ஆபரேஷன்... சக்ஸஸ்

ஆன்ட்டி?” குரல் கொடுத்துக் கொண்டே ராஜீ உள்ளே வந்தான். சமயலறையிலிருந்து வெளியே வந்தாள் சாந்தா.

வாப்பா... வா?” என வரவேற்றாள்.

ஆன்ட்டி! நான் சொன்ன இடத்திற்குப் போனீர்களா? பெண் எப்படி? தங்கச் சிலை மாதிரி இல்லையா?” ஆவலே வடிவாகக் கேட்டான்.

“ஜவுளிக் கடையில் கூடத்தான் பொம்மை வைச்சிருக்கான். அழகா இருந்தால் போதுமா?” நீட்டி முழக்கினாள் சாந்தா.

என்ன ஆன்ட்டி அப்படி சொல்லிட்டீங்க? டேவிட்டுக்கு அழகான பெண் வேணும்னு தானே தஞ்சாவூர் சம்பந்தத்தை வேண்டாம்னு சொன்னீங்க... லில்லி அழகாவும் இருக்கிறா. நல்ல நிறம். வேலையும் பார்க்கிறா, அப்படி இருக்கும் போது... 

எல்லாம் சரிதான் ராஜீ... ஆனா... டெளரி, ரொம்ப கம்மியா இருக்கே! எனக்கு இருக்கிறது ஒரு பையன் ஒரு பொண்ணு. பொண்ணை கரை சேர்த்தாச்சு! எனக்கு வரும் ஒரே மருமகள், நல்ல செல்வாக்கோடு வரவேண்டாமா?

ஆன்ட்டி! ஒன்னு இருந்தா ஒன்னு இருக்காது எல்லாத்திலேயும் சிறந்ததா எதிர்பார்த்தா எப்படி? சோகமாகச் சொன்னான் ராஜீ.

அந்த நேரம் உள்ளே வந்தார் தேவசகாயம் ஆசிரியர். ராஜீவின் அருகில் அமர்ந்தார்.

கரெக்டா சொன்னப்பா! ஆசைப்படலாம். பேராசப் படக்கூடாது. சொன்னால் தாயும், பிள்ளையும் கேட்டால் தானே. திருநெல்வேலிப் பெண்ணை, பணம் நிறையக் கொடுத்தால் போதுமா?பெண் கறுப்புன்னு சொன்னாங்க! லதாவுக்கு நிறமில்ல! லில்லிக்கு பணமில்ல! மேரிக்கு பட்டமில்லை! நேசத்திற்கு ஜாதியில்லை! விமலாவிற்கு வேலையில்லை! இப்படி ஒவ்வொன்றையும் தட்டிக் கொண்டே வராங்க. டேவிட்டுக்கு மேரேஜ்ன்னு ஒன்னு ஆகுமோ என்னவோ போ?” விரக்தியோடு பேசினார்,

ஏன் இப்படி அபசகுனம் மாதிரி பேசுறீங்க?” என்றவள் ராஜீ பக்கம் திரும்பி, “டாக்டர் தனசேகரன் பெண்ணைப் பார்க்கப் போறோம். டாக்ஸி கூப்பிடத்தான் டேவிட் போயிருக்கான். இந்த சம்பந்தம் நிச்சயம் முடியும்'' என்றாள் சாந்தா.

டாக்டர் தனசேகரன் பெண்ணையா?” ஆச்சரியமாகக் கேட்டான் ராஜீ.

"ஏன் ஆச்சரியப்படுற... என் பையனுக்கு என்ன தகுதியில்லையா? ஆண்பிள்ளை... என் பிள்ளை... தெரியுமா? அவள் முகத்தில் பெருமை பொங்கி வழிந்தது.

அந்த வேளை டாக்ஸி வந்து நிற்க, மிடுக்குடன் டேவிட் உள்ளே வந்தான்.

