ஒலிவமரக் கன்றுகள் (மகிழம் பூ)

தொடர் - 10

காலையிலேயே தன் வீட்டிற்கு வந்த சம்பந்தியம்மாவைக் கண்டதும் சரோஜாவிற்கு ஆனந்தமாக இருந்தது. '“வாங்கண்ணி வாங்க”? உற்சாகமாக வரவேற்று, கொண்டு வந்த சூட்கேஸை வாங்கிக் கொண்டு உள்ளே அழைத்து வந்தாள்.

“எங்கே அண்ணி ஜாஷ் குட்டி? இன்னுமா எந்திரிக்கலை?” கேட்டுக் கொண்டே உள்ளே வந்தாள் சத்யபிரியா.

“உ.ம். 6.30 மணிக்கு எழுப்பிவிட்டேன். பல் தேய்ச்சிட்டான். பாலையும் குடிக்க மாட்டேன்றான். பைபிளையும் வாசிக்க மாட்டேன்றான். “சின்ன ரோஜா” என்ற சிறுவர் மலரைத்தான் முதலில் படிப்பேன் ன்னு அடம்பிடிக்கிறான். அங்க பாருங்க.” என்று சரோஜா காட்டிய பக்கம் சோபாவில் "உம் ம்” என்று கோபமாக ஆறு வயது சிறுவன் ஜாஷ்வா அமர்ந்திருந்தான். 

“ஸ்தோத்திரம் அத்தை. வாங்க, வாங்க. மாமா வரலையா?” என்று சரளமாகக் கேட்டபடி அழகுப் பதுமையாக நளினி வந்தாள்.

"நளினி. நல்லாயிருக்கையா? படிப்பெல்லாம் எப்படியிருக்கு? புன்னகையோடு கேட்டபடி ஜாஷ்வாவின் அருகில் அமர்ந்தாள் சத்யா.

ஜாஷ் குட்டி! பாட்டியம்மா உன்னைப் பார்க்கணும்ன்னு வந்திருக்கிறேன். நீ கோவிச்சு கிட்டு இருந்தா, எப்படி? உனக்கு படக்கதை புத்தகம் எல்லாம் கொண்டாந்திருக்கிறேன். உன் பர்த்டேக்கு புதுடிரஸ் தாத்தா வாங்கித் தந்திருக்காங்க வா.... வந்து பார் அவன் முகத்தை நிமிர்த்தி கெஞ்சினாள்.

“படக்கதை புத்தகமா பாட்டியம்மா?” ஆவலோடு கேட்டான் ஜாஷ். 

அதற்குள் முன் ஹாலுக்கு வந்த தனராஜ் வாம்மா பிரியா. உன் பேரனுக்கு மூக்குக்கு மேலதான் கோபம் வருது. எப்படித்தான் சமாதானம் பண்றது தெரியல! சிரித்தபடி வந்து எதிர் சோபாவில் அமர்ந்தார்.

“ஸ்தோத்திரம் அண்ணே !” என்றவள்.

தன் சூட்கேஸைத்திறந்து அழகிய பூக்களுக்கிடையே ஒரு சிறுவனும் சிறுமியும் சிரித்துக் கொண்டிருந்த அட்டைப் படத்துடன் கூடிய ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு வந்து ஜாஷ்வாவிடம் கொடுத்தாள். நளினியின் பார்வையும் தனராஜின் பார்வையும் புத்தகத்தின் மீது பதித்தது. போல்

ஜாஷ்வாவின் முகம் அன்றலர்ந்த தாமரை போல் மலர்ந்தது. புத்தகத்தை தடவி பார்த்தான். பாட்டியம்மா! கிளாஸ் (கண்ணாடி) மாதிரி பளபளா...பளபளா.... ன்னு இருக்கு. புன்னகைப் பூத்தான்.

"தேங்ஸ் பாட்டியம்மா?” என்றான் சரோஜா டீக்கப்புகளுடன் வந்தாள். டீபாயின் மேல் டம்ளரில் பால் இருந்தது.

