நங்க பர்வதம் என்ற அந்த அழகிய நகரில் அமைந்திருந்த “ஊனமுற்றோர் நல்வாழ்வு இல்லம்” விழாக்கோலம் பூண்டிருந்தது. ஊனமுற்றோருக்காகக் கட்டப்பட்டிருந்த அந்தப் புதிய கட்டிடத்தின் முன் மாபெரும் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. பந்தல் முழுவதும் வண்ண விளக்குகளும், காகித மலர்களும், பலவண்ண பிளாஸ்டிக் மலர தோரணங்களும் தொங்க விடப்பட்டு அழகினை அதிகப்படுத்திக் கொண்டிருந்தன.
விழாவிற்கு கலெக்டர் அவர்கள் தலைமை தாங்க, விழா இனிது ஆரம்பமானது. “ஊனமுற்றோர் நல்வாழ்வு சங்கம்” தனது முயற்சியால் பலருடைய ஒத்துழைப்பைப் பெற்று இக்கட்டிடத்தைக் கட்டியிருந்தனர்.
விழாவிற்கு வந்துள்ள பல பேருள் ஒருத்திதான் ஞானம், அவள் அனைத்தையும் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தாள். அச்சங்கத்தின் செயலாளர், பொருளாளர் முகங்களைப் பார்த்தாள். தம் பணிதனில் ஒரு மைல் கல்லைக் கண்ட நிறைவு அவர்கள் முகங்களில் நிறைந்திருந்தன. அவர்களது நன்முயற்சிகள் எல்லாம் பலன்பெற எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சினாள். அவர்களை நெஞ்சார வாழ்த்தினாள்.
இறைவணக்கம்,வரவேற்பு, தலைவர் உரை, சிறப்புச்சொற்பொழிவு, கலை நிகழ்ச்சி என ஒன்றன்பின் ஒன்றாக நிகழ்ச்சி நிரலில் கண்டபடி அரங்கேறிக் கொண்டிருந்தன. கூட்டத்தினரை ஒழுங்குபடுத்துவதில் ஈடுபாடு கொண்டிருந்த இளங்குமரனின் சாட்டில் ஊனமுற்றோர் சங்க உறுப்பினர்களுக்கான “பேட்ஜ்” அணி செய்தது. அது மட்டுமல்ல! பல பேட்ஜ்களை! கைப்பற்றி தன்னைச் சார்ந்தவருக்கு மட்டும் வழங்கி, அங்குமிங்கும் அலைந்து, தான் மிகவும் (அந்த சங்கத்திற்கு) வேண்டப்பட்டவன் போல் காட்சியளித்துக் கொண்டிருந்தான். இதைக் கண்ட ஞானத்தின் இதழ்களில் இகழ்ச்சிப் புன்னகை விரிந்தது. உண்மையாகவே இத்தகைய சமூகப் பணிகளில் இவர் போன்ற இளைஞர்கள் ஈடுபட்டால் சமுதாயம் சீர் பெறுமே என எண்ணினாள்.
நன்கொடைகள் வழங்கப்படும் நேரம்! உண்மையான அனுதாபத்துடன் பலர் தங்களால் இயன்றவற்றை ஊனமுற்றோர்க்கு வழங்கிக்கொண்டிருந்தனர். காமிராக்கள் “பளிச்” என விட்டு விட்டு மின்னின. வீடியோ காமிராவும் இடம் விட்டு இடம் நகர்ந்து தன் ஒளியை உமிழ்ந்து கொண்டிருந்தது.
ஜோன்ஸ் தன் இருக்கையை விட்டு எழுந்தார். மேடையை நோக்கிச் செல்லும் போதே புகைப்படம் எடுப்பவரை ஒரு தட்டு தட்டிவிட்டு சென்றார். உறவினர் என்ற உரிமையோ? புகைப்பட மோகமோ? புகழ் போதை மயக்கமோ? காமிராவை கையில் எடுத்த புகைப்படக்காரா படம் எடுக்க தயாரானார். தான் பணியாற்றும் ஸ்தாபனத்தின் சார்பில் ரூ.500/-நன்கொடை வழங்குவதாக ஒரு சில வார்த்தைகள் கூறி கவரை வழங்க, “பளிச்” “பளிச்” என அந்நிகழ்ச்சியை காமரா தன்னுள் பதித்தது. அடுத்து எழுந்தார் அருளானந்தம். புன்னகையுடன் மேடையை நோக்கிச் சென்றார். ஓராண்டிற்கு முன் தான் ஏதோ விபத்தில் அகப்பட்டதாகவும் ஆண்டவர் தன்னை எந்த வித ஆபத்தும் இல்லாமல் காத்ததாகவும், அதனால் விபத்தினால் உடல் ஊனமடைந்தவர்களைக் குறித்த கரிசனை தம் உள்ளத்தில். எழுந்ததாகவும், அவர்களுக்குத் தான் ரூ1000/-நன்கொடை வழங்கப் போவதாகவும் வாக்குக் கொடுத்து, பிறரும் இவர் போல் உதவி புரிய முன் வரவேண்டுமெனவும் அறைக்கூவல் விடுத்து. ஒரு சிறு சொற்பொழிவே ஆற்றி அமர்ந்தார். காமிராக்கள் பளிச், பளிச்சென ஒளி சிந்த வீடியோ ஒளி வெளிச்சம் பாய்ந்தது!
