எரியும் முட்செடிக்கு நடுவே மோசேக்கு தேவன் தோன்றி, எகிப்துக்குச் சென்று அடிமைகளாக இருக்கும் இஸ்ரவேல் புத்திரரை மீட்க சொல்லி ஆணையிட்டார்.
நான் யார்?
40 வருடங்கள் மேய்ப்பராக இருந்ததால், பார்வோனின் அரசவையில் சென்று பேசுவதற்கு மோசே தகுதியற்றவராக உணர்ந்தார். ஆனால் கர்த்தரோ நான் உன்னுடன் இருப்பேன் மற்றும் விடுவிக்கப்பட்ட இஸ்ரவேலர்கள் இதே மலையில் வந்து ஆராதனை செய்வார்கள் என்றும் உறுதியளித்தார். தேவன் யார் என்றும், மோசேயோடு என்ன உறவு என்பதை அறிவதும் மிகவும் முக்கியம்.
நம்பகத்தன்மை கேள்வி?
தேவன் அவரை அனுப்புகிறார், ஆனால் அவர்கள் தேவன் யார் என்று கேட்பார்கள். பார்வோனோ அல்லது எபிரேய அடிமைகளோ அவரை நம்ப மாட்டார்கள். ஒருவேளை, இஸ்ரவேலரால் தான் நிராகரிக்கப்பட்டதை மோசே நினைவுகூர்ந்திருக்கலாம். இப்படி சூழலில் தேவன் தனது தனிப்பட்ட பெயரை வெளிப்படுத்தினார்; "அதற்குத் தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார்"
(யாத்திராகமம் 3:14).
அவர்கள் நம்பவில்லை என்றால் என்ன:
மோசே இஸ்ரவேலின் மூப்பர்களைக் கூட்டி, தேவனால் அனுப்பப்பட்டவர் என்று தன்னை அடையாளம் காட்டும்படி கட்டளையிடப்பட்டார். மோசே விடுதலை மற்றும் வாக்குப்பண்ணப்பட்ட தேசம், ‘பாலும் தேனும் ஓடும் தேசம்’ என்ற செய்தியைக் கொடுப்பார். இஸ்ரவேலர்கள் தன்னை நம்புவார்களா என்று மோசேக்கு உறுதியாக தெரியவில்லை. தேவன் மூன்று அடையாளங்களைக் கொடுத்தார்: மோசே தனது கோலை தரையில் வைக்கும்போது, அது ஒரு பாம்பாக மாறும், மீண்டும் பாம்பின் வாலைப் பிடித்தால், அது ஒரு கோலாக மாறும். மோசேயின் எதிரிகள் வல்லமையற்றவர்களாக இருப்பார்கள் என்பதே இதன் பொருள். இரண்டாவதாக, அவன் தன் கையை தன் மடியில் போட்டு விட்டு திரும்ப எடுக்கும் போது அது வெண்குஷ்டம் பிடித்திருந்தது, அதுபோல் மீண்டும் செய்தபோது அது மீண்டும் சாதாரணமாகிவிடும். "இவ்விரண்டு அடையாளங்களையும் அவர்கள் நம்பாமலும், உன் வாக்குக்குச் செவிகொடமலும் இருப்பார்களானால், அப்பொழுது நீ நதியின் தண்ணீரை மொண்டு நிலத்தில் ஊற்றுவாயாக; நதியில் மொண்ட தண்ணீர் வெட்டாந்தரையிலே இரத்தமாகும் என்றார்" (யாத்திராகமம் 4:9).
திக்கு வாய் மந்த நாக்கு:
மோசே தன்னால் சரளமாகப் பேச முடியாது என தன் இயலாமையை வெளிப்படுத்தினான். ஆனால் அவன் வார்த்தைகளில் வல்லவன் என்று ஸ்தேவான் கூறுகிறான் (அப்போஸ்தலர் 7:33). மேய்ப்பனாக இருந்த நாற்பது வருடங்களில் அவனுடைய அசல் திறமையையும் சரளத்தையும் இழந்திருக்கலாம் அல்லது பொறுப்பிலிருந்து தப்பிக்க மோசே ஒரு சாக்குப்போக்கு சொல்லியிருக்கலாம். ஆனால் அனைத்தையும் சிருஷ்டித்தவர் அவனை கடிந்து கொண்டார்.
வேறு ஒருவர்:
மோசே இறுதியில் உண்மையான காரணத்திற்கு வந்தார். அப்போது தேவன் உதவிக்காக ஆரோனைக் கொடுத்தார்.
கீழ்ப்படிதல்:
ஆயினும் மோசே தேவனின் வல்லமைமிக்க தீர்க்கதரிசியாக ஆனார்.
நான் ஆட்சேபனை தெரிவிப்பதிலிருந்து கீழ்ப்படிதலுக்கு மாறிவிட்டேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்