இருள் தன்னை அகற்ற ஓடிவரும் உதயணனின் வருகையை முன்னறிவிக்கும் விடிவெள்ளி வானில் ஒளிரியது. காலை 4 மணி! அந்த விடிவெள்ளியைக் காண்பதில் ஜெஸிம்மாவிற்கு அலாதி மகிழ்ச்சி. விடிவெள்ளியைக் கண்டபின்தான் காலை தியானத்தை ஆரம்பிப்பாள், இறைவனோடு குறைந்தது 1 மணி நேரத்தையாவது செலவிட்ட பின் தன் குடும்பக் காரியங்களைக் கவனிக்க ஆரம்பிப்பாள்.
அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டவர்கள்? என சாலமோன் கூறுவதையும், தாவீதும் காலை நேரத்தை கடவுளுக்கு சொந்தமாக்கி தன் வாழ்வை வெற்றி வாழ்வாக்கிக் கொண்டதையும். நன்குணர்ந்த ஜெஸிம்மாவும், காலை தியானமில்லாமல் ஒரு நாளும் தன் வேலையைத் தொடங்க மாட்டாள்... இறைவாக்கைக் கேட்டு, (பைபிள் வாசித்து) தானும் இறைவனோடு பேசி அதன் பின் அந்த நாளை ஆரம்பிக்கும்போது இறைமகன் இயேசு தன் கரத்தைப் பற்றி அந்த நாளுக்கு அழைத்துச் செல்வது போல் அவளுக்குத் தோன்றும். அதனால் அன்று எதிர்படும் பிரச்சனைகள், தடைகள் அனைத்தும் கதிரவன் முன் பனிபோல் விலகுவதாக உணர்வாள்.
அது உண்மைதானே! அதனால்தானே ஜெபவாழ்வே ஜெய வாழ்வு என்கின்றனர். ஆனால் இன்றோ... வழக்கம் போல் எழுந்து சாளரக்கின் வழியாக விடி வெள்ளியை நோக்கிய ஜெஸிம்மாவின் இதயம் ஒரேயடியாக இருண்டு கிடந்தது. நேற்றைய தினம், அவளுக்கும் எதிர்வீட்டு சமாதானம் அம்மாளுக்கும், நடந்த உரையாடல், அவள் செவிகளில் அலைமோதி அவள் சமாதானத்தையே பறித்து விட்டது.
ஜெஸிம்மா இளம் வயதிலேயே, தன் அன்புக், கணவனை இழந்து, விதவையானாள். தையல் மிஷினோடு ஒன்றினாள் அந்தத் தையல்! விளைவு! தன் அருமை மகன் ஜெபராஜை பட்டம் பெற வைத்தாள். இன்று அலுவலகத்தில் பணியாற்றி வருகிறான், ஜெபராஜ் தன் மனம் போன்றே தன் வீட்டுக்கு ஏற்ற மருமகளாக மேரி வந்தபோது அகமகிழ்ந்தாள், அப்பேதை குடும்ப ஜெபம், தசமபாசம் செலுத்துதல், முதற்பங்கை ஆண்டவனுக்கு அர்ப்பணித்தல், ஆலய ஆராதனைகளில் உற்சாகமாகக் கலந்து கொள்ளுதல், குழந்தைகளை கர்த்தருக்கேற்றபடி வளர்த்தல், லஞ்சம் வாங்காத தன் மகனின் பணி இவற்றையெல்லாம் கண்டபோது களிப்புற்றாள் ஜெஸிம்மா! தான் நினைத்த இலக்கை அடைந்துவிட்டோமென ஆனந்தித்தாள். ஆனால் இவையனைத்தும் இன்றுமில்லையென்று சமாதானம்மா ஒரே வரியில் கூறிவிட்டாளே! .
ஜெஸி நான் சொல்றேண்ணு கோவிச்சுக்காதே எதற்கும் அளவு வேணும். காணிக்கை கொடுக்க வேண்டியதுதான். வேண்டாண்ணு சொல்லலை. சம்பாதிக்கிறதையெல்லாம் தசமபாகம். முதற்பலன்னு கொடுத்திட்டு நீங்க கஷ்டப்படுவதைப் பாக்கும்போது உனக்கு, புத்தி சொல்லணும்ன்னு எனக்குத் தோணியது.
நாங்க கஷ்டப்படுறோமா? இல்லையேக்கா ஆண்டவர் அற்புதமா எங்களை வழி நடத்தி வருகிறார் சந்தோஷமா வாழ்ந்து வருகிறோம்.
