழிகாட்டிகளே, கொசுயில்லாதபடி வடிகட்டி, ஒட்டகத்தை விழுங்குகிறவர்களாயிருக்கிறீர்கள் (மத்தேயு 23:24).
ஆகவே ஒரு சீரான சமமான ஆவிக்குரிய கிறிஸ்தவ வாழ்க்கை என்பது மிக முக்கியமானது. தேவனுடைய தீர்ப்பை வரவழைக்கும் கிருபையை கேலிக்கூத்தாக்கும் வாழ்க்கையும் தேவனுடைய கோபத்தை வரவழைக்கும் மிஞ்சின நீதிமான் வாழ்க்கையும் மிக ஆபத்தானது.
நான் ஒரு சீரான கிறிஸ்தவனா/ளா? என சிந்திப்போம்.
Author: Rev. Dr. J .N. மனோகரன்