குடும்பம் என்ற அமைப்பு பல்வேறு திசைகளில் இருந்து தாக்கப்படுகிறது. பல குழந்தைகள் வீட்டில் தந்தை இல்லாமல் வளர்கின்றனர். தந்தையின் மரணம் அவர்களை தந்தையற்றவர்களாக ஆக்கிவிடும். இன்னும் சிலர் விவாகரத்து பெற்று அல்லது பிரிந்து அல்லது கைவிடப்பட்ட தாய்மார்களுடன் வாழ்கின்றனர். துரதிர்ஷ்டவசமாக, பல குடும்பங்களில் தந்தை உடல் ரீதியாக இருக்கிறார், ஆனால் ஆவிக்குரிய ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் தொலைவில் இருக்கிறார். "நம்பிக்கையிருக்குமட்டும் உன் மகனைச் சிட்சைசெய்; ஆனாலும் அவனைக் கொல்ல உன் ஆத்துமாவை எழும்பவொட்டாதே" (நீதிமொழிகள் 19:18).
நன்றியின்மை:
பரிசு அளிக்கப்பட்டால் நன்றியுடன் பெற்றுக் கொள்ள வேண்டும். "இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்" (சங்கீதம் 127:4). ஆம், தேவனிடமிருந்து வரும் கிருபையான பரிசு விலையேறப்பெற்றது மற்றும் பொக்கிஷம். ஒரு குழந்தையை சரியான முறையில் பேணுவது, பராமரிப்பது, வளர்ப்பது மற்றும் மேம்படுத்துவது என்பது தேவனுக்கு செலுத்தும் நன்றியின் வெளிப்பாடாகும்.
உக்கிராணத்துவமின்மை:
தேவன் எல்லா மனிதர்களுக்கும் திறமைகள், பரிசுகள், வளங்கள், வாய்ப்புகள், நேரம் மற்றும் எண்ணற்ற சொத்துக்களை வழங்குகிறார். உறவுகளும் மனிதர்களுக்கு தேவன் கொடுத்த வரங்கள். "வீடும் ஆஸ்தியும் பிதாக்கள் வைக்கும் சுதந்தரம்; புத்தியுள்ள மனைவியோ கர்த்தர் அருளும் ஈவு" (நீதிமொழிகள் 19:14). பிள்ளைகளுடனான உறவு பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் நன்மை பயக்கும். வாழ்க்கைத் துணை மற்றும் குழந்தைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளிலிருந்தும் மற்றும் பொறுப்புகளிலிருந்தும் பின்வாங்குவது அல்லது கடமையில் தவறுவது என்பது உக்கிராணத்துவ குறைபாடாகும்.
அலட்சியம்:
குழந்தையை நெறிப்படுத்துவது பெற்றோரின் முதன்மைப் பொறுப்பு. புறக்கணிக்கப்பட்ட ஒழுக்கத்தின் விளைவுகளால் பெற்றோர்கள் அழுவதை விட ஒரு குழந்தை அதற்கான திருத்தத்தின் கீழ் (கண்டிப்புக்கு) அழுவது மிகவும் சிறந்தது.
பருவம்:
'ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளைக்க முடியாது' என்கிறது ஒரு தமிழ் பழமொழி. ஒரு குழந்தை ஒரு குறிப்பிட்ட வயது வரை ஒழுக்கமாக இருக்க முடியும். ஒரு குழந்தைக்கு ஐந்து வயதாக இருக்கும் போது கற்று கொள்ளாத ஒரு ஒழுக்கத்தை ஐம்பது வயதுள்ள ஒரு பெரியவன் ஆன பின்பு ஒருபோதும் உள்வாங்க முடியாது. குழந்தைகள் சிறுவயதாக இருக்கும்போது, அது வளர்ச்சிக்கான பருவம் மற்றும் அதே போல் நம்பிக்கையும் உருவாகும்.
சோம்பல்:
பிள்ளைகளை நெறிப்படுத்தாத பெற்றோர்கள், அவர்களை அழிவுக்கு தயார்படுத்துகிறார்கள். மந்தமான மனப்பான்மை உள்ள பெற்றோர் அவர்களின் குழந்தைகளை மரணம் மற்றும் அழிவிற்கு நேராக நடத்துகின்றனர் என்றே சொல்ல வேண்டும்; ஞானமான பெற்றோருக்கு தங்கள் குழந்தைகளை அழிக்கும் விருப்பம் இருக்காது. ஆனால், அவர்கள் தேவன் கொடுத்த வாய்மொழி கண்டனம், வேதாகம ஆலோசனை, ஜெபம் மற்றும் சரீர ரீதியான தண்டனையைப் பயன்படுத்தாதபோது அவர்கள் அவர்களை மரண வாசலில் கொண்டு போய் விடுகிறார்கள். "பிரம்பைக் கையாடாதவன் தன் மகனைப் பகைக்கிறான்; அவன்மேல் அன்பாயிருக்கிறவனோ அவனை ஏற்கனவே தண்டிக்கிறான்" (நீதிமொழிகள் 13:24)
குழந்தைகளுக்கான ஒழுக்கம் சார்ந்த விஷயத்தில் நான் கவனம் கொள்கிறேனா அல்லது கண்டு கொள்ளாமல் இருக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்