24 மணிநேரமும் தடையற்ற சேவை என்பதாக ஒரு புகழ்பெற்ற வங்கியால் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. ஆனால் இரவு நேரத்தில் அந்த வங்கி இணைப்பை தொடர்பு கொண்டபோது; "வணக்கம், இரவு சற்று தாமதமாகிவிட்டது. எங்கள் சிஸ்டம் இப்போது தூங்குகிறது. மீண்டும் அதிகாலையில் இணைப்பிற்கு வரும்படி கேட்டுக்கொள்கிறோம். நன்றி" என 24 மணி நேரமும் சிறந்த சேவையை தருகிறோம் என வாடிக்கையாளர்களுக்கு உறுதியளித்த வங்கி சிறிது தோல்வியடைந்தது. அவர்களின் சிஸ்டம் சிறிது நேரம் தூங்க வேண்டும் போல.. அது நீண்ட தூக்கமோ அல்லது குறுகிய தூக்கமோ? ஆனால், தேவனைப் பற்றி வேதாகமம் என்ன கற்பிக்கிறது என்றால்; “இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை” (சங்கீதம் 121:4).
1) கழுகு போல:
ஒரு தாய் கழுகு தன் கழுகுக்குஞ்சுகள் பறக்கக் கற்றுக் கொள்ள வேண்டுமென்று கூட்டை அசைத்து தள்ளுகிறது. ஆனால் கழுகு விழுந்தால், தாய் கழுகு மிகவும் சுறுசுறுப்பாக அது தரையைத் தொடுவதற்கு முன்பே கீழே விழுந்து தன் கழுகுக்குஞ்சுகளை தூக்கிவிடும் (உபாகமம் 32:11). தேவனும் தம் மக்களை தாய் கழுகு போல பாதுகாக்கிறார்.
2) கண்மணியைப் போல:
மனிதர்கள் தங்கள் கண்களை மிகவும் பாதுகாக்கிறார்கள். தேவன் ஒவ்வொரு விசுவாசியையும் தன் கண்மணியைப் போல் கருதுகிறார் (உபாகமம் 32:10).
3) திரும்பி வரப் பண்ணுதல்:
ஏசாவின் கொலைவெறியில் இருந்து தப்பிக்க, யாக்கோபு தனது மாமாவான லாபானின் வீட்டிற்கு அதாவது பாதுகாப்பான இடத்திற்கு செல்ல தனது வீட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. வழியில், தேவன் அவனிடம், "நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பிவரப்பண்ணுவேன்; நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார்" (ஆதியாகமம் 28:15). ஆம், யாக்கோபு இருபது வருடங்களுக்குப் பிறகு தேவன் வாக்களித்தபடியே திரும்ப அதே இடத்திற்குத் திரும்பினான்.
4) ஆண்டு முழுவதும்:
தேவனின் வாக்குறுதி என்பது ஒரு நாள் அல்லது இரண்டு நாள் அல்லது ஒரு வாரம் மாத்திரம் அல்ல. வருஷத்தின் துவக்கமுதல் வருஷத்தின் முடிவுமட்டும் எப்பொழுதும் நம் தேவனாகிய கர்த்தரின் கண்கள் நம்மேல் இருக்கும் (உபாகமம் 11:12).
5) வருவதும் போவதும்:
மனிதர்கள் வீட்டை விட்டு வெளியில் செல்லாமல் இருப்பது மிக கடினம். நிச்சயமாக அனைவரும் வெளியே செல்ல வேண்டும், பின்பு வீடு திரும்பியே ஆக வேண்டும். ஆனால் இன்று உலகம் ஆபத்தான இடமாக மாறிவிட்டது. வெளியே சென்றவர்கள் திரும்பி வராத சூழ்நிலையும் காணப்படுகிறது. ஆனால், "கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்குங் காப்பார்" (சங்கீதம் 121:8) என்பதாக கர்த்தர் தம்முடைய பிள்ளைகளின் எல்லாப் பயணங்களிலும் பாதுகாப்பை உறுதி செய்திருக்கிறார்.
6) ஆலோசகர்:
"நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்" (சங்கீதம் 32:8) என்று நமக்கு வழிகாட்டுவதாக ஆண்டவர் வாக்களிக்கிறார். ஆம், "கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்; துன்மார்க்கரின் வழியோ அழியும்" (சங்கீதம் 1:6).
7) அக்கினி மதில்:
தேவனின் கண்கள் தம் மக்களை ஒரு அக்கினி மதில் போலப் பாதுகாக்கின்றன (சகரியா 2:5).
தேவனின் வாக்குறுதிகள் வெற்று வார்த்தைகள் அல்ல, ஆனால் நம் அன்றாட வாழ்க்கையில் அனுபவிக்கக்கூடிய உண்மை.
நம்மைக் கண்காணிப்பதற்காக நான் தேவனுக்கு நன்றியுள்ளவனாக / நன்றியுள்ளவளாக இருக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்