என்ன.. சந்தோஷத்தைக் கண்டே? உன் மகன் ஜெபராஜோடதான் என் மகன் ஜெபக்குமார் வேலை பார்க்கிறான். வசதியா சொந்த வீடு கட்டிட்டான். நீங்க இன்னும் வாடகை வீட்டில் எத்தனையோ அசெளகரியங்களைச் சகித்துக் கொண்டு வாழ வேண்டியிருக்கு. என் பேரன் சைக்கிள்ல ஸ்கூலுக்குப் போறான். உன் பேரன். இங்கிருந்து, 2 மைல் நடந்து போய் படிச்சிட்டு வர்றானே. இதெல்லாம் கஷ்டமில்லையா?
அக்கா அடுத்த மாதம்லோன் போட்டு சைக்கிள் வாங்கித் தர்றதா ஜெபராஜ் சொல்லிக்கிட்டிருக்கான். சிறிது நிறுத்தியவள் பின் மெதுவாகப் பேச்பை ஆரம்பித்தாள். உங்க மகன் குமார் ஆபீஸில் லஞ்சம் வாங்கறதா கேள்விப்பட்டேன் அக்கா! லஞ்சம் வாங்கி சேர்க்கிற பொருள் நிலைக்காதுக்கா. உங்க கிட்ட எப்படிச் சொல்றதுன்னு யோசித்துக் கொண்டிருந்தேன். நீங்களே பேச்சை ஆரம்பிச்சிட்டீங்க! உங்க மகனுக்கு புத்தி சொல்லி! வையுங்க. லஞ்சம் வாங்கிய கேயாசியும், யூதாஸும் வாழ்ந்தாங்களாக்கா?'
சமாதானம்மாள் சிரித்தாள். போடி பைத்தியக்காரி! கேயாசி தன் எஜமானுக்குத் தெரியாமலும், யூதாஸ் தன் பரம இரட்சகரைக் காட்டிக் கொடுத்தும் லஞ்சம் வாங்கினாங்க. வாழ முடியாமப் போனாங்க! நாம் என்ன கெடுதலா செய்றோம் நம்மிடத்தில் வருபவர்கள் வேலையை, அவர்களுக்குச் சாதகமாக சீக்கிரம் முடித்துத் தர்றோம் அதற்கு நமக்கு நன்றி காட்ட அவங்க ஏதாவது தர்றாங்க, அதை வாங்குவதில் என்ன தப்பு? இப்படியெல்லாம் பார்த்தா வாழ முடியாது. சரி நான் கேட்கிறதற்கு நீ பதில் சொல். நீ தான் சின்ன வயசிலிருந்தே சாமி மேல பக்தியா... ஏன்... பைத்தியமா இருக்கேயே! வாலிப வயதில ஏண்டி உன் கணவரை அந்த தெய்வம் பறித்து உன்னை விதவையாக்கி வேதனைப்படுத்தணும்? சொல்லுடி!"
ஊமையானாள் ஜெஸிம்மா. என்ன பதில் சொல்லுவாள்? சமாதானம்மாளே பேச்சைத் தொடர்ந்தாள். வருத்தப்படாதே ஜெஸிம்மா! எது எது நடக்கணுமோ... அதெல்லாம் நடக்கத்தான் செய்யும். நாமும் யோசிச்சு நடக்கனும். எதிலேயும் அளவோடு சிக்கனமா வாழ்ந்து நாலுபேர் நம்மை மதிக்கும்படியாக பணம் காசோடு வாழனும். பக்தியா இருக்கலாம்! பைத்தியமா மாறிடக் கூடாது. எனக்குத் தோன்றியதைச் சொன்னேன் யோசித்து நடந்துக்கோ!” பேச்சை முடித்துவிட்டாள் சமாதானம்மாள். ஜெஸிம்மாவும் யோசித்து, யோசித்து பைத்தியம் பிடிக்கும் நிலைக்கு வந்து விட்டாள்.
ஏன் என் கணவரை என்னை விட்டு இளமையிலேயே பிரிக்க வேண்டும்? ஏன் நான் வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட வேண்டும். நான் தேவனை நம்பி அவரையே சார்ந்துதானே இருந்தேன்? குழம்பினாள் ஜெஸிம்மா!
“கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார். எனக்கு குறைவு ஒன்றும் இல்லை' என தாவீது கூறியபடி மனித உதவியற்ற அந்த இளமை நாட்களில் தேவன் அற்புதமாக தன்னையும், தன் மகனையும் போஷித்தது அவள் நினைவுக்கு. வந்தது. நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்கு பயப்படேன். தேவரீர் என்னோடு கூட இருக்கிறீர்” என்றபடி உன்னை எவ்வளவு அற்புதமாக தேவன் நடத்தி வந்தார் என்று அவள் உள்மனம் பதில் அளித்தது. கர்த்தரை நம்புகிறவர்களின் கண்ணீர் மாறும் என்பதையும் அவள் உணர்ந்தாள்.