“ஜாஷ் கண்ணு, உனக்கு அழகான“கப் வாங்கிட்டு வந்திருக்கிறேன், தெரியுமா? என்று கூறியபடி மீண்டும் சூட்கேஸைத் திறந்து அழகான பீங்கான் கப்பை எடுத்து வந்தாள் பிரியா.

“எங்கே, பிரியா அதை இங்கே கொடு.” என்று வாங்கிப் பார்த்தார் தனராஜ், அழகா இருக்கே கீழே போட்டா உடைஞ்சிருமே!'

நளினி முந்தினாள், “அழகா ஷோ கேஸில் வைக்கலாம்.” தன் ஆலோசனையைச் சொன்னாள்.

உ.ம்... ம் ... என்னோடது. பாட்டியம்மா எனக்குத்தான் வாங்கிட்டு வந்திருக்காங்க. கொண்டாங்க தாத்தா!” கையை நீட்டினான் ஜாஷ்.

அண்ணே! கீழே போட்டாத்தானே உடையும். ஜாஷ் சமத்துக்குட்டி. கீழேயும் போட மாட்டான் பாருங்களேன். தினம்... தினம் இது நிறைய பால் ஊற்றிக்குடிப்பான். அப்படித்தானே, ஜாஷ்?”” எனக் கேட்டாள் சத்யா.

“ஆமா, தினம், தினம் இதிலதான் மார்னிங்லேயும் ஈவினேங்லேயும் மில்க் குடிப்பேன்.” 
ஜாஷ் உற்சாகமாக உறுதியாகச் சொன்னான். 

டம்ளரிலிருந்து பாலைக்கப்பில் கொடுத்தாள். அமைதியாக குடித்தான் அனைவரும் டீ பருகினர். 

அண்ணி! குளிச்சிட்டு வந்திருங்க. வெந்நீர் இருக்கு. பயணக் களைப்பு போகும்'” சரோஜா கூறவும்

நீ படம் பார்த்துகிட்டு இரு. பாட்டியம்மா குளிச்சிட்டு வந்து உனக்கு கதை சொல்றேன்.” உள்ளே சென்று விட்டாள் பிரியா,

தலையை வேகமாக ஆட்டியவன், புத்தகத்தை புரட்ட ஆரம்பித்தான். நளினி அவனருகே வந்து உட்கார்ந்து “எங்கே காட்டு பார்க்கலாம்.” என்றாள்.

கன்னியையும் கவர்ந்திழுக்கும் வண்ணப்படங்கள்.

“போ சித்தி” எனக்கு எங்க பாட்டியம்மா வாங்கித் தந்தது. உனக்கு உங்க பாட்டியம்மா வாங்கித் தந்தா நீ பாரு. தெரிஞ்சதா?”

“இரு... இரு, நாளைக்கு. நானும் எங்க ப்ரன்ஸீம் சில்ரன்ஸ் பார்க்' போகப்போறோம். உன்ன கூட்டிட்டுப் போக மாட்டேன்.”

“சித்தி, சித்தி. வா... வா... நா..... காட்றேன். இரண்டு பேரும் பார்ப்போம்.” நளினியை ஒட்டி உட்கார்ந்து கொண்டான். தனராஜ் தினசரியில் விழி பதித்தார்.

காலை டிபன் சாப்பிட ஆரம்பித்தனர். ஜாஷ்வாவிற்கு டிபன் ஊட்டி விட வந்த சரோஜாவைப் பார்த்து, “அண்ணி! ஜாஷ்வா கெட்டிகாரப் பையன் பாருங்க, தானே சாப்பிடுவான். பாட்டியம்மாவுக்கும் அவனுக்கும் போட்டி. யார் முதல்ல சாப்பிடபோறான்னு பார்ப்பமா?” என்று சத்யா கூற, “நான் தான் பஸ்ட்” எனக் கூறியபடி இட்லியை பிட்டு வேகமாகச் சாப்பிடத் தொடங்கினான்.