ஞானம் சிரித்தாள். ஊனமுற்றோர்க்கு உதவ வேண்டுமென்ற எண்ணம் ஏற்பட்டு அதற்கு, வாக்கு கொடுக்கவே இவருக்கு ஓராண்டு தேவைப்பட்டதோ? என எண்ணினாள்.
மூன்று திங்கள்களுக்கு முன், தாங்கள் கொண்டாடப் போகும் கிறிஸ்துமஸ் விழாவிற்காக நன்கொடை கோரி இதே ஊனமுற்ற சிறுவர்கள் அவர் வீடு தேடிச் சென்ற போது “இல்லையென விரட்டியவர் தானே இவர் என்ற எண்ணமும் எழுந்தது. பாராட்டுக் கூட்டமும் பளிச்சென்ற ஒளி வெள்ளமும் இருந்தால் தான் ஈகைத் தன்மை வெளிப்படுமோ? என்ற வினா அவள் உள்ளத்தே எழுந்தது.
அவள் விழிகள் சுழன்றன. அந்தக் கூட்டத்தின் மூலையிலே உட்கார்ந்திருந்த அந்தப்பாட்டி மீது அவள் விழிகள் நிலை குத்தி நின்றன. ஏழ்மையான தோற்றம். நியாயம் எனில் யாரையும் எடுத்தெறிந்து பேசிவிடும் துடுக்குத் தனம். தன்னை அணுகும் நல்ல பண்புள்ளவர்களிடம் மட்டுமே பாசம் காட்டும் தனித்தன்மை. தானே இல்லாமையில் ஏங்கினாலும் இல்லையென வாடுபவர்களுக்கு தன்னால் இயன்றதற்கும் மேலாகத் செய்து. கொடுக்கும் தியாகத் தன்மை.
ஒரு கிராம ஆலயத்திற்குச் சென்ற பாட்டி, அங்கு பாட்டுப் புத்தகங்கள் இல்லாததைக் கண்டவுடன் சிறுகச் சிறுக சோந்து 5பாட்டுப் புத்தகங்கள் ஆலயத்திற்கு வாங்கிப் போட்டார். மற்றோர் இடத்தில் காணிக்கை வாங்கத் தட்டு, சமுக்காளங்கள் என ஆலயங்களுக்கு வாங்கித் தந்துள்ளார். ஆலயத்திற்கு ஒரு குழல் விளக்கு வாங்கிப் போட்டாலே தன் பெயரை அதில் பதித்து வைக்கும் மனிதர்களிடையே இந்தப் பாட்டி புதுமையாக நின்றாள். ஒரு முறை தன் ஆலயத்திற்கு வந்த ஏழை ஊழியக்காரப் பெண்ணின் பழைய சேலை பாட்டியின் உள்ளத்தை நைந்து போக வைத்தது. சிறுகச் சிறுகச் சேர்க்க ஆரம்பித்தாள். குறிப்பிட்ட பணம் சேர்ந்தது. மூன்றாம் நபர் மூலம் அந்த ஊழியக்காரப் பெண்ணுக்குச் சேலை வாங்கித்தர வைத்தார். தன் பெயரையும் கூறக் கூடாது என அன்புக் கட்டளையுமிட்டு விட்டார்.
ஞானத்தின் கண்களுக்கு ஆட்டோகிராப்புக்காகவும் போட்டோ கிராப்புக்காகவும் அள்ளிக் கொடுக்கும் மனிதர்கள் காகித மலர்களாகக் காட்சியளிக்க, தான் தியாகத்தோடு செய்வது மட்டுமல்ல, தன் பெயரையும் வெளி வராமல் தடுத்துவிடும் இந்தப் பாட்டி மணமிகு மல்லிகையாகக் காட்சியளித்தாள்.
எம்பெருமான் இயேசுவின் பாதங்களை அர்ச்சிப்பது காகித மலர்களல்ல! இறைவனது படைப்பில் மலர்ந்த கவின்மிகு மலர்களே! என உணர்ந்தவள், மனநிறைவடைந்தவளாக மெல்லிய புன்முறுவலைத் தன் இதழ்களில் படர விட்டாள்.
இந்தக் கதை நிலாக்காயுது என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.