டாக்டர் தனசேகரன் இல்லத்தின் முன் வராண்டா கலகலத்தது. திருமண்டிலம், அரசியல், உலக நடப்பு என தனசேகரன் குடும்பத்தினரும், தேவசகாயம் குடும்பத்தினரும், பேசிக் கொண்டிருந்தனர். எதிர்புறம் அமர்ந்திருந்த ராணியையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த டேவிட் கற்பனையில் மிதந்தான்.

“வந்த காரியத்தைப் பேசுவோமே! வாயெல்லாம் பல்லாக சாந்தா பேசினாள். 

“உண்மைதான்? என்று கூறியபடி சாந்தாவைப் பார்த்தார் டாக்டர். 

“நகை 50 பவுன். டெளரி ஒரு 50,000 ரூபாய், உங்க தகுதிக்கேற்றபடி இருக்க வேண்டாமா? அப்புறம் சீர்வரிசை... அதெல்லாமா சொல்லணும்? உங்க பொண்ணுக்குச் செய்யப் போறீங்க... கலர்டிவி, ஃபிரிட்ஜ், ஸ்கூட்டர் உட்பட வாங்கிடுங்க....?

சரிதான்! இதெல்லாம் சொல்லணுமா? சீர்சையை, வரிசையா அனுப்பி ஓர்  ஊர்வலமே வச்சிடலாம் அப்பத்தானே நமக்குப் பெருமை? ஆமா... ஏன் 50 பவுன் கேட்டீங்க? அட்லீஸ்ட் 101 பவுனாவது வேண்டாமா? அக்கறையோடு சொன்ன ராணியை அனைவரும் ஆச்சரியமாகப் பார்த்தனர்.

“என் ராஜாத்தி! என்ன உரிமையா பேசுறா மேரேஜ்ல ஒரு விநாடி நேரம் கூட விடாம விடியோ எடுக்கணும், நான் தினமும் பார்க்கணும்.” என்று சாந்தா கூற

பருப்பில்லாத சாம்பாரா? அதெல்லாம் கொளுத்திடலாம்?” ராணி உற்சாகமாகச் சொன்னாள். இன்பக் கடலில் டேவிட். சாந்தாவும் மிதக்க, டாக்டர் தம்பதியினர் நடப்பதெல்லாம் கனவா, நனவா எனப் புரியாமல் திகைத்தனர். ராணியே தொடர்ந்தாள்.

“உங்களுக்குப் பெண்ணைப் பிடிக்க வேண்டாமா?! *

தேவதை மாதிரி இருக்கும் உன்னை யாருக்குத் தான் பிடிக்காது? தன் அத்தனை பல்லையும் காட்டினாள் சாந்தா.

என்ன! நானா மணப்பெண்? என்று ஆச்சரியப்பட்டாள் ராணி. என்னை தன் மனைவியாக கற்பனை செய்து பார்க்கக்கூட உங்கள் பிள்ளைக்குத் தகுதியில்லை. உங்கள் பிள்ளை நிறம்... கறுப்பு! அழகு... பூஜ்யம்! அறிவு... சுத்த சூன்யம்! பி.ஏ. முடித்து சாதாரண கிளர்க் வேலைபார்க்கும் உங்கபிள்ளைக்கா என்னைக் கேட்க வந்தீங்க?” 

சாட்டையால் மாறி, மாறி அடிப்பது போலிருந்தது, தேவசகாயம் குடும்பத்தினருக்கு!

நீ நகை, டெளரி, சீர்வரிசை என்றெல்லாம்... சொன்னியே!” பரிதாபமாகக் கேட்டாள் சாந்தா.

அதுவா? பரம்பரை, பரம்பரையா எங்களுக்குச் சலவை செய்யும் டோபி, அவனுடைய கழுதை  நொண்டி ஆயிடுச்சுன்னு அழுதான். நான் தான் “கவலைப்படாதே டெளரி, நகை, சீர்வரிசை கொடுத்தால் கல்யாணமே செய்துகிட்டுப் போவாங்க! இது கூடவா உனக்காக நாங்க செய்ய மாட்டோம்”ன்னு சொல்லி அனுப்பி வச்சேன்”! என்று நிதானமாகச் சொன்னாள். ராணி.