சத்யாபிரியாவின் நெஞ்சம் கடந்த நிகழ்ச்சிகளை அசைபோட்டது. மூத்தமகன் படிப்பை முடிக்கவும், தனராஜ்-சரோஜா தம்பதியினர், வீடு தேடி வந்தனர். திருமணப் பேச்சு நடைபெற்றது. பால் ஆனந்த் மருத்துவ மிஷனரியாக பணி செய்வதே தன் லட்சியம் எனக் கூறி விட்டான். செல்வந்தர்களான தனராஜ்-சரோஜா தம்பதியினர் தங்களது மகள் ரோஸலினை மலைப்பகுதிக்கோ, காட்டுப்பகுதிக்கோ, குக்கிராமத்திற்கோ அனுப்ப விரும்பவில்லை.

“நாங்களே கிளினிக், கார் எல்லாம் ஏற்பாடு செய்கிறோம். சிட்டியிலே பிராக்டிஸ் பண்ணட்டும். நீங்கள் ஊழியம் செய்யறது போல அவர்களும் ஊழியத்திற்குப் போகட்டும். ஊழியர்களைப் பொருள் கொடுத்து நன்றாகத் தாங்கலாமே!” எனப் பக்குவமாகப் பேசினார் தனராஜ். 

“அயனாவரத்தில் எங்களுக்கிருக்கிற பங்களாவை அருமையான ஹாஸ்பிடலா மாத்திரலாம். மாதம் ஒரு முறையோ, இரு முறையோ எங்காவது கிராமத்திற்குப் போய் மருத்துவம் பார்த்திட்டு வரட்டும் நீங்க வேலை பார்த்துகிட்டே ஊழியம் செய்யலையா? எங்க பொண்ணை நிறைய இடத்திலே கேட்கிறாங்க. உங்க பையனை எங்களுக்குப் பிடிச்சிருக்கு. அதுதான் வீடு தேடி வந்தோம்.” சரோஜா மடமட வென்று தன் எண்ணத்தைக் கொட்டினாள்.

“மிஸ்டர் தனராஜ்! ஜெபிப்போம். எங்க பையன் விலா எலும்பில்தான் உங்க மகளை தேவன் வடிவமைத் திருந்தார்ன்னா நிச்சயம் திருமணம் நடக்கும். கர்த்தர் நடத்துதலுக்குக் காத்திருப்போம்.'” சமாதானமாகப் பேசினார். சார்லஸ். திருமணப் பேச்சு தடைபட்டது.

மஞ்சு மலை என்ற மலைக்கிராமத்தில் சிறியதொரு மருத்துவமனை தொடங்கி நடத்தி வரலானார், டாக்டர் பால் ஆனந்த். அவருக்கு உதவிட ஒரு நர்ஸ் குடும்பம் சென்றது. கணவன், மனைவி இருவருமே மருத்துவப் பணியாளர்கள். எனவே எதிர்பார்த்ததற்கும் மேலாக மருத்துவபணி நடைபெற்றது.

மலேரியா, வயிற்றுப்போக்கு போன்ற நோய்களினால் பாதிக்கப்பட்ட அந்த மக்கள் கூட்டம் முதலில் மருத்துவ மனைக்கு வரத் தயங்கினாலும், பின்னர் கூட்டம் கூட்டமாய் படையெடுக்கத் தொடங்கிவிட்டது. மேற்கு தொடர்ச்சி மலையின் பிரிவாகக் காணப்பட்ட அந்த மஞ்சு மலையில் அங்கொன்றும், இங்கொன்றுமாக பதினாறு கிராமங்கள் மலையிலும் பள்ளத்தாக்கிலுமாக அமைந்திருந்தது. நர்ஸ் சாந்தியின் சாந்தமான முகமும், அன்பான பேச்சும், கரிசனையான கவனிப்பும் பெண் மக்களை மருத்துமனைக்கு இழுத்துக் கொண்டு வந்தது. டாக்டர் பால் ஆனந்தின் சுறுசுறுப்பும் அக்கரையான சிகிச்சை முறையும் மக்களைக் கவர்ந்தது. ஒன்பது திங்கள்ஒடி மறைந்தது.

