பால் நன்றாகக் குடிக்க குழந்தை 140 டிகிரிக்கு வாயைத் திறக்க வேண்டும். ஒரு மனிதன் வாயைத் திறக்கக்கூடிய அதிகபட்ச சாத்தியம் இதுதான். "உன் வாயை விரிவாய்த் திற, நான் அதை நிரப்புவேன்" (சங்கீதம் 81:10). தாய் பறவை கூடுகளுக்கு உணவைக் கொண்டு வரும்போது, திறந்த வாய்களுடன் குஞ்சுகள் தயாராக இருப்பதை பார்க்க முடியும். குஞ்சுகள் எப்போதும் ஆவலாகவும் ஆர்வமாகவும் இருக்கும். வாய்களை விரிவாய்த் திறக்கும் போது அதை நிரப்புவதாக தேவன் வாக்குறுதி அளித்துள்ளார்.
1) பசி:
குழந்தைகளைப் போலவே, அனைவரும் உணவைப் பெற வாயைத் திறக்க வேண்டும். பசியோடு இருப்பவன் தன்னிச்சையாக வாயைத் திறப்பான். தேவ வார்த்தையின் மீதான பசி ஒரு விசுவாசியை ஞானத்தையும் புரிந்துகொள்ளுதலையும் கேட்டு வாயைத் திறக்க வைக்கும். "நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்" (மத்தேயு 5:6). தேவனுடைய மக்கள் நீதியின் பாதைகளில் நடக்கிறார்கள், மேலும் நீதியின் கருவிகளாகவும் இருக்கிறார்கள் (சங்கீதம் 23:3; ரோமர் 6:13).
2) பெரிய விஷயங்களைக் கேளுங்கள்:
விசுவாசமுள்ளவர்கள் தேவனிடம் பெரிய விஷயங்களைக் கேட்கிறார்கள். ஆசீர்வாதங்களின் வாய்க்கால்களாக, தேவன் அவர்கள் மூலம் உலகத்தை மாற்ற வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். தேவ ராஜ்யத்தின் விரிவாக்கம் மற்றும் அவரது பணிகளுக்காக, விசுவாசிகள் தேசங்களைக் கொடுக்கும்படி தேவனிடம் கேட்க வேண்டும் (சங்கீதம் 2:8). மாபெரும் மிஷனரியான வில்லியம் கேரி கேட்டது மட்டுமல்லாமல், தேவனுக்காக பெரிய காரியங்களை முயற்சி செய்தார், பெரிய விஷயங்களை எதிர்பார்த்தார். வேதாகமத்தை பல மொழிகளில் மொழிபெயர்க்க தேவன் அவருக்கு உதவியதில் ஆச்சரியமில்லை. சீஷர்கள் தங்கள் வாயைத் திறப்பதன் மூலம் அருட்பணிகளுக்கான திறந்த கதவுகளைக் காணலாம்.
3) ஆச்சரியமும் பிரமிப்பும்:
அதிசயமான அல்லது இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒன்றைக் கண்டால் மக்கள் வாயை ஆச்சரியத்தில் திறக்கிறார்கள். தேவன் தம் பிள்ளைகளின் வாழ்க்கையில் அவருடைய அதிசயமான செயல்களை அறியச் செய்கிறார். விசுவாசிகள் தேவ சந்நிதியில் அவரைத் தேடி, அவருடைய அழகைத் தேடி நிற்கும் போது ஆராதனையில் வாயை திறப்பார்கள்.
4) ஜெபம்:
தேவ பிள்ளைகள் என்றாலே ஜெபிக்கின்ற ஜனங்கள் எனலாம். பிறருக்காகப் பரிந்து பேசும் பாக்கியம் அவர்களுக்கு உண்டு. தேவ ஜனங்கள் திறப்பின் வாசலில் நின்று சபைக்காக, மக்களுக்காக மற்றும் நாடுகளுக்காக தேவ இரக்கங்களுக்காகவும் ஆசீர்வாதங்களுக்காகவும் மன்றாடுகிறார்கள் (எசேக்கியேல் 22:30).
5) துதி:
குழந்தைகள் மற்றும் பாலகர் வாயிலிருந்து துதி சத்தம் பரலோகத்திற்கு ஏறுகிறது (சங்கீதம் 8:2: மத்தேயு 21:16).
உலக மக்கள் தேவையற்ற காரியங்களுக்காக வாயைத் திறக்கும்போது, விசுவாசிகள் உன்னதமான காரியங்களுக்காக வாயைத் திறக்க வேண்டாமா?
நான் வாயை விரிவாக திறப்பேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்