சத்தியத்தைக் கேட்க விரும்புவோருக்கு மென்மையாக பதிலளிக்க தேவன் கூறியுள்ளார். இருப்பினும், சில சந்தர்ப்பங்களில் மௌனமாக இருப்பது தங்கத்திற்கு / இரத்தினத்திற்கு நிகராக, மதிப்புமிக்கதாக கருதப்படுகிறது. சில சூழல்களில் பதில் சொல்வது ஞானமான செயலும் அல்ல. தானியேலின் மூன்று நண்பர்கள் தாங்கள் அக்கினிச் சூளையில் எறியப்படுவோம் என்று அறிந்தும், நேபுகாத்நேச்சார் செய்த உருவத்தை ஏன் வணங்கக்கூடாது என்பதை விளக்க மறுத்தனர்; "சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் ராஜாவை நோக்கி: நேபுகாத்நேச்சாரே, இந்தக் காரியத்தைக் குறித்து உமக்கு உத்தரவுசொல்ல எங்களுக்கு அவசியமில்லை" (தானியேல் 3:16).
சத்தியம் தெரியும்:
கல்வியில் நிபுணர்களான தானியேலையும் அவனது நண்பர்களையும் நெபுகாத்நேச்சார் அறிந்திருந்தான். நேபுகாத்நேச்சார் ஒரு கனவு கண்டான், அதை அவன் மறந்துவிட்டான். கனவையும் அதன் விளக்கத்தையும் சொன்னவர் தானியேல். உண்மையான தேவனை அறிந்த பிறகும், பத்து கட்டளைகளை மீறி, நேபுகாத்நேச்சார் தங்கத்தாலான ஒரு பெரிய உருவத்தை உருவாக்கினான்.
தவறான புரிதல்:
நேபுகாத்நேச்சார் ஒரு நித்திய ராஜாவாக இருக்க விரும்பினான். தாழ்ந்த ராஜ்ஜியங்கள் தனக்குப் பின்வரும் என்பதை இந்த வெள்ளி, வெண்கலம், இரும்பு மற்றும் களிமண் ஆகிய உலோகங்கள் உணர்த்துவதாக தானியேல் சொன்ன சொப்பனத்தின் விளக்கத்தை தவறாக புரிந்துக் கொண்டான் எனலாம். தங்கத்தின் முழு உருவத்தை உருவாக்குவதன் மூலம், நேபுகாத்நேச்சார் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்யப் போவதாக நினைத்தான்.
புறக்கணிக்கப்பட்ட தேவன்:
தேவனை நிராகரித்ததன் மூலம், நேபுகாத்நேச்சார் ஒரு மூடன் ஆனான் என்றே சொல்ல வேண்டும். மூன்று யூத இளைஞர்களும் இதை நன்கு புரிந்துகொண்டனர். கடவுள் நம்பிக்கை இல்லாதபோது, ஒரு நபர் தனது கண்ணியத்தை இழந்து முட்டாளாக மாறுகிறார். "மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடாதே; கொடுத்தால் நீயும் அவனைப் போலாவாய்" (நீதிமொழிகள் 26:4).
வீண்:
நேபுகாத்நேச்சார் தன்னை ஞானி என்று நினைக்க யூத இளைஞர்கள் விரும்பவில்லை. ஆம், முட்டாள் ராஜாவுக்கு அவர்கள் பதிலளித்தால், அவன் தன்னை ஞானி என்று எண்ணிக் கொள்வானே; "மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடு; கொடாவிட்டால் அவன் தன் பார்வைக்கு ஞானியாயிருப்பான்" (நீதிமொழிகள் 26:5).
பன்றிக்கு முன் முத்து:
உங்கள் முத்துக்களைப் பன்றிகள்முன் போடாதேயுங்கள் என்று ஆண்டவராகிய இயேசு எச்சரித்தார். ஆம், அதற்காக பன்றி பாராட்டப் போவதில்லை, மாறாக அவைகளை மிதித்து திரும்பிக் கொடுத்தவரையே தாக்கும் (மத்தேயு 7:6).
பதிலளிக்க மறுத்தல்:
எசேக்கியா ரப்சாக்கேக்கு பதிலளிக்கவில்லை, கர்த்தராகிய இயேசு தனக்கு விரோதமாக எழும்பினவர்களுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை (மத்தேயு 26:62; யோவான் 19:9).
பாடுகளை ஏற்றுக்கொள்:
மூன்று யூத வாலிபர்கள் தங்கள் விசுவாசத்திற்காக மரணத்தைக் கூட அனுபவிக்கத் தயாராக இருந்தனர். ஆனால் தேவன் அவர்களை அற்புதமாக நெருப்பிலிருந்து விடுவித்தார்.
எப்போது, எப்படி பதிலளிக்க வேண்டும் என்பதை நான் புரிந்து கொள்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்