மிஷனரி கூட்டமொன்றில் கலந்து கொண்ட டாக்டர் ரோஸிலின் தானும் மருத்துவ மிஷனரியாகச் செல்ல முடிவெடுத்தாள். பெற்றோரை வற்புறுத்தினாள். விளைவு பால் ஆனந்திற்கும், டாக்டர் ரோஸிலினுக்கும் திருமணம் வெகு சிறப்பாக நடைபெற்றது. விரைவிலேயே மஞ்சு மலைக்கு மனைவியுடன் பயணமானான்.

கடந்த கால நினைவுகளில் மூழ்கிக் கிடந்தவளை சரோஜாவின் குரல் தட்டியெழுப்பியது.

“என்ன அண்ணி, என்ன யோசனை? அண்ணன் நினைப்பா? இட்லி அப்படியே இருக்கே!”

“பாட்டியம்மா, நான்தான் பஸ்ட். நீங்க தோத்து போயிட்டீங்க.” உற்சாகமாகக் கத்தினான் ஜாஷ்.

தந்நிலைக்கு வந்தவள், “இன்னைக்கு மட்டும் ஜெயிச்சா போதுமா?” என்றாள்.

“பாருங்க, தினம் தினம் நான்தான் ஜெயிப்பேன் “கூறிக் கொண்டே குதித்து ஓடினான். மணி 8.30 காரில் ஸ்கூலுக்கு கிளம்பி போய்விட்டான் ஜாஷ்வா. தன் கம்பெனிக்கு புறப்பட்டுச் சென்றார் தனராஜ். நளினி டி.வி.யில் மூழ்கினாள்.

ஹாலில் சரோஜாவும், சத்யாவும் அமர்ந்து பேச ஆரம்பித்தனர்.

“அண்ணி! கட்டாயம் ஜாஷ்வா காலையில் பைபிள் வாசிக்க வேண்டும். வசனம் மனப்பாடம் செய்ய வையுங்க.”ன்னு உங்க மருமக ஆர்டர் போட்டுகிட்டே இருக்கா. ஆனா... என்னாலதான் ஒண்ணும் செய்ய முடியலை. இவரையே ஜெபம் செய்ய வைக்க முடியலை. நான்தான் அதிகாலையில் வேதம் வாசிச்சு ஜெபிக்க பழகியிருக்கேன். அதுவும் உங்களோட சம்பந்தம் வச்சிக்கிட்ட பிறகுதான் எனக்கு இந்தப் பழக்கம் எல்லாம்.அதுக்கு முன்னாடி ஞாயிற்றுக்கிழமை கோயிலுக்கு போறதோட சரி. கடமைக்கு சங்கீதங்களை வாசிப்பேன். டி.வி.சீரியல்ல மனச பறி கொடுத்து உட்காந்திருப்பேன். ஆனா.... இப்ப மாறிட்டேன். பைபிள் படிக்கிறேன். ஆவிக்குரிய புத்தகம், பத்திரிக்கை வாசிக்கிறேன். டி.வியில் வரும் கிறிஸ்துவ நிகழ்ச்சிகளையெல்லாம் ஒண்ணு விடமா பார்த்திடுவேன்.” சந்தோஷமாகச் சொன்னாள் சரோஜா. 

“அப்படியா சந்தோஷம் அண்ணி!” சத்யா கூற ஆனா.....அவரும் என் பேச்சைக் கேட்பதில்லை.