ராணி! டாக்டரின் குரல் கடுமையாக ஒலித்தது:

உள்ளே போ! ஆணையிட்டார். ராணி உள்ளே சென்றாள்.

அம்மா வாங்க போவோம்” கோபம் கொப்பளிக்க எழுந்தான் டேவிட்.

“டாக்டரையா! உங்க பெண்ணுக்கு என் பையன் தகுதியில்லாம இருக்கலாம் அதற்காக இப்படி அவமானப்படுத்தலாமா? நீங்க தானே திருமண விஷயமா பேசணும்னு சொல்லிவிட்டீங்க!?”வேதனையோடு சொன்ன தேவசகாயத்தைப் பார்த்து மிஸ்டர் தேவசகாயம்... என்று டாக்டர் ஆரம்பிக்கவும்.

புயலென சீறினாள் சாந்தா, மரியாதை தெரியாத வீட்டில் என்னங்க பேச்சு? வாங்க போகலாம்!” மூவரும் வெளியேறினர். டாக்ஸி நகர்ந்தது.

“அம்மா! எனக்கு வில்லியைப் பிடிச்சிருக்கு ...? என்று டேவிட் கூற ““டிரைவர் வண்டியை நிறுத்துங்க?” என்று ஆணையிட்டாள் சாந்தா. பூக்கடை அருகே வண்டி நின்றது. லில்லியின் முகவரியைச் சொல்லி டாக்ஸியை அங்கு விடச் சொன்னாள்.

தேவசகாயம் ஒரு பெருமூச்சு விட்டார். இவர்கள் மனம் மாற இப்படி சவுக்கடிகள் தேவை போலும் என நினைத்தார்.

ராணி” என்று கர்ச்சித்தார் டாக்டர். சிரித்துக்கொண்டே வந்த ராணி, என்னை மன்னிச்சிடுங்கப்பா,

பேராசை பிடிச்சு அலையும் மனித ஜன்மங்களுக்கு ஒரு பாடம் கற்பிக்கத்தான் அப்படிப் பேசினேன்"? என்றாள்.

வீணாக ஒரு பிள்ளையின் வாழ்விலே நீ விளையாடிவிட்டாய். லில்லியின் திருமண விஷயமாக பேச அழைத்திருந்தேன் நீ காரியத்தைக் கெடுத்து விட்டாய்.”

இல்லையப்பா! நீங்கள் நினைத்த காரியத்தை நடத்தத்தான் நான் இப்படி 'ஒரு நாடகம் நடத்த வேண்டியதாகி விட்டது. அப்பா! நீங்கள் புண்ணுக்கு ஆயின்மெண்ட் போட நினைத்தீர்கள். நீங்க நினைத்த மாதிரி இது சாதாரண புண் இல்லை. புரையோடிப்போன புண். அதற்கு ஆயின்மெண்ட் அல்ல. ஆபரேஷன் தான் தேவை. அதைத்தான் நான் செய்தேன்.”

சாந்தா, டேவிட்டைப் பற்றி அறிந்திருந்த டாக்டருக்கு ஓரளவு சமாதானமாக இருந்தது.

டாக்டர்! ஆபரேஷன் சக்ஸஸ்தானா?” சிரித்துக் கொண்டே டாக்டர் கேட்க.

நிச்சயம் சக்ஸஸ் தான். நாளை முடிவு தெரியும், என்னை ஃபீஸ்ஸுடன் வந்து பாருங்கள் என்று ராணி பதில் கூற அனைவரும் சிரித்து மகிழ்ந்தனர்.

இந்தக் கதை  உதய கீதம் என்ற புத்தகத்திலிருந்து   Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.



Topics: Tamil Christian Story Udhaya Geetham - Story

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download