தாவீதின் சிம்மாசனத்தைக் கைப்பற்ற விரும்பிய தன் மகன் அப்சலோமிடமிருந்து தப்பி ஓடியபோது, கீலேயாத்தியனான பர்சிலா தாவீதுக்கும் அவனுடைய ஆட்களுக்கும் உதவி செய்தான் (2 சாமுவேல் 19:31-39). அவனுடைய ஆவிக்குரிய பக்குவமும் பகுத்துணர்வும் அனைவருக்கும் ஒரு முன்மாதிரி.
பணக்காரன்:
பர்சிலா ஒரு பணக்காரன். அவன் தனது செல்வத்தை தனக்காகவோ அல்லது தனது சந்ததியினருக்காகவோ வைத்துக் கொள்ளவில்லை. அது தேவனின் ஆசீர்வாதம் என்பதை புரிந்துகொண்டிருந்தான்; அதை தேவனுக்காக பயன்படுத்தவும் தயாராக இருந்தான். பொக்கிஷங்களைச் சேமித்து வைப்பதற்கும் தேவனிடம் செல்வந்தராக இருப்பதற்கும் அவன் முட்டாள் அல்ல (லூக்கா 12:21).
பெருந்தன்மையுள்ள மனிதன்:
நாபால் ஒரு பணக்காரராகவும் இருந்தான், ஆனால் மிகவும் மோசமானவன், கஞ்சத்தனமானவன், தாவீது உட்பட சுற்றி இருப்பவர்கள் அனைவரையுமே அவமானப்படுத்தினான் (1 சாமுவேல் 25). நாபாலைப் போலல்லாமல், தாவீதின் வாழ்க்கை மற்றும் இஸ்ரவேல் தேசத்தைக் குறித்ததான தேவனின் அழைப்பையும் நோக்கத்தையும் உணர்ந்ததால், துன்பத்தில் இருந்த தாவீதுக்கும் அவனுடைய ஆட்களுக்கும் கொடுக்கும் காரியத்தில் பர்சிலா தாராளமாக இருந்தான்.
அறிந்திருந்தவன்:
தாவீதும் அவனது ஆட்களும் பசி, களைப்பு, தாகம் ஆகியவற்றில் இருப்பதை அறிந்திருந்தான் பர்சிலா. எனவே, அவன் படுக்கைகள் மற்றும் தேவையான பாத்திரங்களை கொண்டு வந்தான். மேலும், அவன் கோதுமை, பார்லி, மாவு, உலர்ந்த தானியங்கள், பீன்ஸ், பருப்பு, தேன், பாலாடைக்கட்டி, தயிர் மற்றும் ஆடு என அவர்கள் சாப்பிடுவதற்கு உணவுப் பொருட்களைக் கொண்டு வந்தான் (2 சாமுவேல் 17:28-29).
எதிர்பார்ப்பற்றவன்:
தாவீது எருசலேமுக்குத் திரும்பியபோது அவனை வெகுதூரம் அழைத்துச் செல்வதற்கு பர்சிலா மரியாதையுடன் நடந்துகொண்டான். தாவீது பெருந்தன்மையுடன் பர்சிலாவிடம் வந்து தன்னுடன் தனது அரண்மனையில் தங்கும்படி அழைப்பு விடுத்தான். பர்சிலா பணிவுடன் உடன் வர மறுத்துவிட்டான். ராஜாவிடம் வெகுமதியை எதிர்பார்த்து தான் எதையும் செய்யவில்லை என்று பர்சிலா குறிப்பிட்டான். அவன் கொடுத்ததில் சரியான எண்ணமும் சரியான நோக்கமும் இருந்தது, ஆம் தேவனுக்கு மாத்திரமே மகிமை செலுத்தினான்.
காலத்தை அறிந்தவன்:
எண்பது வயதான பர்சிலாவைத் தன் அரண்மனையில் வசிக்குமாறு தாவீது கேட்டுக்கொண்டபோது; முதிர் வயதானால் ராஜாவுடன் இசையைக் கேட்பது, சாப்பிடுவது மற்றும் குடிப்பது என இந்த வயதில் வேண்டாமே என்று தாவீதிடம் கூறினான். மேலும் அவன் தாவீதுக்கு பாரமாக மாற மறுத்துவிட்டான்.
துணை நிற்பவன்:
பர்சிலா தனது மகன் கிம்காமை தாவீதுடன் அனுப்பினான், இதனால் அவன் ராஜாவுக்கு சேவை செய்ய முடியும் மற்றும் வெளி உலகத்தைக் பற்றிய அறிவையும் அடையலாம். மேலும் தாவீது சாலொமோனிடம் பர்சிலா மகன் கிம்காமிடம் தயவோடு நடந்துக் கொள்ளும்படி கட்டளையிட்டான் (1 இராஜாக்கள் 2:7).
பர்சிலாவைப் போல தேவ திட்டத்தையும் நோக்கத்தையும் அறிந்த நபராக, தேவராஜ்யத்திற்காக நான் பங்களிக்கிறேனா? பக்குவம் உள்ள நபராக இருக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்