இந்தப் பிள்ளையும் (நளினியை சுட்டிக் காட்டினாள்.) என் பேச்சைக் கேட்காது. காலேஜ் லீவுன்னா... டி.வி.யே கதிதான்.” சலித்துக் கொண்டாள்.

நளினி இடம்பெயரவில்லை. அவள் கவனமெல்லாம் தொலைக்காட்சியிலேயே இருந்தது.

“அண்ணி! பிள்ளையை நடத்த வேண்டிய வழியிலே நடத்து. அப்பொழுது முதிர் வயதிலும் அதை அவன் விடாதிருப்பான்னு வேதம் சொல்லுது. ஆறு வயதுப் பாலகனை, மொட்டையா'பைபிள் வாசின்னு' சொன்னா, அவன் எப்படிப் படிப்பான்? சின்னக்குழந்தையிலேயே பைபிள் கதைகளை குழந்தைகளுக்கு மெல்ல, மெல்ல சொல்லியிருக்கணும். உலகப்படைப்பு, நோவாவின் பேழை, யோசேப்பு, தானியேல், தாவீது, கிதியோன், நாகமான் மற்றும் இயேசு செய்த அற்புதங்களையெல்லாம் கதையா சொல்லியிருக்கணும்” என்ற சத்யாவை இடைமறித்தாள். சரோஜா.

“அண்ணி! இந்தப் பொடியனுக்கு உங்க மருமக அதையெல்லாம் சொல்லியிருக்கா” பெருமை முகத்தில் ஒளி வீசியது.

“இப்ப அவன் எழுத்துக் கூட்டி வாசிக்கத் துவங்கியிருப்பான். இல்லையா?” என்றவள்”*நளினி எங்கே நான் கொண்டு வந்த புத்தகம்?” என்றாள்.

“அவன் ஷெல்பில் பத்திரமா வச்சிருக்கான்.” என்று கூறிய படி எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தாள்.

அதைத் திறந்த சத்யா,”சிறுவர்களுக்கான பைபிள் கதைகளெல்லாம் அழகான படங்களோடு இருக்கு. ஒரு நாளைக்கு ஒருகதைன்னு நீங்க தினம் அவனுக்கு படத்தைக் காட்டி ஒரு கதை சொல்லுங்க. கதைக்குக் கீழே மனனம் பண்ணுவதற்கு ஒரு வசனம் கொடுத்திருக்காங்க. அதை சொல்லிக் கொடுத்து, மனப்பாடம் செய்ய வையுங்க. அண்ணி! பாராட்டுக்கள் தான் சிறுபிள்ளைகளை நம் வழிக்கு கொண்டு வரும் தாரக மந்திரம். அவனுடைய செயல்களை பாராட்டுங்க. ஞாயிறு பள்ளிக்கு அனுப்புங்க.”

“பக்கத்தில் அவன் வயதையொத்த பையன்கள் இல்லையா?”

“நாலு வீடு தள்ளி சுரேஷ்ன்னு ஒரு பையன் இருக்கான். அவன் கார்ப்பரேஷன் ஸ்கூல்ல படிக்கிறான். அவனோட இவன் சேரணுமே.” அங்கலாய்த்தாள்

“நீங்க போற சர்ச்சிக்குத் தானே அவங்களும் வர்றாங்க. நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்த அவங்க உங்களைத் தேடி வர மாட்டாங்க. நீங்கதான் இறங்கிப் போகணும். முதல்ல அவங்களை பார்த்து சிரிங்க. அப்புறம் நலம் விசாரிங்க. அவங்க வீட்டுக்குப் போய் பேசுங்க. அவங்க பையன வீட்டுக்குக் கூப்பிட்டு மாலையில ஜாஷ்வாவோட விளையாட வையுங்க. இரண்டு பேரும் சேர்ந்தே சன்டே கிளாஸ் போக 'ஆரம்பிச்சிடுவாங்க.

