ஒழுங்கா விடுதலையா?

அனைத்து ஓய்வு நாட்களிலும், அனைத்து பக்தியுள்ள யூதர்களும் ஜெப ஆலயத்தில் கூடுவது ஒரு ஆவிக்குரிய ஒழுக்கம், ஒரு நடைமுறை மற்றும் ஒரு பாரம்பரியம்.  அப்படி ஒரு கூடுகையில் கர்த்தராகிய இயேசு பேச அழைக்கப்பட்டார்.  "அப்பொழுது பதினெட்டுவருஷமாய்ப் பலவீனப்படுத்தும் ஆவியைக்கொண்ட ஒரு ஸ்திரீ அங்கேயிருந்தாள். அவள் எவ்வளவும் நிமிரக்கூடாத கூனியாயிருந்தாள். இயேசு அவளைக் கண்டு, தம்மிடத்தில் அழைத்து: ஸ்திரீயே, உன் பலவீனத்தினின்று விடுதலையாக்கப்பட்டாய் என்று சொல்லி, அவள்மேல் தமது கைகளை வைத்தார்; உடனே அவள் நிமிர்ந்து, தேவனை மகிமைப்படுத்தினாள்" (லூக்கா 13:11-13). 

முதன்மை:
ஒரு சபையின் ஆராதனை நேரங்களில் முதன்மை நோக்கம் என்னவாக இருக்கும் என்றால் ஆராதனையை சரியான நேரத்திற்கு ஆரம்பிக்க வேண்டுமே மற்றும் ஒழுங்கும் கிரமுமாக எல்லாம் நடக்க வேண்டுமே என்பதாக தான் இருக்கும்;  ஆனால் கர்த்தராகிய ஆண்டவரின் அக்கறையோ ஆராதனைக்கு வந்த மக்களைப் பற்றியும் அவர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்றும் இருந்தது.  இன்று, உள்ளூர் சபையின் செயல்பாடு எப்படி இருக்கிறது?  இது மனதில் பதிய கூடியதான அற்புதமான நிகழ்வு அல்லது தேவன் மக்களை சந்திப்பதைப் பற்றியது எனலாம். 

கரிசனை:
ஜெப ஆலயத் தலைவரின் கவலையோ அந்த நிகழ்வைப் பற்றியது. ஆம்,  அவரைப் பொறுத்தவரை, இந்த நிகழ்வு தேவனுக்காக நியமிக்கப்பட்டது மற்றும் இந்த ஆராதனையில் எந்த தங்குத்தடையும் வரக்கூடாதே அல்லது கவனச்சிதறல் ஏற்பட்டிடக் கூடாதே  என்றிருந்தார்.  ஆனால் கர்த்தராகிய ஆண்டவருக்கோ தொழுதுக் கொள்ள சபைக்கு வந்த ஒவ்வொருவரின் மீதும் அக்கறை இருந்தது. இன்றும்கூட பல போதகர்கள் ஐயோ ஆராதனை சரியாக நடக்க வேண்டுமே என்று மாத்திரமே கவலைப்படுகிறார்கள், அதில் வெகு சிலரே ஜனங்களைப் பற்றியும் அவர்கள் என்ன தேவைகளோடு வந்திருக்கிறார்களோ என்பது பற்றியும் கவலைப்படுகிறார்கள்.

புறக்கணிப்பு அல்லது மதிப்பு:
ஊனமுற்ற பெண் ஜெப ஆலயத் தலைவராலும் மற்ற வழிபாட்டாளர்களாலும் புறக்கணிக்கப்பட்டாள்.  அநேகமாக, அவள் பதினெட்டு ஆண்டுகளாக ஜெப ஆலயத்திற்கு வந்து தேவனை வணங்குவதற்காக அதே இடத்தில் அமர்ந்திருக்கலாம்.  பெரும்பாலானவர்கள் அவளை பார்ப்பதையே தவிர்த்திருப்பார்கள். ஆனால் கர்த்தராகிய ஆண்டவருக்கோ, இவ்வளவு இயலாமையோடும் தேவனை துதித்து ஆராதிக்க  சபைக்கு வந்திருக்கும் அவளின் முயற்சியைப் பார்த்தார். அவள் பாராட்டுக்கும் கைதட்டலுக்கும் தகுதியானவள். ஏழைகளிடமும் பணக்காரர்களிடம் வித்தியாசம் காட்டும்; அதாவது பணக்காரர்களை கவுரவித்தும் ஏழைகளை புறந்தள்ளியும் பாரபட்சம் காட்டும் போதகர்களை யாக்கோபு கண்டிப்பதை, (யாக்கோபு 2: 1-4)ல் காணலாம். 

பலி:
ஜெப ஆலயத்தில் இருந்த பலர் அவளுக்கு வேறு எந்த வேலைவெட்டியும் இல்லை, அதனால் சபையில் வந்து இருக்கிறாள் போல என்று நினைத்திருக்கலாம். ஆனால் அவளோ மிகுந்த சிரமப்பட்டு வந்து அங்கே இருந்தாள். ஆம், மற்றவர்கள் எளிதாக உள்ளே செல்வது போல் அவளால் முடியாதே, அவள் தன்னை தானே வருத்திக் கொள்ள வேண்டியிருந்தது. ஜெப ஆலயத் தலைவர் அவளுடைய முயற்சிகளைப் பாராட்டத் தவறிவிட்டார், ஆனால் கர்த்தராகிய ஆண்டவர் அவளைப் பார்த்து, அவளை அழைத்து, அவளுடைய கண்ணியத்தையும் சிரத்தையையும் (சிரமத்தையும்) அங்கீகரித்தார்.

சந்தோஷமா சோகமா:
நெறிமுறைகளை மீறியதால் ஜெப ஆலயத் தலைவர் கோபமாகவும், சோகமாகவும், விரக்தியாகவும் இருந்தார். ஆனால் அப்பெண்ணோ விடுதலைப் பெற்றாள்; ஜனங்கள் தேவ மகிமையைக் கண்டார்கள்.

தேவையோடு இருப்பவர்களை நான் சந்திக்கிறேனா? அவர்களுக்கு உதவுகிறேனா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download