ஒரு நிலையில்லாமல் தவித்தாள் ஜெஸிம்மா! எந்திரம் போல் காலை ஜெபம் முடித்தாள். மகன், மருமகள், பேரன் ரவி அனைவரும் அலுவலகத்திற்கும், ஸ்கூலுக்கும் சென்று விட்டனர். நிமிடங்கள் மணிகளாக உருண்டன.
பாட்டியம்மா! நீங்க பொய்தானே சொன்னீங்க?” 3 வயது நிரம்பிய தன் இரண்டாவது பேரன் பாபுவின் குரல் அவளை திடுக்கிட வைத்தது. நான் பொய் சொன்னேனா? எப்பக் கண்ணு? ஆச்சரியமாகக் கேட்டாள் ஜெஸிம்மா!
இதோ... அந்த முட்டைல இருந்து கோழிக் குஞ்சு வரும்ன்னு சொன்னீங்களே! எவ்ளோ நாளாச்சு? இன்னும் வரலையே! நீங்க பொய்தான் சொல்லியிருக்கீங்க.
அவன் விரல் சுட்டிக் காட்டிய திசையில் கோழி அடைகாத்துக் கொண்டிருந்தது. அடை வைத்து 10 நாட்கள்தான் ஆகிறது. அவனுடைய சின்னஞ்சிறு அறிவுக்கு அதிக நாட்களாகிறது. அவனுக்கு எப்படி விளக்குவது என யோசித்தாள். காலண்டரை எடுத்து, இன்னும் எத்தனை நாட்கள் இருக்கிறதோ, அத்தனை நாட்களைத் தூக்கிவிட்டு 21 நாட்கள் முற்றும் பெற்ற தேதியைச் சுற்றி மையால் வட்டம் போட்டாள். “பாபு! தினம் தினம் ஒரு தாளைக் கிழிப்போம் அல்லவா! இந்த எண்ணைச் சுற்றி வட்டம் போட்ட தாளைக் கிழிக்கும்போது, முட்டையெல்லாம் குஞ்சாக மாறிவிடும். உண்மையாகவே! வேண்டுமானால் பாரேன்”?
உண்மையாகவா பாட்டி? ஆசையாகக் கேட்டுவிட்டு பாபு விளையாட ஓடிவிட்டான்.
யாரோ சிரிப்பது போன்று உணர்வு ஏற்பட்டது; திடுக்கிட்டுத் திரும்பினாள். யாரும் இல்லை. அவள் மனமே அவளைப் பார்த்துச் சிரித்தது. அவள் மனச்சாட்சி தேவனின் குரலாக எதிரொலித்தது.
“முட்டையில் வளரும் குஞ்சைப் போன்றது இப்புவி வாழ்க்கை, முட்டையை உடைத்து கோழிக் குஞ்சு வருவது போன்ற மறு உலக பரலோக வாழ்வே நிலையானது. இப்புவி வாழ்வில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சிலுவை. சிலுவையின்று ஜெயகிரீடம் இல்லை. நம் சிலுவைப் பாடுகள் கொஞ்ச நாட்களுக்குத்தான் அதற்குள் வாழ்நாள் முழுவதும் கஷ்டப்படுகிறேன் என அங்கலாய்க்கிறியே! உனக்கும் சின்னஞ்சிறு பாலகன் பாபுவுக்கும் என்ன வித்தியாசம்?
மனந்தெளிந்தாள் ஜெஸிம்மா! கர்த்தருக்குச் செலுத்த வேண்டிய பங்கை வஞ்சித்து தகாத வழியில் பொருள் சேர்த்து பணத்தோடு வாழ்வதை விட, கர்த்தருக்குப் பிரியமாக வசதி குறைவான வாழ்வாக இருப்பினும் அப்படி வாழ்வே நல்லது” என உணர்த்தாள். வேதபுத்தகத்தைத் திறந்தாள்.
இம்மைக்காக மாத்திரம் நாம் கிறிஸ்துவின் மீது நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரை பார்க்கிலும் பரிதபிக்கப்படத் தக்கவர்களாயிருப்போம் என்ற வேத வசனம் அவள் விழிகளில் பட்டது. அதி சீக்கிரத்தில் நீங்கும் இந்த இலேசான நம்முடைய உபத்திரவம் என்பதை உணர்ந்தாள்.
Author: Sis. Vanaja Paulraj