டி.வி.தொடர் முடிய நளினி எழும்பி வந்தாள். “அத்தை எங்க அம்மாவுக்கு அணுகுமுறையே தெரியாது. எப்பப்பார்த்தாலும் அடக்கு முறைதான். அதைச் செய்யாதே இதைச்செய்யாதே' ன்னு சின்னப்பிள்ளையில சினிமாவுக்கு கூட்டிட்டுப் போனாங்க. இப்ப...அதல்லாம் இல்லை. நானும் சினிமா பார்க்கணும்ன்னு சொல்லல்லை. ஆனா...... சீரியல் கூடவா பார்க்கக்கூடாது?நல்ல கருத்துக்கள். “இந்த நாடகங்கள்ள இருக்கு அத்தை...... “அப்படியா நளினி! இப்ப நீ பார்த்துக் கிட்டிருந்தையே அது என்ன நாடகம்?” “சலங்கை ஒலி. அதுல குடும்ப கெளரவத்தைக் காப்பாற்ற ஒரு பொண்ணு படாதபாடு படறா அத்தை” “சரி. இன்னைக்கு வேதப்பகுதி என்ன படிச்ச?” கொஞ்ச நேரம் யோசித்தவர். “லேவியராகமம் படிச்சேன் அம்மாவும், அக்காவும் உயிரை எடுக்கிறாங்க. வேதத்தை முழுமையா படிக்கணுமாம். அதனால ஆதியாகமத்தில் இருந்து வாசிக்கத் தோடங்கியிருக்கேன். ஒரு நாளைக்கு ஒரு அதிகாரமே வாசிக்க முடியலை. என்னவோ பலி பலின்னு வருது.” “சின்னப்பிள்ளையா இருக்கிறப்பவே நீ வேதத்தை படிக்கத் தொடங்கியிருந்தால், இப்ப கஷ்டமே இருக்காது. ஆரம்பபள்ளியில் படிக்கும்போதே மாற்கு, லூக்கா, மத்தேயு நற்செய்தி நூல்களைப் படிச்சிருக்கணும். உயர் நிலைப்பள்ளியில் அடியெடுத்து வைத்தும். ஆதியாகமம் யாத்திராகமம், 1,2 சாமுவேல், 1,2, இராஜாக்கள், 1,2 நாளாகமம், ரூத், எஸ்தர், தானியேல் போன்ற வேதப்பகுதிகளையெல்லாம் படிக்கவும், அது குறித்து உரையாடவும் வேண்டும்.

சங்கீதம், நீதிமொழிகள், யோவான் நற்செய்தி நூலில் வசனங்கள் ஆகியவற்றை மனனம் செய்ய வேண்டும். பவுலின் நிரூபங்கள், வேதப்பகுதி முழுவதையும் வாசிக்கவும், தியானிக்கவும் வேண்டும். இந்த நாடகத்தை விட அருமையான வாழ்க்கை வரலாறு. பெண்களின் வீரம், தியாகம் எல்லாமே இருக்கு” 

“அத்தை! தியானிக்கிறதுன்னா..... கண்ணை மூடி உட்கார்ந்துக்கணுமா?”

வேதப்பகுதியை வாசிச்சு இந்தப் பகுதியின் கருத்து முழுவதையும் உணர்ந்து, எனக்கு இந்தப் பகுதியிலிருந்து என்ன பாடம் கடவுள் கற்றுத் தருகிறார்ன்னு யோசிக்கணும். ஆலோசனை இருக்கலாம் எச்சரிப்பு இருக்கலாம். ஆசீர்வாதமும் இருக்கலாம். அதை சிந்திக்கணும். அதுதான் தியானம். அதனாலதான் பவுல் அடியார் தீமோத்தேயுவிற்கு எழுதிய கடிதத்தில் (2 தீமோ 3:16,17)

“வேத வாக்கியங்களல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கினறன. தேவனுடைய மனுஷன் தேறியவனாகவும் எந்த நற்கிரியையும் செய்ய தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக அவைகள் உபதேசத்துக்கும், கடிந்து கொள்ளுவதற்கும், சீர்திருத்தலுக்கும் நீதியை படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாய் இருக்கின்றன.” என எழுதுகிறார்.

