உழைக்கும் தொழிலாளர்கள் ஓய்வு எடுக்க அல்லது வேலையை சிறிது நேரம் இடைநிறுத்த விரும்புவார்கள், ஒருவேளை அது சிறிது ஆசுவாசப்படவும் கொஞ்சம் தண்ணீர் அருந்தவும் இருக்கலாம். விளையாட்டு வீரர்கள் கூட கூடுதல் கவனம், ஆற்றல் மற்றும் வலிமையைப் பெற அதைச் செய்கிறார். சங்கீத புத்தகத்திலும் ஒரு குறிப்பு உள்ளது: ‘சேலா.’ இது ஒரு போக்குவரத்து சமிஞ்ஞை போல: நில், கவனி, செல் என்பதை போன்றது.
சேலா என்பதன் அர்த்தம்
எபிரேய அறிஞர்கள் இந்த வார்த்தைக்கு பல்வேறு அர்த்தங்களைக் கொடுக்கிறார்கள். முதலாவதாக, இந்த வார்த்தை “என்றென்றைக்கும்” என்றவார்த்தைக்கு ஒத்ததாகும். இரண்டாவதாக, இது ஆராதனையில் குரலை உயர்த்துவதைக் குறிக்கலாம். மூன்றாவதாக, இசைக் கருவிகளை சத்தமாக வாசிப்பதை குறிக்கலாம். நான்காவதாக, பாடலை இடைநிறுத்திச் சிந்திக்க விடப்படும் அழைப்பு எனலாம்.
ஆழமாக யோசியுங்கள்:
வேதாகமத்தை வாசிப்பது ஒரு விசுவாசியை எப்போதும் சிந்திக்க வைக்க வேண்டும். பரிசுத்த ஆலோசனைகள் புரிந்து கொள்ளப்பட்டு கிரகிக்கப்பட வேண்டியவைகள். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பாக்கியவானைப்போல போல இரவும் பகலும் தியானிக்க வேண்டும். (சங்கீதம் 1:1-3) வேதம் மனதைப் புதுப்பிக்க வழிவகுக்கிறது. (ரோமர் 12:2)
சிந்தித்துப் பாருங்கள்:
வேதாகமத்தை படிக்கும்போது, மனம் அமைதியாக இருந்து உரையின் பொருளைப் பற்றி சிந்திக்க வேண்டும். அதிலே கட்டளைகள், வாக்குத்தத்தங்கள், எச்சரிக்கைகள், தேவனைப் பற்றிய சத்தியம் மற்றும் பின்பற்ற வேண்டிய மாதிரிகள் காணப்படும். ஆவிக்குறிய வளர்ச்சிக்கும் புதுப்பித்தலுக்கும் இவை எவ்வாறு நம் வாழ்வில் பயன்படுத்தப்படலாம்? இது ஒரு அறிவுசார் பயிற்சி அல்ல, ஆனால் நமது ஜீவியத்தை ஆராய்ந்து பார்ப்பதாகும்.
சிந்தையில் அசைபோட்டுப் பாருங்கள்:
இந்தச் செயல் ஒரு விசுவாசிக்கு வெவ்வேறு கண்ணோட்டங்களைக் கருத்தில் கொள்ளவும், ஒப்பிடவும் உதவுகிறது. உலகம் எப்படிச் சிந்திக்கிறது, அதே சமயம் வேதம் எப்படி வித்தியாசமாக சிந்திக்கத் தூண்டுகிறது? இது வேதத்தின் வெளிச்சத்தில் கலாச்சாரத்தின் கருத்துக்கள் மற்றும் விதிமுறைகளை மதிப்பீடு செய்ய உதவுகிறது. சிந்தையில் அசைபோட்டுவது தேவ சித்தத்தைப் பகுத்தறிவதற்கு வழிவகுக்கிறது, இது தீர்மானங்களை எடுக்க மற்றும் சிக்கலைத் தீர்ப்பது போன்ற செயல்களுக்கு வழிவகுக்கிறது.
அதிசயித்தல்:
ஒரு விசுவாசி, எல்லா மனித எண்ணங்கள் மற்றும் யோசனைகளை விட உயர்ந்த மற்றும் உன்னதமான தேவனின் அற்புதமான எண்ணங்களில் ஆச்சரியப்பட்டு அதிசயிக்கிறான். (ஏசாயா 55:8-9) அவருடைய அற்புதமான வழிகள் ஒரு நபரை மண்டியிட்டு வணங்கவும் குரலை உயர்த்தித் துதிக்கவும் செய்கிறது.
நினைவில் கொள்ளுங்கள்:
கர்த்தருடைய வார்த்தையைப் படிப்பது, உடன்படிக்கைகளைக் கடைப்பிடிப்பதிலும், வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுவதிலும், ஜெபங்களுக்குப் பதிலளிப்பதிலும் கர்த்தர் எவ்வளவு உண்மையுள்ளவராயிருக்கிறார் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள உதவுகிறது. வேதாகமத்திலிருந்து, வரலாறு மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை நினைவுகூருவது, விசுவாசிகளுக்கு நன்றியுடனும் நம்பிக்கையுடனும் இருக்க உதவுகிறது.
கீழ்ப்படிதல்:
வேதாகமம் ஒரு தகவல் புத்தகம் அல்ல, ஆனால் கீழ்ப்படிதலைக் கோரும் சத்தியம். ‘சேலா’ கீழ்ப்படிதல் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை விளைகிறது.
நான் ‘சேலா’ செய்யலாமா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்