தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி பலரது கண் முன்னால் கொடூரமாகக் கத்தியால் குத்தப்பட்டு, பின்னர் பெரிய கல்லை எடுத்து அவளின் தலைமேல் போட்டும் கொடூரமாக அவளது ஆண் நண்பரால் கொல்லப்பட்டாள். அங்கிருந்த பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர், ஒருவரும் காப்பாற்ற முன்வரவில்லை; அனைவரின் முன்பும் சம்பவ இடத்திலேயே அப்பெண் இறந்தாள். 20 வயதான இரக்கமற்ற கொலையாளி போலிசாரால் பிடிபட்டான், அவனுக்கு அதைக் குறித்து வருத்தமோ ஒரு மனமாற்றமோ இல்லை (தி ஹிந்துஸ்தான் டைம்ஸ் மே 29, 2023).
தேவையின் பேரில் காதல்?
சிறுமி தன்னை புறக்கணித்ததாக அந்த இரக்கமற்ற கொலையாளி கூறினான். அதாவது அந்த இளைஞனுக்கு தான் இந்த பிரபஞ்சத்தின் அதிபதி என்ற எண்ணம். எல்லா மக்களும் தனது கட்டளைகளுக்குதான் கீழ்ப்படிய வேண்டும்; ஒரு பெண்ணை தன்னை காதல் செய் என்று சொன்னால் அவள் செய்ய வேண்டும் என்று அவன் விரும்பினான்.
பெண்களுக்கு என்று சுயமரியாதை இல்லை:
ஒவ்வொரு ஆணும் பெண்ணும் தேவனின் சாயலில் படைக்கப்பட்டவர்கள். கிறிஸ்து அனைவருக்காகவும் மரித்தார்; ஆகவே ஒவ்வொரு தனிப்பட்ட நபருமே மரியாதைக்கு தகுதியானவர்கள். கொலையாளியின் உலகக் கண்ணோட்டம் எப்படியெனில் பெண்களுக்கு என்று தனி ஆளுமையோ அல்லது தெரிவு சுதந்திரமோ இல்லை மற்றும் ஆண்களுக்கு கட்டுப்பட்டு தான் பெண் இருக்க வேண்டும் என்ற எண்ணம். கொலையாளியை பொறுத்தவரை இறந்த பெண் தன்னிடம் முழுமையாக சரணடைந்து இருப்பதையே விரும்பினான்.
காமம் மற்றும் ஆவேசம்:
அன்பு தன்னைத்தானே கொடுப்பது மற்றும் தியாகம் செய்வது. ஆனால், காமமோ சுயத்தை திருப்திப்படுத்துகிறது. எனவே, காமம் என்பது நபர் அல்லது பொருளை வெறித்தனமாகவும் தன் உடைமையாகவும் நினைக்க வைக்கிறது. துரதிர்ஷ்டவசமாக, இன்றைய இளைஞர்களுக்கு காமத்திற்கும் காதலுக்கும் வித்தியாசம் தெரிவதில்லை.
வெற்றிடம்:
ஒருவேளை, இந்த சிறுவன் தன் வாழ்க்கையில் ஒரு வெற்றிடத்தை உணர்ந்திருக்கலாம். அந்த வெற்றிடத்தை வேறொருவர் நிரப்ப வேண்டும் என்று நினைத்தான். வளர்ப்பு நாயைப் போல் ஒரு பெண் தன் விருப்பத்தை எல்லாம் செய்து என்ன விலை கொடுத்தாலும் அவனை மகிழ்விப்பாள் என்று நினைத்தான். அந்தப் பெண்ணுக்கு விருப்பு வெறுப்புகள் இருந்ததால், அவனுடன் பழக வேண்டாம் என்று முடிவு செய்தபோது, அவனுக்கு கோபமும், கசப்பும் மற்றும் பைத்தியமும் ஏற்பட்டது.
அதிகாரமும் வன்முறையும்:
தாவீது ராஜாவின் மகன்களில் ஒருவனான அம்னோன், தாமரின் மீதான தனது காமத்தை அவள் மீதான காதல் என்று தவறாகப் புரிந்துகொண்டான். தந்திரமாக தனது வீட்டிற்கு வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்தான். கற்பழிப்புக்குப் பிறகு வெறித்தனமான காமம் அடங்கியதும், அவள் அவனுக்கு அருவருப்பாக மாறினாள் (2 சாமுவேல் 13: 1-19). அழுதுகொண்டே கெஞ்சும் தாமார் அவனது வீட்டிலிருந்து தூக்கி எறியப்பட்டாள். பின்னர் அம்னோன் தாமாரின் சகோதரன் அப்சலோமினால் கொல்லப்பட்டான் (2 சாமுவேல் 13:29). ஆம், காமம் மரணத்தில் முடிவடைந்தது.
உண்மையான அன்பு:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தன்னை தானே தியாகம் செய்தார், தன்னையே கொடுக்கும் அன்பை வெளிப்படுத்தினார். ஆம், சரியான மனித உறவுகளைப் பெற அவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேவனின் உண்மையான அன்பை நான் புரிந்துகொண்டேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்