“ஊழியக்காரங்க எல்லாம் வசனத்தை இந்த இடத்தில இருக்குன்னு சுட்டிக்காட்டி மனப்பாடமா சொல்றாங்களே. அது எப்படி அத்தை? இயேசு சாமி கொடுக்கிற அளவில்லா அறிவு. அப்படித்தான அத்தை?”

“எல்லாம் தேவ கிருபைதான். ஆனா சும்மா இருந்தா எல்லாமே கிடைச்சிராது. நாமும் முயற்சி பண்ணனும். ஒரு நாளைக்கு ஒரு” அதிகாரம் வாசித்தாலும், அதற்கு ஒரு தலைப்பு கொடுத்து பைபிளை வெள்ளப் பகுதியில் எழுதிக் கொள். ஒரு வசனத்தை குறித்து மனப்பாடம் பண்ணிக்க. உதாரணமாக லூக்கா முதல் அதிகாரத்திற்கு தரிசனங்கள்”ன்னு தலைப்பு கொடுக்கலாம். லூக்கா 1:37. “தேவானாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை.” என மனனம் செய். இப்படி ஏழு நாளும் மனனம் செய்தபின், ஏழாம் நாள் ஏழுவசனத்தையும் இடத்துடன் கூறிப்பார். நீ பெரிய ஊழியக்காரியா வந்திடுவ” சிரித்தபடி கூறினாள். சத்யப்பிரியா.

"அத்தை! போனவாரம். வாலிபர் சிறப்புக் கூட்டத்துக்கு போயிருந்தேன். செய்தி கொடுக்க வந்த சகோதரி சொன்னாங்க படிக்க ஆரம்பிக்கிறதுக்கு முன்னால் சங் 119:98,99,100 வசனங்களை வாசிக்கணுமாம். அதுல சத்ருவைக் காட்டிலும் அதாவது நம்மைத் தீய வழியில் “நடத்த வலை விரிக்கும் சாத்தானைக் காட்டிலும் ஞானம், நமக்குக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களை. காட்டிலும் அறிவு, முதியோர்களை காட்டிலும் ஞானம் பற்றி சொல்லியிருக்காம். நாம் வேதவாக்கியங்களுக்கு செவி கொடுத்து உரிமை பாராட்டி ஜெபித்தால் கிடைக்குமாம். அப்படியா அத்தை?” ஆவலோடு கேட்டாள்.

வேதத்தில் உள்ளதெல்லாம் சத்திய வார்த்தைகள்டா. நீ உரிமை பாராட்டி கேட்டால் கிடைக்கும். சாலொமோனை ஒத்த ஞானமுடையவன் சாலோமோனுக்கு முன்னும் பிறந்ததில்லை. பின்னும் பிறப்பதில்லை ன்னு வேதம் சொல்லுது. நாம் தேவனிடம் அது சரிதான் ஆண்டவரே! சாலொமோனை ஒத்த ஞானம் வேண்டாம்பா. சாலொமோனை காட்டிலும் அதிக ஞானத்தை தாரும்ன்னு கேட்கணும். விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.”

“நிஜமாவா அத்தை. நான் ஞானமுள்ளவளா வரணும், இனி வேதத்தை ஆராய்ந்து படிப்பேன். தேங்க்ஸ் அத்தை” சூரிய காந்தியாய் அவள் முகம் பிரகாசித்ததைக் கண்டு சரோஜா வியந்தாள்.

இதன் தொடர்ச்சி முற்பகல் செய்யின் பிற்பகல்..... என்ற தலைப்பில் உள்ளது.

இந்தக் கதை  மகிழம் பூ என்ற புத்தகத்திலிருந்து   Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.



Topics: Tamil Christian Story Mahizham Poo - Story

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download